என் மலர்
சினிமா செய்திகள்
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் ஒருவர் தன்னுடைய கணவருக்கு தானே முடிவெட்டி அழகு பார்த்திருக்கிறார்.
கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் சலூன் கடைகள் திறக்கப்படாததால் பலர் முடி வெட்ட முடியாமல் தவித்தனர். தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்பட்டு சலூன் கடைகள் திறக்கப்பட்டபோதிலும் கொரோனா வைரஸ் பயம் காரணமாக பலர் சலூன் கடைகளுக்கு செல்வது இல்லை.

இந்த நிலையில் பொதுமக்கள் மட்டுமின்றி பிரபலங்களும் கூட தங்களது தலைமுடியை தாங்களே வெட்டிக் கொண்டும் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு முடிவெட்டி விடும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஒருவர் தனது கணவருக்கு முடி வெட்டி விட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகையும், ஐபிஎல் பஞ்சாப் அணியின் உரிமையாளருமான நடிகை பிரீத்தி ஜிந்தா தனது கணவருக்கு தானே முடிவெட்டி உள்ளார். மிகவும் நேர்த்தியாக தனது கணவருக்கு தான் முடி வெட்டிவிட்டதாகவும் தற்போது அவரை பார்ப்பதற்கு மிகவும் புத்துணர்ச்சியாக இருப்பதாகவும் பிரீத்தி ஜிந்தா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகையாக இருக்கும் ஹன்சிகா, எனக்கு கல்யாணமா? யார் அவர் சொல்லுங்க என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
நடிகை ஹன்சிகா தற்போது சிம்புவுடன் இணைந்து 'மகா' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இது ஹன்சிகாவின் 50வது படமாகும். இ

இந்நிலையில் நடிகை ஹன்சிகாவிற்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் என்று ட்விட்டரில் செய்தி பகிரப்பட்டது. அதற்கு 'அடக்கடவுளே ! அவர் யார் ?' என்று ஹன்சிகா கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு ஒருவர் ''ஏன் என்கிட்ட சொல்லல''னு கேட்டதற்கு 'எனக்கே இப்போ தான் தெரியும்' என்று ஹன்சிகா பதிலளித்துள்ளார்.
நடிகர் சந்தானம் தனது ரசிகர் மன்ற நிர்வாகியின் தந்தை மரணத்துக்கு நேரில் சென்று இறுதி மரியாதை செய்துள்ளார்.
காமெடி நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சந்தானம். இவரது நடிப்புக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. சமீபத்தில் இவரது நண்பர் டாக்டர் சேதுராமன் மறைவின் போது அவரது உடலை சுமந்து சென்றார். தற்போது ரசிகர் ஒருவரின் தந்தை மரணத்தின் இறுதி சடங்கில் கலந்துக் கொண்டுள்ளார் சந்தானம்.
சந்தானத்தின் ரசிகர் மன்ற தலைவர் குமாரவேலின் தந்தை உடல்நலக் குறைவால் ஸ்ரீபெரும்புதூரில் நேற்று முன் தினம் மரணமடைந்தார். ரசிகரின் தந்தை மரணமடைந்த செய்தியை அறிந்த சந்தானம் நேரில் சென்று அவருக்கு இறுதி மரியாதை செய்துள்ளார்.

ரசிகர் வீட்டில் நிகழ்ந்த துக்கத்தில் கலந்து கொண்டு இறுதி மரியாதை செய்தது அப்பகுதி மக்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் ரசிகரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து திரும்பியுள்ளார் சந்தானம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் புதிய சாதனை படைத்துள்ளது.
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
காதலர் தினத்தன்று மாஸ்டர் படத்தின் சிங்கிள் டிராக்காக ’குட்டி ஸ்டோரி’ எனும் பாடலை படக்குழு வெளியிட்டது. அனிருத் இசையில் விஜய் பாடிய இப்பாடல் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. யூடியூபில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
AN ABSOLUTELY PHENOMENAL #60MillionViewsForKuttiStory, NANBA! 😎🥁
— Sony Music South (@SonyMusicSouth) June 11, 2020
Konjam chill pannu , Maapi with #Thalapathy's #KuttiStory now🥳➡️https://t.co/GEbmVK0O1X@anirudhofficial@Dir_Lokesh@Jagadishbliss@Lalit_SevenScr@XBFilmCreators@Arunrajakamaraj@filmmaker_logi#Masterpic.twitter.com/9Q52a1IEtr
தற்போது இந்தப் பாடல் யூடியூபில் 60 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதை சோனி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அனுசரண் இயக்கத்தில் யோகிபாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகி வரும் ‘பன்னிகுட்டி’ படத்தின் முன்னோட்டம்.
அனுசரண் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பன்னிகுட்டி. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கருணாகரன், யோகிபாபு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சிங்கம்புலி, திண்டுக்கல் லியோனி, டிபி.கஜேந்திரன், லட்சுமி ப்ரியா, ராமர், தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றனர்.

முற்றிலும் கிராமிய பின்னணியில் இப்படம் உருவாகி உள்ளது. தற்சார்பு பொருளாதாரத்தையும், சுயசார்பு வாழ்க்கையையும் வலியுறுத்தும் வகையில் முழுநீள காமெடி படமாக உருவாகி இருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் கே இசையமைத்துள்ளார். சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வலிமை படத்தில் நடித்து வரும் அஜித், அடுத்த படத்தில் தனது பேவரைட் இயக்குனருடன் இணைந்து பணியாற்ற உள்ளாராம்.
`குறும்பு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். தொடர்ந்து, `அறிந்தும் அறியாமலும்', `பட்டியல்', `சர்வம்' உள்ளிட்ட படங்களை இயக்கினார். பின்னர் அஜித்தை வைத்து `பில்லா', `ஆரம்பம்' என அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். கடைசியாக `யட்சன்' படத்தை இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து மூன்று வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்த விஷ்ணுவர்தன், தற்போது இந்தியில் ஷேர்ஷா படத்தை இயக்கி இருக்கிறார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், அஜித்தின் 61-வது படத்தை விஷ்ணுவர்தன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் அஜித்துக்கு, விஷ்ணுவர்தன் போனிலேயே கதை சொன்னாராம். இந்தக்கதை அஜித்துக்கு மிகவும் பிடித்திருந்ததாம். இதனால் அஜித்-விஷ்ணுவர்தன் கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அஜித் தற்போது வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடிக்கிறார். கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்கும் வரை படத்தின் பணிகளை தொடங்க வேண்டாம் என படக்குழு முடிவு செய்துள்ளது.
தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படம் குறித்த சுவாரஸ்ய தகவலை இயக்குனர் செல்வராகவன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான படம் துள்ளுவதோ இளமை. தனுஷ் நாயகனாக அறிமுகமான இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஷெரின் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை கஸ்தூரி ராஜா இயக்கியதாகவே படத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்.
ஆனால் படத்தின் வெற்றிக்குப் பின் செல்வராகவன் அளித்த பேட்டியில், படத்தை தான் இயக்கியதாகவும் விநியோகஸ்தர்களிடம் விற்பதற்காகவே அப்பாவின் பெயரை பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார். 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம்தான் தனுஷ் - செல்வராகவன் இருவருமே தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்கள்.

இந்நிலையில் செல்வராகவன் தனது முதல் படமான துள்ளுவதோ இளமை ரிலீசான போது நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது: 'துள்ளுவதோ இளமை' வெளியான போது முதல் ஷோ பார்க்க தியேட்டருக்குப் போனேன். அப்போது இந்தப் படம் பிளாப் என்றும், அடுத்த வாரம் டிவில வரும் பார்த்துக் கொள்வோம் எனவும் ஒருவர் சொன்னதைக் கேட்டு மனம் நொந்துபோனேன். அப்படியே வீட்டுக்கு சென்று தூங்கிவிட்டேன்.
மாலையில் உதவி இயக்குனர் போனில் என்னை அழைத்து சார் உங்க படம் ஹவுஸ்புல் சார் என்றார். வேறு ஏதாவது படமா இருக்கும் என சொன்னேன். நீங்க வாங்க சார் என்றார். பின்னர் தியேட்டருக்குப் போய் பார்த்தேன். டிக்கெட் வாங்க பெரிய கியூ நின்றது. பெரும் பண நெருக்கடிக்கு இடையில் தான் அந்தப் படம் வெளியானது". இவ்வாறு செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நிறவெறியால் நடந்த படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கவிஞர் வைரமுத்து பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில் மின்னியாபொலிஸ் நகரில் கறுப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர் வெள்ளை இன போலீஸ் அதிகாரிகள் பிடியில் கடந்த மாதம் 25-ம் தேதி கொல்லப்பட்ட சம்பவம் அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நிறவெறியால் நடந்த இந்த படுகொலைக்கு எதிராக இந்திய திரைப்பிரபலங்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் கவிஞர் வைரமுத்து நிறவெறிக்கு எதிராக பாடல் ஒன்றை எழுதி உள்ளார். இந்த பாடலுக்கு ரமேஷ் தமிழ்மணி என்பவர் இசையமைத்துள்ளார்.
பாடலில் வைரமுத்து எழுதியுள்ள வரிகள் பின்வருமாறு: “காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை என்னால் மூச்சு விட முடியவில்லை. என் காற்றின் கழுத்தில் யார் கால் வைத்து அழுத்துவது, சுவாசக்குழாயில் யார் சுவர் ஒன்றை எழுப்புவது, காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளைஎன்னால் மூச்சுவிட முடியவில்லை.
நீங்கள் பகல் நாங்கள் இரவு
— வைரமுத்து (@Vairamuthu) June 10, 2020
இரண்டும் இல்லையேல் காலமே இல்லை.
காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை#ICantBreathe#BlackLivesMatterhttps://t.co/suYhtqg7bs
எத்தனை காலம் விலங்குகள் இறுகும்? எத்தனை காலம் நுரையீரல் நொறுங்கும்? ஆளைப் பார்த்து மழையும் பெய்யுமா? தோலைப் பார்த்துக் காற்று வீசுமா? காக்கையும் உயிரினம் கருமையும் ஒரு நிறம் எல்லா மனிதரும் ஒரே தரம் எண்ணிப்பாரு ஒரு தரம். மாளிகை நிறத்தை மாற்றுங்கள் ஒரு பாதியில் கறுப்பை தீட்டுங்கள். நீங்கள் பகல் நாங்கள் இரவு, இரண்டும் இல்லையேல் காலமே இல்லை. காற்றுக்கில்லை கறுப்பு வெள்ளை என்னால் மூச்சு விட முடியவில்லை” இவ்வாறு வைரமுத்து எழுதி உள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல உதவியாக நடிகர் அமிதாப் பச்சன் தனது சொந்த செலவில் 6 விமானங்களை ஏற்பாடு செய்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வேலையிழந்து வேறு மாநிலங்களில் சிக்கித்தவித்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மத்திய-மாநில அரசுகள் பேருந்துகள் மற்றும் ரெயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றன.
இதுதவிர பிரபலங்கள் பலரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல உதவி வருகின்றனர். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கித் தவித்து வரும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு விமானத்தில் அழைத்து செல்ல சிறப்பு ஏற்பாடு செய்துள்ளார்.

அதன்படி மும்பையில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி, பிரயாக்ராஜ், கோரக்பூருக்கு தலா 2 விமானங்கள் என மொத்தம் 6 விமானங்களில் 1,547 தொழிலாளர்கள் அழைத்து செல்ல அமிதாப் பச்சன் ஏற்பாடு செய்துள்ளார். இதில் நேற்று விமானங்கள் மூலம் தொழிலாளர்கள் அழைத்து செல்லப்பட்ட நிலையில், மீதமுள்ளவர்கள் இன்று (வியாழக்கிழமை) விமானங்களில் சொந்த ஊருக்கு பயணிக்க உள்ளனர்.
ஏற்கனவே கடந்த மாதம் மும்பையில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பி வைக்க அமிதாப் பச்சன் 10 பஸ்களை ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் மறைவிற்கு நடிகர் ஜெயம் ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான ஜெ.அன்பழகன் உடல்நலக் குறைவால் நேற்று மரணமடைந்தார். கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி மரணமடைந்ததால் அவரது உடல் தமிழக சுகாதாரத்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டு கண்ணம்மாபேட்டையில் அடக்கம் செய்யப்பட்டது.
மறைந்த ஜெ.அன்பழகன் அரசியலைத் தாண்டி சினிமாவில் தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக இருந்தவர். எனவே திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவி இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: "திரு J.அன்பழகன் அவர்களது மறைவு செய்தி கேட்டு கடும் துயருற்றேன். அவர் ஒரு நம்பிக்கை தரும் அரசியல் தலைவர் மட்டுமல்ல, நல்லிதயம் கொண்ட, மனிதம் போற்றும் மிகச்சிறந்த மனிதர்.
மக்களுக்காகவே தன் வாழ்வை அர்பணித்து வாழ்ந்தவர். எனது திரைப்படம் “ஆதிபகவன்” படத்தை தயாரித்தபோது, விலைமதிப்பற்ற மிகச்சிறந்த நேரத்தை அவருடன் கழித்திருக்கிறேன். அந்த நினைவுகள் எப்போதும் மனதில் இனிமையானதாக நீங்காது இருக்கும். அவரோடு உரையாடியபோது கலை மீதும் திரைப்படங்கள் மீதும் அவரது பார்வை பலமுறை என்னை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

பெருமை மிக்க அவரது அரசியல் பணிகள் மற்றும் அயராத மக்கள் பணிகள் மேலும் அவரது திரைப்பணிகளுக்காகவும் என்றென்றும் மக்கள் மனதில் நீங்காது அவர் குடியிருப்பார் என்பதில் ஐயமில்லை. கடும் துயர் மிக்க இந்த covid-19 சூழலில் அவரது உடல்நலத்தையும் பொருட்படுத்தாது அவர் மக்கள் பணிகளில் தொடர்ந்து இயங்கியது அவரது மனிதத்தை என்னென்றும் சொல்லும்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ஆதிபகவன் படத்தை ஜெ.அன்பழகன் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் கீர்த்தி சுரேஷ்காக மூன்று பிரபல நடிகர்கள் இணைந்து இருக்கிறார்கள்.
ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் பெண் குயின். இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய ஸ்டோன் பென்ச் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் டீசர் 2 நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 3 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் அமேசான் பிரைமில் வரும் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில், படத்தின் டிரெய்லர் நாளை மதியம் 12 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
பெண்குயின் படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் தனுஷ் வெளியிடுகிறார். தெலுங்கு டிரெய்லரை நானியும் மலையாளத்தில் மோகன்லாலும் வெளியிட இருக்கிறார்கள்.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யாராயின் முன்னாள் மேனேஜர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மும்பை மலாட் என்ற பகுதியில் 14-வது மாடியில் திஷா ஷாலியன் என்ற இளம்பெண் வசித்து வந்தார். இவர் நேற்று மாலை திடீரென 14-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
திஷா ஷாலியன் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். தற்கொலை குறித்த கடிதம் எதுவும் இல்லை கிடைக்கவில்லை என்றும் போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட திஷா ஷாலியன், நடிகை ஐஸ்வர்யா ராய், வருண் ஷர்மா, சுஷாத் போன்ற பாலிவுட் பிரபலங்களுக்கு மேனேஜராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு ஐஸ்வர்யாராய் உள்பட பாலிவுட் பிரபலங்கள் தங்களது அதிர்ச்சியை தெரிவித்துள்ளனர்.






