என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    குடும்ப படத்தை வெளியிட்ட மோகன்லாலுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களையும் லைக்குகளையும் குவித்து வருகிறார்கள்.
    ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா மற்றும் பலர் நடிக்க 2013ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து பெரும் வெற்றியையும், வசூலையும் குவித்த படம் 'த்ரிஷ்யம்'. இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் ஆனது. இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த மாதம் பூஜையுடன் கொச்சியில் ஆரம்பமானது.

    மோகன்லால், அவரது மனைவியாக மீனா, மகள்களாக ஹன்சிபா ஹாசன், எஸ்தர் அலி ஆகியோர் முதல் பாகத்தில் நடித்தனர். இரண்டாம் பாகத்திலும் அவர்களே நடிக்கிறார்கள். கேபிள் டிவி ஆபரேட்டர் ஜார்ஜ் குட்டி ஆக மோகன்லால், அவரது மனைவி ராணி ஜார்ஜ் ஆக மீனா இரண்டாம் பாகத்திலும் அதே கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

    த்ரிஷ்யம் புகைப்படம்

    'த்ரிஷயம் 2'வின் ஜார்ஜ் குட்டி குடும்பப் புகைப்படத்தை மோகன்லால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். அவருடைய ரசிகர்கள் அதற்கு லைக்குகளையும் வாழ்த்துகளையும் குவித்து வருகிறார்கள். 
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, கொடூரம்... ஆனால் ரசித்தேன் என்று கூறியுள்ளார்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. செவன் ஸ்க்ரீன் சார்பில் லலித் குமார் வெளியிடும் இந்தப் படத்தின் பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டாலும், கொரோனா அச்சுறுத்தலால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. பொங்கலுக்கு வெளியிட படக்குழு தயாராகி வருகிறது.

     இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள முதல் படம் இதுவாகும்.  'மாஸ்டர்' படம் குறித்து விஜய் சேதுபதி கூறியிருப்பதாவது: "எல்லோருக்குள்ளும் அழுக்கு இருக்கிறது. அதை ஒழிக்க எல்லோருக்கும் வழிகிடைக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒருவர் வில்லனாக நடிக்கும் போது அந்த அழுக்கை வெளியே கொண்டு வர வழி கிடைக்கிறது. 

    விஜய் சேதுபதி - விஜய்

    நான் கொடூரமான கேங்க்ஸ்டராக நடிக்கிறேன். ஆனால் அதை முழுக்க ரசித்து நடித்தேன்" இவ்வாறு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
    சாய் எம்.கே.செல்வம் இயக்கத்தில் புதுமுகங்கள் ஜிப்ஸி ராஜ்குமார், ஹேமா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் பச்சைக்கிளி படத்தின் முன்னோட்டம்.
    பெண்கள் எளிதாக ஏமாற்றப்பட்டு சீர்குலைத்து கொல்லப்படுவதை கருவாக வைத்து, ‘பச்சைக்கிளி’ என்ற பெயரில் ஒரு புதிய படம் உருவாக்கப்பட்டுள்ளது. கிராமத்து பின்னணியில் தயாராகியிருக்கும் இந்த படத்தை சாய் எம்.கே.செல்வம் இயக்கியிருக்கிறார். 

    படத்தை பற்றி அவர் கூறியதாவது: “பெண்கள் படும் துன்பங்களையும், துயரங்களையும் அடிப்படையாக வைத்து படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், சில காட்சிகளில் நெகிழ்ந்துவிட்டார்கள். இறுதி காட்சியில் நல்ல கருத்து சொல்லப்பட்டுள்ளது என்று பாராட்டினார்கள்.

    விரைவில் திரைக்கு வரயிருக்கும் இந்த படத்தில் புதுமுகங்கள் ஜிப்ஸி ராஜ்குமார், ஹேமா, பாலூர் பாபு மற்றும் முத்துக்காளை, நெல்லை சிவா ஆகியோர் நடித்துள்ளனர். எல்.கே.பாட்ஷா தயாரித்து இருக்கிறார்.”
    சுசீந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக இளம் நடிகை ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வெளியானது. அதன்பிறகு வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தில் நடித்து வந்தார். இதன் படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே தொடங்கியது. பெரும்பகுதி காட்சிகளை படமாக்கி உள்ளனர். அதன்பிறகு கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. விரைவில் மீண்டும் இதன் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

    இந்தநிலையில் சிம்பு இன்னொரு புதிய படத்துக்கு ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா, பாயும் புலி உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான சுசீந்திரன் டைரக்டு செய்கிறார். திரு ஒளிப்பதிவு செய்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. 

    நிதி அகர்வால்

    இதில் கதாநாயகியாக நடிக்க நிதி அகர்வால் தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஜெயம்ரவி ஜோடியாக பூமி படத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு திண்டுக்கல்லில் தொடங்குகிறது. 40 நாட்களில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்து உடனடியாக திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்துக்காக சிம்பு கடும் உடற்பயிற்சி செய்து எடையை குறைத்து இருக்கிறார்.
    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 25-வது ஜேம்ஸ் பாண்ட் படமான ‘நோ டைம் டூ டை’ படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
    ஹாலிவுட்டில் 1960களில் தொடங்கிய ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 24 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வந்துள்ளன. தற்போது 25-வது ஜேம்ஸ் பாண்ட் படமாக ‘நோ டைம் டூ டை’ தயாராகிறது. இதில் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் டேனியல் கிரெய்க் நடிக்கிறார். இதுவரை 4 தடவை இந்த வேடத்தை ஏற்றுள்ள அவருக்கு இது ஐந்தாவது படம். இது தனது கடைசி படம் என்றும், இனிமேல் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க மாட்டேன் என்றும் டேனியல் கிரெய்க் அறிவித்து உள்ளார். எனவே இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 

    நோ டைம் டூ டை பட போஸ்டர்

    படத்தை கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கொரோனா பரவலால் லண்டனில் நவம்பர் 12-ந்தேதியும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்திலும் நவம்பர் 25-ந்தேதியும் வெளியாகும் என்று தள்ளி வைத்தனர். ஆனால் கொரோனா பரவல் நீடிப்பதாலும் பல நாடுகளில் தியேட்டர்களை திறக்காததாலும் நோ டைம் டூ டை படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 2-ந்தேதி ரிலீசாகும் என்று தற்போது அறிவித்து உள்ளனர். இது ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
    நடிகை நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் வருகிற தீபாவளி பண்டிகை அன்று ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் 6 மாதங்களுக்கு மேலாக மூடிக்கிடக்கின்றன. இதனால் புதிய படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பொன்மகள் வந்தாள், பெண்குயின், டேனி, லாக்கப், சைலன்ஸ், கபெ ரணசிங்கம் உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வந்தன. அடுத்ததாக சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் வருகிற அக்டோபர் 30-ந்தேதி ஓடிடியில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். 

    இந்நிலையில், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படமும் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை தீபாவளி அன்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
     
    இப்படத்தின் இயக்குனர்களுள் ஒருவரான ஆர்.ஜே.பாலாஜி, ஐபிஎல் போட்டிகளுக்கு வர்ணனை செய்து வந்தார். அப்போது படத்தின் புரமோஷன் பணிகள் இருப்பதால் அடுத்த 20 நாட்கள் வர்ணனை செய்யப் போவது இல்லை என்று கூறினார். இதன்மூலம் மூக்குத்தி அம்மன் படம் ஓடிடி ரிலீசாவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே சொல்லலாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா

    முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி உள்ள இப்படத்திற்காக நயன்தாரா, 48 நாட்கள் விரதம் இருந்து நடித்துள்ளார். முழுக்கதையும் அவர் மீது பயணிப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார்.
    மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி மேக்னா ராஜுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று எளிமையாக நடைபெற்றது.
    கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அறியப்பட்டவர் சிரஞ்சீவி சர்ஜா. இவரது மனைவி மேக்னா ராஜ். இவர்கள் 2 பேரும் 10 ஆண்டுகள் காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் மேக்னா ராஜ் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் சிரஞ்சீவி சர்ஜா திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணம் மேக்னா ராஜை நிலைகுலைய வைத்தது.

    மேக்னா ராஜின் வளைகாப்பு புகைப்படங்கள்

    இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள வீட்டில் வைத்து நேற்று நடிகை மேக்னாராஜிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் சிரஞ்சீவி சர்ஜா, மேக்னா ராஜின் குடும்பத்தினர், உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மறைந்த சிரஞ்சீவி சர்ஜாவின் பேனர், மேக்னா ராஜ் அமர்ந்திருந்த நாற்காலி அருகே வைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    போதைப்பொருள் விவகாரத்தில் எல்லா நடிகர்களும் சம்பந்தப்பட்டு உள்ளனர் என்று கருதக்கூடாது என அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
    இந்தி பட உலகினர் போதைப்பொருள் பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த வழக்கில் நடிகை ரியா சக்கரவர்த்தி கைதாகி உள்ளார். நடிகைகள் தீபிகா படுகோனே, ரகுல்பிரீத் சிங், சாரா அலிகான், ஸ்ரத்தா கபூர் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விவகாரம் குறித்து பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் பேசும்போது, “கனத்த இதயத்துடன் இருக்கிறேன். சுஷாந்த் சிங் மரணத்துக்கு பிறகு பல விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. சினிமா துறையில் இருக்கும் சில குறைகளும் வெளியாகி உள்ளது. இவை வலியை ஏற்படுத்துகிறது. போதை மருந்து பிரச்சினை அதிகமாக விவாதிக்கப்படுகிறது. இந்தி பட உலகில் போதைப் பொருள் இல்லை என்று நான் பொய் சொல்ல மாட்டேன். 

    அக்‌ஷய் குமார்

    அதேநேரம் எல்லா நடிகர்களும் இதில் சம்பந்தப்பட்டு உள்ளனர் என்று கருதக்கூடாது. அதற்கு வாய்ப்பே இல்லை. போதைப் பொருள் விவகாரத்தில் சட்டமும் கோர்ட்டும் சரியான நடவடிக்கை எடுக்கும். ஆனால் ஒட்டுமொத்த சினிமா துறையையும் போதை பொருளில் தொடர்புபடுத்தி குற்றம் சுமத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் முழு விவரம்.
    கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இன்று தொடங்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியானது. இந்த பட்டியலில் ஓரளவிற்கு உண்மையாகியுள்ளது.

    பெண் போட்டியாளர்கள்

     தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருப்பவர்களின் விபரம், ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல் முருகன், ஆரி அர்ஜுனன், சாம், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாடகர் ஆஜித் ஆகியோர் சென்று இருக்கிறார்கள்.

    ஆண் போட்டியாளர்கள்

    8 ஆண்களும், 8 பெண்களும் போட்டியாளர்கள் பங்கு பெற்று இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் கமல் அறிமுகம் செய்து பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.
    நிஜார் இயக்கத்தில் ராம்குமார், வரலஷ்மி சரத்குமார், இனியா நடிப்பில் உருவாகி உள்ள கலர்ஸ் படத்தின் முன்னோட்டம்.
    "லைம் லைட் பிக்சர்ஸ்" தயாரிப்பில் திகில் கலந்த குடும்ப கதையம்சம் கொண்ட படமாக ‘கலர்ஸ்’ தயாராகி இருக்கிறது. நகர பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், இதுவரை நடித்திராத வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் சரத்குமாரின் அண்ணன் மகன் ராம்குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார்.

    கலர்ஸ் படக்குழு

    இவர்களுடன் இனியா, திவ்யா பிள்ளை, மொட்டை ராஜேந்திரன், பாலசரவணன், மதுமிதா ஆகியோரும் நடித்துள்ளனர். நிஜார் டைரக்டு செய்து இருக்கிறார். அஜி இட்டிகுலா தயாரித்துள்ளார். படம், கோட்டயம் மற்றும் சென்னையில் வளர்ந்துள்ளது. படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார்கள்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான, தர்ஷன் மீது மிரட்டல், மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    மாடல் அழகியும், நடிகையுமான சனம் ஷெட்டி, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தன்னை காதலித்து, திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், நடிகர் தர்ஷன் மீது புகார் அளித்திருந்தார்.

    கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து, திருமணம் நிச்சயம் செய்து விட்டு, பின்னர் திருமணம் செய்ய மறுத்தாகவும், தன்னை மிரட்டியதாகவும் கூறிய சனம் ஷெட்டி, தர்ஷன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டிருந்தார். 

    சனம் ஷெட்டி, தர்ஷன்

    இந்நிலையில், நடிகை சனம் ஷெட்டி அளித்த புகாரின் அடிப்படையில், அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் தர்ஷன் மீது ஆபாசமாக பேசுதல், மிரட்டல், மோசடி, பெண்ணை மானபங்கப்படுத்துதல் என நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
    தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான ஜெனிலியா, அந்த வேடத்தில் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
    தமிழில் பாய்ஸ், சந்தோஷ் சுப்பிரமணியம், சச்சின், உத்தம புத்திரன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஜெனிலியா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவரும் இந்தி நடிகர் ரிதேஷ்தேஷ்முக்கும் காதலித்து 2012-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரியான், ராஹில் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு ஜெனிலியா சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். கடைசியாக அவரது நடிப்பில் தேரே நால் லவ் ஹோ இந்தி படம் வெளிவந்தது.

    ஜெனிலியா

    இந்த நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி உள்ளார். இதுகுறித்து ஜெனிலியா அளித்துள்ள பேட்டியில், “திருமணத்துக்கு பிறகு கணவருடன் நேரத்தை செலவிட முடிவு செய்ததால் நடிக்கவில்லை. அதன்பிறகு குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பும் வந்தது. வீட்டில் குழந்தைகளை தனியாக விட்டு விட்டு படப்பிடிப்புக்கு சென்றால் கவனத்தை நடிப்பில் முழுமையாக செலுத்த முடியாது. அதனால்தான் எனக்கு நடிக்க வாய்ப்பு வந்தும் மறுத்து விட்டேன். இப்போது குழந்தைகள் வளர்ந்து விட்டதால் மீண்டும் நடிக்க வருகிறேன். அதிக பட வாய்ப்புகளும் வருகின்றன. அம்மாவாக நடிக்க மாட்டேன்” என்றார்.
    ×