என் மலர்
சினிமா செய்திகள்
தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கி வந்த நிலையில், தற்போது 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டு 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது.
இதே நிலை கடந்த இரண்டு மாதங்களாக நீடித்து வந்த நிலையில், பொங்கலுக்கு மாஸ்டர், ஈஸ்வரன் உள்ளிட்ட படங்கள் ரிலீசாக உள்ளதால், திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்குமாறு நடிகர் விஜய் கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்த அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பை அடுத்து திரையரங்க உரிமையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் விஜய் மற்றும் சிம்பு ரசிகர்களுக்கும் இந்த அறிவிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணன் விஜய்யும், நானும் திரையரங்குகளால் உருவானவர்கள் என தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இனிய புத்தாண்டை தொடங்கியிருக்கும் சினிமா ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் எனது அன்பும், வாழ்த்துகளும். "ஈஸ்வரன்" பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்தப் படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானதே திரையரங்குகளின் மீட்சிக்காகத்தான். திரையுலகமே முடங்கிவிட்டது.
ஆன்லைன் வெளியீடுகள் ஓரளவு காப்பாற்றி வந்தாலும், திரையரங்குகள் திருவிழா கோலம் பூண வேண்டியது அவசியம். அதற்காகத்தான் இந்தக் கொரோனா காலத்திலும் வெகுபிரயத்தனப்பட்டு, உயிரைப் பணயம் வைத்து நடித்து முடித்து, தொழில் நுட்ப வேலைகள், டப்பிங் எல்லாம் செய்யப்பட்டது சாதாரண முயற்சியல்ல.
இதற்காக மெனக்கிட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அதேசமயம் அண்ணன் விஜய் அவர்கள் படம் முடித்து ஒரு வருடம் ஆகியும், மாஸ்டர் படம் திரையரங்கிற்கு மட்டுமே வரவேண்டும் என உறுதியாக இருந்தார். அது தன்னை உருவாக்கிய, அந்த மீடியமிற்கு செய்யும் மரியாதை.
அதில் எனது பங்கும் இருக்க வேண்டுமென்று விரும்பினேன். நாங்கள் திரையரங்குகளால் உருவானவர்கள். மக்கள் எங்களைத் திரையில் பார்த்து மகிழ்ந்து கொண்டாடுவதால் வளர்ந்தவர்கள். அவர் நினைத்திருந்தால் மாஸ்டரை ஆன்லைனில் வெளியிட்டிருக்கலாம். ஆனால் திரையரங்குகளுக்கு மீண்டும் விடிவுகாலம் வரவேண்டுமென பொறுத்திருந்து வெளியிடுகிறார்.

திருவிழா நாட்களில் எப்போதும் இரண்டு பெரிய படங்கள் வெளிவரும். கலவையான படங்கள் வரும்போது மக்கள் திரையரங்குக்கு பயமின்றி வரத் தொடங்குவார்கள். என் ரசிகர்கள், மாஸ்டர் படம் பாருங்கள். விஜய் அண்ணா ரசிகர்கள் ஈஸ்வரன் பாருங்கள். திரையரங்குகள் நிறையட்டும். கொரோனா தாண்டி வாழ்க்கையோடு போராடி வெற்றிபெற்று நிற்கும் நாம் நமது மன அழுத்தங்களிலிருந்து வெளியாக வேண்டும்.
அதற்கு இந்தப் படங்கள் நிச்சயம் உதவும். உங்களை மகிழ்விக்கும். விநியோகஸ்தர்கள், திரையரங்குகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் நல்லபடியாக மீண்டு வரவேண்டும். திரையுலகம் செழிக்க வேண்டும். அதற்கான வாசலை மாஸ்டரும், ஈஸ்வரனும் செய்யும் என்று நம்புகிறேன். அரசாங்கம் கடைகள், மால்கள், கடற்கரை என எல்லாமே முழுமையாகத் திறக்கப்பட்டுவிட்டன. திரையரங்குகள் முழுமையாகத் திறக்கப்பட்டுவிட்டாலொழிய அந்த பழைய நிலை வராது.
வசூல் நஷ்டமே ஏற்படும். அரசும் தயைகூர்ந்து 100% இருக்கைகளுக்கு அனுமதி தந்து பாதுகாப்பு விதிகளை அதிகரித்து, திரையரங்க உரிமையாளர்களையும், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க நல்ல உத்தரவை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விரைந்து தமிழ்ப் புத்தாண்டிற்குள் சதவீத இருக்கை ஆக்ரமிப்பு குறித்து உத்தரவிட்டால் மிக்க நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என சிம்பு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்வரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சுசீந்திரனின் நடவடிக்கை சர்ச்சைக்குள்ளான நிலையில், அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘ஈஸ்வரன்’. இப்படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இதனிடையே ஈஸ்வரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை நிதி அகர்வால் பேசிக்கொண்டிருக்கும் போது, அருகில் வந்த இயக்குனர் சுசீந்திரன் ‘சிம்பு மாமா ஐ லவ் யூனு சொல்லு’ என்று கூறிக்கொண்டே இருந்தார். இருப்பினும் நிதி அகர்வால் கடைசி வரை அவ்வாறு கூறவில்லை.
சுசீந்திரனின் இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூகவலைதளத்தில் பலர் சுசீந்திரனுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். பொதுவெளியில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஒரு நடிகையை இப்படி கட்டாயப்படுத்துவது, அருவருக்கத்தக்க வகையில் இருந்ததாகவும் நெட்டிசன்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ஆடியோ ரிலீஸ் விழாவில் நிதி அகர்வாலை நான் சர்ச்சைக்குரிய வகையில் பேச வைத்ததாக ஒருசிலர் தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் சிம்புவை விரட்டி விரட்டி ஐ லவ் யூ என்று சொல்லி காதலிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் தான் நிதி அகர்வால் நடித்துள்ளார். இதை வைத்துதான் நான் ஆடியோ ரிலீஸ் விழாவில் அப்படி சொல்ல சொன்னேன். நிறைய பேர் அதை தவறாக புரிந்துகொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர்’ என்று சுசீந்திரன் கூறியுள்ளார்.
“படத்தில,மாமா..மாமா ஐ லவ் யூ ..என்று சிம்பு பின்னாடியே சுத்தி திரியும் கேரக்டர் தான் நிதிக்கு”- #ஈஸ்வரன் ஆடியோ வெளியீட்டு விழா பேச்சின் விளக்கம்- டைரக்டர் #சுசீந்திரன்#suseinthiran#EeswaranAudioLaunchpic.twitter.com/4Tqd6vtnGd
— Haricharan Pudipeddi (@pudiharicharan) January 3, 2021
அனுஷ்கா நடிக்க மறுத்த புராண கதையம்சம் கொண்ட படத்தில் நடிகை சமந்தா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
சரித்திர, புராண படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. புராண கதையம்சம் கொண்ட படங்கள் பாக்ஸ்ஆபிஸிலும் வசூலை வாரிக் குவிக்கின்றன. பாகுபலி வெற்றிக்கு பிறகு இந்த வகையான படங்கள் பக்கம் தயாரிப்பாளர்கள் பார்வை திரும்பி இருக்கிறது.

இந்நிலையில், சகுந்தலை புராண கதை சினிமா படமாக தயாராகிறது. படத்துக்கு சகுந்தலம் என்று பெயரிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை குணசேகர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமா தேவி படத்தை இயக்கியவர்.

சகுந்தலம் படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் அனுஷ்கா, பூஜா ஹெக்டே ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். அவர்கள் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இறுதியில் சகுந்தலையாக நடிக்க சமந்தாவை தேர்வு செய்து இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். இப்படத்திற்கு மணிசர்மா இசையமைக்க உள்ளார்.
சிம்பு பட இயக்குனர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
பிரபல தெலுங்கு இயக்குனர் கிரிஷ். இவர் தமிழில் சிம்பு, அனுஷ்கா நடிப்பில் வெளியான வானம் படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் அனுஷ்கா நடித்து வேதம் என்ற பெயரில் இவரது இயக்கத்திலேயே வெளியான படத்தின் தமிழ் ரீமேக்காக வானம் வந்தது. பாலகிருஷ்ணா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான கவுதமி புத்ரா சதகர்னி என்ற சரித்திர படத்தையும் இயக்கி உள்ளார்.
மேலும் தெலுங்கில் ராணா, நயன்தாரா நடித்த கிரிஷ்ணம் வந்தே ஜகத்குரம், மறைந்த தெலுங்கு நடிகர் என்.டி.ராமராவ் வாழ்க்கை கதையான என்.டி.ஆர் கதாநாயகுடு, இந்தியில் கங்கனா ரணாவத் நடித்த மணிகர்னிகா உள்ளிட்ட படங்களையும் இயக்கி உள்ளார். அடுத்து பவன் கல்யாண் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

இதன் படப்பிடிப்பை இன்று தொடங்க தயாராகி வந்தார். முன்னதாக படக்குழுவினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இயக்குனர் கிரிஷுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. கிரிஷ் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மோகன்லால், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்காயர் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற படம் தயாராகி உள்ளது. ரூ.100 கோடி செலவில் தயாராகியுள்ள இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார்.
இதில் குஞ்சலி மரைக்காயர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். நடிகைகள் கீர்த்தி சுரேஷும், மஞ்சு வாரியரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் அர்ஜுன், சுனில் ஷெட்டி, அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.

இப்படத்தை கடந்தாண்டு மார்ச் மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில், இப்படத்தை வருகிற மார்ச் 26-ந் தேதி தியேட்டர்களில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மலையாள திரையுலக பாடலாசிரியர் அனில் பனசூரன் மாரடைப்பால் காலமானார்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கவிஞராகவும் மற்றும் மலையாள திரையுலகில் பாடலாசிரியராகவும் இருந்து வந்தவர் அனில் பனசூரன் (51).
சமீபத்தில் இவர் மயங்கி விழுந்துள்ளார். சுவாசக் கோளாறுகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு 8.10 மணியளவில் உயிரிழந்தார். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற நிலையிலேயே அதில் பலனின்றி அவர் காலமானார்.
தொடக்கத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த அவர், கடந்த 2007-ம் ஆண்டில் வெளிவந்த அரபிக்கத என்ற படத்தில் பாடலாசிரியராக அறிமுகம் பெற்றார். அவர் படத்திலும் நடித்துள்ளார். மலையாளத்தில் புகழ்பெற்ற கவிஞர்களில் அவரும் ஒருவர். அவரது மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்காக உருவாகும் ‘மும்பைகார்’ படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் இமேஜ் பார்க்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. சீதக்காதியில் வயதானவராக வந்தார். விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் போன்ற படங்களில் வில்லன் வேடம் ஏற்றார்.

இந்நிலையில், அவர் பாலிவுட்டில் அறிமுகமாகும் படத்தில் காமெடியனாக நடிக்க உள்ளார். ‘மும்பைகார்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்க உள்ளார். இது தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற மாநகரம் படத்தின் இந்தி ரீமேக் ஆகும். மாநகரம் படத்தில் முனீஸ்காந்த் நடித்த காமெடி வேடத்தில் தான் இந்தியில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் நவீன் கணேஷ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், பூஜா ஜாவேரி, வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகி வரும் எக்கோ படத்தின் முன்னோட்டம்.
ஸ்ரீகாந்த், ஆசிஷ் வித்யார்த்தி, ஸ்ரீநாத், கும்கி அஸ்வின் மற்றும் கதாநாயகியாக வித்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் 'எக்கோ'. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா-வுடன் 'துவாரகா', தமிழில் அதர்வா-வுடன் 'ருக்குமணி வண்டி வருது' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த 'பூஜா ஜாவேரி' இந்த படத்தின் மற்றொரு நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தை இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர்.ராஜசேகர், ஹாரூன் ஆகியோர் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் நவீன் கணேஷ் இயக்குகிறார். கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஜான் பீட்டர் இசையமைக்கிறார். சுதர்ஷன் படத்தொகுப்பு செய்ய, மைக்கேல் ராஜ் கலையை நிர்மாணிக்கிறார். ராதிகா நடனம் அமைக்க, டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். கடந்த அக்டோபரில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் இன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் பற்றிய கேள்வி இடம்பெற்றிருந்தது.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த சிவில் (குரூப்-1) தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. 66 காலியிடங்களுக்காக நடத்தப்பட்ட இத்தேர்வில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
துணை ஆட்சியர் (ஆர்டிஓ), டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், வணிக வரி உதவி ஆணையர், மாவட்டத் தீயணைப்பு அலுவலர் ஆகிய உயர் பதவிகளுக்குத் தேர்வுகள் நடைபெற்றன.
இந்த தேர்வில், கடந்த 2018-ம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் குறித்து ஒரு கேள்வி இடம்பெற்றிருந்தது.

தலைசிறந்த படைப்பான ‘பரியேறும் பெருமாள்’ என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்க்காணும் கூற்றுகளில்/ கூற்றில் சரியானவற்றை தேர்வு செய்யவும் என்ற கேள்விக்கு, இப்படம் சாதிய கட்டமைப்பின் கொடிய விளைவுகளை காட்டுகிறது. இப்படம் மிகச் சிறந்த படம் என்ற வரிசையில் பிலிம்பேர் விருது பெற்றது. இப்படம் திரு மாரி செல்வராஜால் இயக்கப்பட்டு, நீலம் தயாரிப்பு குழுவால் வெளியிடப்பட்டது ஆகிய மூன்று பதில்களும் இடம்பெற்றிருந்தது.
பாராதிராஜா - இளையராஜா கூட்டணியில் உருவாக இருந்த ‘ஆத்தா’ படம் கைவிடப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் வெற்றிக் கூட்டணியாக திகழ்ந்த பாராதிராஜா - இளையராஜா கூட்டணி, கடைசியாக 28 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘நாடோடி தென்றல்’ படத்தில் இணைந்து பணியாற்றினர். இதையடுத்து இவர்கள் ‘ஆத்தா’ படம் மூலம் மீண்டும் இணைவதாக இருந்தது. சில மாதங்களுக்கு முன் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியானது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் தயாரிப்பு வேலைகள் தடைபட்டிருந்தன.
இந்நிலையில், இப்படம் தற்போது கைவிடப்பட்டுள்ளதாக இயக்குனர் பாரதிராஜா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் இனிய தமிழ் மக்களே, 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய கதை ஆத்தா. முன்பே இந்த கதையை படமாக்கி இருந்தால், உங்கள் பாரதிராஜாவை கண்டிருக்கலாம். காலசூழ்நிலை ஒன்று உள்ளது. நடைமுறை நவீன முற்போக்கான இந்த கால கட்டத்தில் வந்த பல சினிமாக்களின் கருவை நாடியுள்ளது ஆத்தா.

இதை மீண்டும் கையில் எடுத்தால் பொருள் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் பெரும் நட்டம் ஏற்படும் என்ற காரணத்தினால், ஆத்தா கைவிடப்படுகின்றன. புதிய அறிவிப்பு, புதிய தலைப்புடனும் புதிய தொழில்நுட்ப கூட்டணியுடன், மிக விரைவில் அறிவிக்கப்படும்”
என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜெயில் படத்தை தொடர்ந்து வசந்தபாலன் இயக்க உள்ள புதிய படத்தில் மாஸ்டர் பட நடிகர் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
2002-ல் வெளியான ஆல்பம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்த பாலன். இதையடுத்து இவர் இயக்கிய ‘வெயில்,’ ‘அங்காடித்தெரு’, ‘காவியத் தலைவன்’ போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக இவர் இயக்கிய வெயில் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஜெயில்’. ஜி.வி.பிரகாஷ், அபர்னதி நடித்துள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில், வசந்தபாலன் தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி இவர் அடுத்ததாக பாலிவுட்டில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான தி லிஃப்ட் பாய் என்கிற படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் கைதி, அந்தகாரம், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து பிரபலமான அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






