என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, சினிமாவில் வளர்ச்சி அடைய திறமை மட்டும் போதாது என தெரிவித்துள்ளார்.
    நடிகை சமந்தா ஓ.டி.டி. தளத்தில் புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதில் தனது சினிமா வாழ்க்கை குறித்து அவர் கூறியதாவது: சினிமாவில் பிரபலமாக ஒரு பூசணிக்காய் அளவுக்கு திறமை இருந்தாலும் போதாது. கடுகளவு அதிர்ஷ்டமும் வேண்டும் என்று சொல்வார்கள். எனக்கு இரண்டுமே பூசணிக்காய் அளவுக்கு இருந்தது. சினிமா துறையில் அடியெடுத்து வைத்த கொஞ்ச நாட்களிலேயே அற்புதமான கதைகள், கதாபாத்திரங்கள் கிடைத்தன. 

    என்னை விட திறமையானவர்கள், அழகானவர்கள் நிறைய பேர் இருந்தாலும் வாய்ப்புகள் என்னை தேடி வந்தன. அதற்கு காரணம் அதிர்ஷ்டம். திருமணத்துக்கு பிறகும் நல்ல படங்களில் நடித்து கொண்டு இருப்பதற்கு காரணம் நிச்சயம் அதிர்ஷ்டம்தான். அதிர்ஷ்டத்தை அதிகம் நம்புகிறேன். 

    சமந்தா

    கதாநாயகிகள் திறமைக்கு திருமணம் ஒரு தடை இல்லை. திருமணத்துக்கு பிறகு வாய்ப்புகள் வராது என்று நம்பி அதற்கும் தயாராகி கொண்டுதான் திருமணம் செய்துகொண்டேன். ஆனால் அதிர்ஷ்டம் எனது பக்கம் இருப்பதால் திருமணத்துக்கு பிறகும் நல்ல படங்கள் எனக்கு அமைகின்றன. இவ்வாறு சமந்தா கூறினார்.
    ஈஸ்வரன் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு, மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்தார்.
    சிம்புவின் 46-வது படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கி உள்ளார். கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி 25 நாட்களில் முடிக்கப்பட்டது. கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆகஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக ஈஸ்வரன் உருவாகி உள்ளது. 

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய சிம்பு தான் அடுத்ததாக நடிக்கும் படங்கள் குறித்து தெரிவித்தார். ஈஸ்வரனுக்கு பின் மாநாடு, பத்து தல போன்ற படங்களில் நடிக்க உள்ள சிம்பு, அதன்பின் மீண்டும் சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்தார். 

    சுசீந்திரன்

    அப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்பதையும் அவர் கூறினார். இதுதவிர மேலும் மூன்று படங்களில் நடிக்க உள்ளதாக தெரிவித்த சிம்பு, அதை இயக்கப்போவது யார் யார் என்ற தகவலை வெளியிடவில்லை. 
    நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
    சிவகார்த்திகேயனின் புதிய படம் ‘டாக்டர்’. ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, வில்லனாக வினய் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக தடைபட்டிருந்த இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது.

    டாக்டர் படக்குழு

    இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இப்படத்தின் இயக்குனர் நெல்சன் அடுத்ததாக விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழில் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, சுமார் 30 ஆண்டுக்கு பின் பிரபல இயக்குனருடன் இணைந்துள்ளார்.
    தமிழில் கடந்த 1990-ம் ஆண்டு வெளிவந்த ‘கேளடி கண்மணி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வஸந்த். அதன்பின்னர் ‘நீ பாதி நான் பாதி’, ‘ஆசை’, ‘நேருக்கு நேர்’ போன்ற பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கினார். அடுத்ததாக ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தை இயக்கி உள்ளார். இத்திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

    இந்நிலையில், தற்போது இயக்குனர் வஸந்த், புதிய படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார். அந்த படத்தை அவரே தயாரிக்கவும் உள்ளாராம். இந்த படத்திற்கு இசையமைக்க இளையராஜாவிடம் ஒப்புதல் பெற்றுள்ளதாக வஸந்த் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

    வஸந்த்

    இதன்மூலம் ‘கேளடி கண்மணி’ படத்தை அடுத்து சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் இளையராஜாவுடன் இணைந்து வஸந்த் பணிபுரிய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    வஸந்த் மற்றும் இளையராஜா இணைந்த ‘கேளடி கண்மணி’ படத்தில் இடம்பெற்ற ‘மண்ணில் இந்த காதல்’ மிகவும் பிரபலமானது. ஏனெனில் இப்பாடலை எஸ்.பி.பி. மூச்சு விடாமல் பாடி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
    சிறுகதை மன்னன்'' என்று புகழ் பெற்ற புதுமைப்பித்தன், மிகச்சிறந்த எழுத்தாளர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திரை உலகத்துடன் அவருக்குத் தொடர்பு உண்டு என்பது பலருக்குத் தெரியாது.
    "சிறுகதை மன்னன்'' என்று புகழ் பெற்ற புதுமைப்பித்தன், மிகச்சிறந்த எழுத்தாளர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திரை உலகத்துடன் அவருக்குத் தொடர்பு உண்டு என்பது பலருக்குத் தெரியாது.

    புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருதாசலம். தந்தை பெயர் சொக்கலிங்கம் பிள்ளை. தாயார் பர்வதம் அம்மாள்.

    இவர்கள் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனினும், சொக்கலிங்கம் பிள்ளை தாசில்தாராக வேலை பார்த்ததால், ஊர் ஊராகப் போகவேண்டியிருந்தது.

    இந்நிலையில், கடலூரை அடுத்த திருப்பாதிரிப்புலிïரில், 1906-ம் ஆண்டு ஏப்ரல் 25-ந்தேதி புதுமைப்பித்தன் பிறந்தார்.

    புதுமைப்பித்தனுக்கு எட்டு வயதானபோது, தாயார் பர்வதம் அம்மாள் காலமானார்.

    அதன்பின், சொக்கலிங்கம் பிள்ளை மறுமணம் செய்து கொண்டார்.

    புதுமைப்பித்தன் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில் ஆரம்பக் கல்வி பயின்றார்.

    சொக்கலிங்கம் பிள்ளை 1918-ல் ஓய்வு பெற்ற பின், சொந்த ஊரான திருநெல்வேலியில் குடியேறினார்.

    புதுமைப்பித்தன், திருநெல்வேலி யோவான் கல்லூரியிலும், பின்னர் இந்துக் கல்லூரியிலும் படித்து 1931-ல் "பி.ஏ'' தேறினார்.

    மகன் அரசாங்க உத்தியோகத்துக்குச் செல்ல வேண்டும் என்று சொக்கலிங்கம் பிள்ளை விரும்பினார். அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார். ஆனால் வேலை கிடைக்கவில்லை.

    1931 ஜுலை மாதத்தில், புதுமைப்பித்தனுக்கும், திருவனந்தபுரத்தில் மராமத்து இலாகா அதிகாரியாக இருந்த பி.டி.சுப்பிரமணிய பிள்ளையின் மகள் கமலாவுக்கும் திருமணம் நடந்தது.

    புதுமைப்பித்தன் நண்பர்களுடன் இலக்கிய சர்ச்சைகளில் ஈடுபடுவது, புத்தகங்கள் படிப்பது ஆகியவற்றில் ஆர்வம் காட்டினார். ஆனால் மகன் வெட்டிப்பொழுது போக்கிக் கொண்டிருப்பதாக சொக்கலிங்கம் பிள்ளை நினைத்தார். இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறுகள்  ஏற்பட்டன.

    இந்தச் சமயத்தில், கே.சீனிவாசன் "மணிக்கொடி'' என்ற இலக்கியப் பத்திரிகையை சென்னையில் தொடங்கினார். டி.எஸ்.சொக்கலிங்கம், "வ.ரா'' ஆகியோர் அவருக்குத் துணையாக இருந்தனர்.

    "மணிக்கொடி''யில் புதுமைப்பித்தன் கதைகள் எழுதினார். மற்றும் டி.எஸ்.சொக்கலிங்கத்தின் "காந்தி'', சங்கு சுப்பிரமணியத்தின் "சுதந்திரச் சங்கு'' ஆகிய பத்திரிகைகளிலும் அவருடைய கதைகள் பிரசுரமாயின.

    புதுமைப்பித்தனின் சிறுகதைகள் புதிய கோணத்தில், தனித்தன்மையுடன் திகழ்வதை "வ.ரா''வும், டி.எஸ்.சொக்கலிங்கமும் பாராட்டி, புதுமைப்பித்தனுக்குக் கடிதங்கள் எழுதி உற்சாகப்படுத்தினார்கள்.

    புதுமைப்பித்தனுக்கு இருந்த இலக்கிய மோகம் அவரைச் சென்னைக்கு இழுத்துச் சென்றது. "மணிக்கொடி''யில் எழுதியதுடன், ராய.சொக்கலிங்கத்தின் "ஊழியன்'' பத்திரிகையில் உதவி ஆசிரியர் பணியையும் கவனித்தார். எனினும், அந்தப்பதவியில் அவர் அதிக காலம்

    நீடிக்கவில்லை."மணிக்கொடி''யில் எழுதி வந்த புதுமைப்பித்தன், பின்னர் டி.எஸ்.சொக்கலிங்கத்தின் அழைப்பின் பேரில், "தினமணி'' நாளிதழின் துணை ஆசிரியர் பொறுப்பில் சேர்ந்தார்.

    "தினமணி'' ஆண்டு மலரைத் தயாரிக்கும் பொறுப்பு புதுமைப்பித்தனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த ஆண்டு மலர்களைச் சிறந்த இலக்கியப் பெட்டகங்களாகப் புதுமைப்பித்தன் கொண்டு வந்தார். "நாசகாரக்கும்பல்'' போன்ற அவருடைய சிறந்த சிறுகதைகள், "தினமணி'' ஆண்டு மலரில் வெளிவந்தவைதான்.

    1943-ல் டி.எஸ்.சொக்கலிங்கம் "தினமணி''யை விட்டு விலகி, "தினசரி''யைத் தொடங்கினார். புதுமைப்பித்தனும் "தினசரி''யில் சேர்ந்தார். பிறகு சொக்கலிங்கத்துடன் மனத்தாங்கல் ஏற்பட்டு, தினசரியை விட்டு விலகினார்.

    "தினமணி''யில் புதுமைப்பித்தனுடன் பணியாற்றிய சிலர் சினிமாத்துறையில் புகுந்து முன்னேறிக் கொண்டிருந்தார்கள். "இளங்கோவன்'' என்ற புனைப்பெயர் கொண்ட ம.க.தணிகாசலம், சினிமா வசனகர்த்தாவாக கொடிகட்டிப் பறந்தார். "மணிக்கொடி'' ஆசிரியராக இருந்த பி.எஸ்.ராமையா சினிமா டைரக்டராக உயர்ந்திருந்தார். "மணிக்கொடி'' துணை ஆசிரியர் கி.ரா. (கி.ராமச்சந்திரன்) ஜெமினி கதை இலாகாவில் சேர்ந்து பணிபுரிந்து கொண்டிருந்தார்.

    எனவே சினிமா துறையில் நுழைய விரும்பினார், புதுமைப்பித்தன். "காமவல்லி'' என்ற படத்திற்கு வசனம் எழுதினார். அதற்குக் கணிசமான பணமும் கிடைத்தது.

    "அவ்வையார்'' படத்தைத் தயாரிக்க முதன் முதலாக ஜெமினி திட்டமிட்டபோது, கி.ரா.வும், புதுமைப்பித்தனும் சேர்ந்து வசனம் எழுதினார்கள். (பின்னர் கே.பி.சுந்தரம்பாள் நடிக்க, ஜெமினி தயாரித்த அவ்வையார் படத்தில் புதுமைப்பித்தனின் வசனம் இடம் பெறவில்லை)

    1945-ம் ஆண்டைப் பொறுத்தவரை புதுமைப்பித்தனுக்கு உற்சாகம் அளிப்பதாக இருந்தது. சொந்தத்தில் சினிமாப்படம் எடுக்கத் தீர்மானித்து, தன் தாயார் பெயரில் "பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்'' என்ற படக் கம்பெனியையும் தொடங்கினார். குற்றாலக் குறவஞ்சி கதையை "வசந்தவல்லி'' என்ற பெயரில் படமாக்க வேண்டும் என்பது, அவரது திட்டம்.

    இதில், கதாநாயகனாக நாகர்கோவில் மகாதேவன் நடிப்பதாக இருந்தது. மகாதேவனை, சில நண்பர்கள் புதுமைப்பித்தனிடம் அழைத்து வந்தனர். பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்து முடிந்தது.

    "கதாநாயகனுக்கு அட்வான்ஸ் கொடுங்கள்'' என்று ஒருவர் கூற, புதுமைப்பித்தன் தன்னிடம் இருந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அட்வான்சாகக் கொடுத்தார்!

    அதன்பின், சில பத்திரிகைகளில் "வசந்தவல்லி'' பற்றி விளம்பரங்கள் வெளிவந்தன. படம் தயாரிக்கப்படவில்லை.

    அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் கைதாகி, சட்டத்துடன்

    2ஷி ஆண்டு காலம் போராடி, 1947 ஏப்ரலில் விடுதலையானார்.

    அவருடைய மகத்தான வெற்றிப்படங்களான "ஹரிதாஸ்'', "சிவகவி'', "அசோக்குமார்'', "அம்பிகாபதி'' முதலான படங்களுக்கு வசனம் எழுதியவர் இளங்கோவன். அவருடன் மனத்தாங்கல் கொண்டிருந்த பாகவதர், விடுதலைக்குப்பின் சொந்தமாகத் தயாரித்த ''ராஜமுக்தி'' படத்துக்கு வசனம் எழுத புதுமைப்பித்தனை அழைத்தார்.

    படப்பிடிப்பு முழுவதும், புனாவில் அகில இந்தியப் புகழ் பெற்ற பிரபாத் ஸ்டூடியோவில் நடந்தது. புனாவுக்குச் சென்று, அங்கேயே தங்கி வசனம் எழுதினார், புதுமைப்பித்தன்.

    வசனம் எழுதும் பணி முடிவடையும் தருணத்தில், அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

    காசநோய் காரணமாக, அவர் உடல் நிலை வரவர மோசம் அடைந்தது. 1948 மே மாதம் முதல் வாரத்தில் மனைவி கமலா தங்கியிருந்த திருவனந்தபுரத்துக்கு வந்து சேர்ந்தார். நடக்க முடியாமல் கம்பு ஊன்றி நடக்க வேண்டிய அளவுக்கு, அவர் உடல்நிலை மோசமடைந்திருந்தது.

    "ராஜமுக்தி''க்கு வசனம் எழுதியதில் ஓரளவு பணம் கிடைத்திருந்த போதிலும், முழு நேர எழுத்தாளராக வாழ்ந்த காரணத்தாலும், தந்தையுடன் சுமுக உறவு இல்லாததாலும், புதுமைப்பித்தன் இறுதிக்காலத்தில் வறுமையுடன் போராட வேண்டியிருந்தது.

    மனைவி கமலாவையும், ஒரே மகள் தினகரியையும், தமிழ்  இலக்கிய உலகையும் தவிக்க விட்டு, 30-6-1948 அன்று புதுமைப்பித்தன் காலமானார்.

    புதுமைப்பித்தன் வரலாற்றில் ஆச்சரியமான ஒரு நிகழ்ச்சி:

    தமிழ் இலக்கியத்துக்கு இணையற்ற சேவை செய்த புதுமைப்பித்தன் வறுமையுடன் போராடி தமது 42-வது வயதில் காலமானார். இதற்கு 20 ஆண்டுகளுக்குப்பின், தமிழக அரசு லாட்டரியில் அவர் மனைவி கமலாவுக்கு ரூ.2 லட்சம் பரிசு கிடைத்தது.

    அந்த சமயத்தில், புதுமைப்பித்தனின் ஒரே மகள் தினகரிக்கு திருமண ஏற்பாடு நடந்து வந்தது. "மகள் திருமணத்துக்கு, தந்தை கொடுத்த சீதனமாக இந்த பணத்தைக் கருதுகிறேன்'' என்றார், கமலா விருதாசலம்.

    தினகரி திருமணம் சிறப்பாக நடந்தது. கணவர் பெயர் சொக்கலிங்கம். இவர் என்ஜினீயர்.

    புதுமைப்பித்தன் நூல்களை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது.

    புதுமைப்பித்தன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.
    ஈஸ்வரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிம்பு, பேச ஒன்றுமில்லை.. இனிமேல் செயல்தான்... என்று கூறியுள்ளார்.
    சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் ஈஸ்வரன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சுசீந்திரன், சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    இதில் சிம்பு பேசும்போது, இத்தனை நாள் நான் எப்படி இருந்தேன், எப்படி இப்படி மாறினேன், இந்தப் படம் எப்படி உருவானது, எப்படி முடிந்தது என்று உண்மையிலேயே எனக்கும் தெரியவில்லை. அதான் உண்மை. இறைவனுக்கு மட்டும் தான் தெரியும். எங்க பார்த்தாலும் நெகட்டிவ் ஆக இருக்கிறது. யாரைப் பார்த்தாலும் பொறாமை, போட்டி, குறை சொல்வது என்று இருக்கிறார்கள். 

    அட்வைஸ் பண்றதை எல்லாரும் நிறுத்தவேண்டும். நம்மை சுற்றி இருப்பவர்களிடம் இருந்து அட்வைஸ் கேட்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். மனசு சுத்தமாய் இருந்தால் எல்லாம் நன்றாகவே நடக்கும். நான் வாழ்க்கையில் ஒரு சமயத்தில் கஷ்டப்பட்டேன் என்றால் மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டேன். அதனால் தான் உடல் எடை கூடியது. படப்பிடிப்புக்கு செல்ல முடியவில்லை.

    இறைவன் எங்கேயும் இல்லை. உள்ளத்தில் தான் இருக்கிறார். உள்ளத்தை சரி செய்தேன். இப்போ எல்லாம் நன்றாகவே நடக்கிறது. எல்லோரிடமும் அன்பை செலுத்துங்கள். ரசிகர்களுக்கும் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். பேச ஒன்றுமில்லை இனிமேல் செயல்தான். அடுத்தடுத்து என்னுடைய நடிப்பில் பல படங்கள் வெளியாக இருக்கிறது. ஈஸ்வரன் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றார்.
    நான் கேள்விப்பட்ட சிம்பு வேற, பழகிய சிம்பு வேற... இயக்குனர் பாரதிராஜா படவிழாவில் புகழ்ந்து பேசியிருக்கிறார்.
    சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் ஈஸ்வரன். கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக ஈஸ்வரன் உருவாகி உள்ளது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சுசீந்திரன், சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    இதில் பாரதிராஜா பேசும்போது, நான் கேள்விப்பட்ட சிம்பு வேற, பார்த்து பழகிய சிம்பு வேற.. சிம்பு ஒரு ஒழுக்கமான மனிதர். ஏழு மணிக்கு படப்பிடிப்பு என்றால் 6.45 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுகிறார். ஒரே டேக்கில் சாதாரணமாக நடித்து விட்டு சென்று விடுகிறார். சிம்புக்கு எதுவும் மறைக்கத் தெரியாது. இப்போ சிம்புவை நான் ரொம்ப நேசிக்கிறேன். என்றார்.
    தயாரிப்பாளர் ஜி.முருகானந்தம் தனது ஜெம் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் வெளியிடும் ஆண்கள் ஜாக்கிரதை படத்தின் முன்னோட்டம்.
    தயாரிப்பாளர் ஜி.முருகானந்தம் தனது ஜெம் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் மரப்பாச்சி என்ற திகில் படத்தை தயாரித்தது மட்டுமல்லாது திருப்பதிசாமி குடும்பம், ஆண்கள் ஜாக்கிரதை போன்ற படங்களுக்கு பைனான்ஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவர் தற்போது தனது ஜெம் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் “ஆண்கள் ஜாக்கிரதை“ படத்தை வருகிற ஜனவரி 21 ம் தேதி தமிழகமெங்கு வெளியிடுகிறார்.

    “ஆண்கள் ஜாக்கிரதை“ இது ஒரு வித்தியாசமான திரில்லர் படம். அளவுக்கு அதிகமான சுதந்திரம் பெண்களையும் தவறு செய்ய தூண்டும். அதனால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. ஒரு ஆண் தவறு செய்தால் அந்த குடும்பம் மட்டும்தான் சிதையும். ஆனால் ஒரு பெண் தவறு செய்தால் அந்த சமுதாயமே அழியும் என்ற கருத்தை சொல்கிறோம்.

    இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் இது.
    செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படத்தின் போஸ்டரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
    ஆயிரத்தில் ஒருவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதை செல்வராகவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

    இந்த தகவல் பல ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் முன்னதாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்திருந்த கார்த்தி மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோர் இந்த படத்தில் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    அதுமட்டுமில்லாமல் ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டர் ஒரு குறிப்பிட்ட நாவலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளதை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

    ஆயிரத்தில் ஒருவன் 2

    பிரெஞ்சு ஓவியக் கலைஞர் மேத்யூ லாப்ரே என்ற ஆர்ட் புத்தகத்திலிருந்து அந்த போஸ்டர் காப்பியடிக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.  
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷாலின் அடுத்த படத்தை குறும்பட இயக்குனர் இயக்க இருக்கிறார்.
    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் தற்போது சக்ரா திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும் ஆர்யாவுடன் இணைந்து எனிமி படத்தில் நடித்து வருகிறார்.

    விஷால்

    இந்த நிலையில் தனது அடுத்த படத்திற்கு பூஜை போட்டுள்ளார் விஷால். இந்த படத்தை எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த து.ப.சரவணா இயக்குகிறார். இப்படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் இந்த வாரம் எலிமினேட் ஆனது யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
    தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார். 

    அந்தவகையில் இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா மற்றும் அர்ச்சனா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். கடந்த வாரம் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் வெளியேற்றப்பட்டார்.

    ஆஜித்

    இந்நிலையில், இந்த வாரம் சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான ஆஜித் குறைவான வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    தமிழில் விஸ்வரூபம், உத்தம வில்லன் படங்களில் நடித்த பூஜா குமாருக்கு குழந்தை பிறந்துள்ளது.
    'காதல் ரோஜாவே' படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான நடிகை பூஜா குமார் அமெரிக்காவில் பிறந்தவர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் சில ஆங்கிலப் படங்களிலும், இந்தி படத்திலும் நடித்தார்.

     2013-ம் ஆண்டு கமல்ஹாசனுடன் மீண்டும் தமிழில் 'விஸ்வரூபம்' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து 'உத்தம வில்லன்', 'மீன் குழம்பும் மண் பானையும்', 'பிஎஸ்வி கருட வேகா' (தெலுங்கு), 'விஸ்வரூபம் 2' உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவருக்குத் திருமணமான செய்தி ரகசியமாக இருந்து வந்தது. பூஜா குமார் சமூக வலைதளங்களில் இருந்தாலும் இது பற்றி அவர் பகிர்ந்தது இல்லை. தற்போது அவரது கணவர் விஷால் ஜோஷி இது குறித்துப் பகிர்ந்துள்ளார். 

    பூஜா குமார்

    திருமண ஏற்பாடுகளை செய்யும் கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் இவர், தங்களுக்குக் குழந்தை பிறந்தது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது: "ஒரு காலத்தில் நாங்கள் இரண்டு பேர் தான் இருந்தோம். இப்போது மூன்று பேர். எங்கள் குட்டி மகள் நாவ்யா ஜோஷியை உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதில் நானும் பூஜாவும் உற்சாகம் அடைகிறோம். எனக்கு மிகச் சிறந்த வாழ்க்கைத் துணையாக இருப்பதற்கு, குட்டி நாவ்யாவை இந்த உலகத்துக்கு அழைத்து வந்ததற்கு நன்றி பூஜா. எனது இந்த பிறந்தநாளை என் வாழ்நாளின் மிகச் சிறந்த பிறந்தநாளாக மாற்றிவிட்டாய். உங்கள் இருவரையும் அவ்வளவு நேசிக்கிறேன்" என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
    ×