என் மலர்
சினிமா செய்திகள்
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்திற்கான பாடல் பதிவு பணிகளை இளையராஜா தனது புதிய ஸ்டூடியோவில் மேற்கொள்ள உள்ளாராம்.
பிரசாத் ஸ்டூடியோவில் 35 ஆண்டுகளுக்கு மேலாக இசையமைத்து வந்த இளையராஜா, சமீபத்தில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் சமரச தீர்வு ஏற்பட்டு ஸ்டூடியோவுக்குள் இருந்த இளையராஜாவுக்கு சொந்தமான உடைமைகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில், சென்னை தியாகராயநகரில் உள்ள எம்.எம். பிரிவியூ தியேட்டரை, தற்போது தனது புதிய ரிக்கார்டிங் ஸ்டூடியோவாக இளையராஜா மாற்றி இருக்கிறார். இந்த ஸ்டூடியோவில் முதல் முறையாக வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கான பாடல் பதிவை இளையராஜா இன்று தொடங்குகிறார்.

இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடிக்கிறார். சூரி போலீஸ் கதாபாத்திரத்தில் வருகிறார். விஜய்சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குனர் வெற்றிமாறன், இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை தயாரித்த போனி கபூர், விரைவில் இயக்குனராக உள்ளாராம்.
பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் போனி கபூர். இவர் தற்போது தென்னிந்திய மொழி படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவகையில், தமிழில் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தயாரித்தார். தற்போது அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தையும் அவரே தயாரிக்கிறார்.

இந்நிலையில், விரைவில் இயக்குனராக உள்ளதைப் பேட்டியொன்றில் உறுதிப்படுத்தியுள்ளார் போனி கபூர். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: “எனக்கு திரைப்படம் இயக்க விருப்பம். 25 வயதில் இருந்து திரைப்படங்கள் தயாரித்து வருகிறேன். இது நான் படம் இயக்குவதற்கான நேரம் என்று நினைக்கிறேன். விரைவில் அது நடக்கும் என நம்புகிறேன்”. இவ்வாறு போனி கபூர் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ், அவரின் தந்தை திடீரென மரணமடைந்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில், இறுதிப்போட்டி வரை முன்னேறி இரண்டாம் இடம் பிடித்தார். இந்நிலையில், பாலாஜியின் தந்தை திடீரென மரணமடைந்துள்ளார். இதையறிந்த ரசிகர்கள் பாலாஜிக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக ஆறுதல் கூறி வருகின்றனர்.
இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பாலாஜி, இதுவும் கடந்து போகும் என குறிப்பிட்டுள்ளார். பாலாஜியின் தந்தை மறைவிற்கு சக பிக்பாஸ் போட்டியாளர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாலாஜியின் அம்மா சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கேஜிஎஃப் 2 படம் ரிலீஸ் அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் 'கேஜிஎஃப்'. இப்படம் பிரம்மாண்டமான வசூல் சாதனை செய்தது. தற்போது இந்த படத்தின் 2வது பாகம் உருவாகி வருகிறது.

இதில் யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா தண்டன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் ஜூலை 16 ஆம் தேதி படம் வெளியாகிறது என்று படக்குழு அறிவித்தது. இந்நிலையில், படம் வெளியாகும் அன்று தேசிய விடுமுறை அளிக்கக்கோரி யாஷ் ரசிகர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள்.

கடிதத்தில், கேஜிஎஃப் 2 ஜூலை 16 வெள்ளிக்கிழமை வெளியாகிறது. இத்திரைப்படத்தை காண மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே, படம் வெளியாகும் அன்று தேசிய விடுமுறை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் உணர்வுகளை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இது படம் அல்ல. எங்கள் உணர்வு' என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் 10 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து முடித்து ஐதராபாத் திரும்பி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு நீண்ட தூர பைக் பயணத்தைத் அஜித் தொடங்கினார். தனக்கு மிக நெருங்கிய நண்பர்களுடன் இந்த பயணத்தைத் திட்டமிட்டு இருந்தார். எந்த வழியாக எங்குச் சென்றார் என்பது உள்ளிட்ட விவரங்கள் அனைத்துமே ரகசியமாக வைக்கப்பட்டது.

தற்போது பைக் பயணத்தை முடித்துவிட்டு, ஐதராபாத் திரும்பியுள்ளார் அஜித். இதில் அஜித்துடன் பயணித்த தினேஷ் குமார் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுக் கூறியிருப்பதாவது:
"அஜித் அவர்கள், நம்ம தல, சென்னை - கோவை -சென்னை - ஹைதராபாத் - வாரனாசி - காங்டாக் - லக்னோ - அயோத்யா - ஹைதராபாத் - சென்னை என 10,000 கிலோமீட்டருக்கும் அதிகமான பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டார். என் வாழ்க்கையில் நான் சந்தித்ததிலேயே மிகவும் பணிவான நபர் அஜித் அவர்கள்தான். சுத்தமான தங்கம்'
இவ்வாறு தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்காக சிம்பு நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.
கொரோனா ஊரடங்கில் தனது உடல் எடையை முழுவதுமாகக் குறைத்து புதிய தோற்றத்துக்கு மாறிய சிலம்பரசன், சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்தார். அடுத்ததாக வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்காக புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த புதிய படத்தை சிங்கார வேலன் தயாரிக்கிறார். வானம் படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமாகி புகழ்பெற்ற ஞானகிரி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

இதற்கான படப்பிடிப்பு விரைவில் துவக்கப்பட்டு இந்த ஆண்டே படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் சின்னத்திரை பிரபலம் ஒருவர் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சாமி, சிங்கம், வேல், ஆறு, பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஹரி, அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், யோகிபாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

சமீபத்தில், கே.ஜி.எப். படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திர ராஜு, இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

இந்நிலையில் சின்னத்திரையில் கலக்கி வரும் குக் வித் கோமாளி புகழ் இந்த படத்தில் இணைந்து இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், எல்லோரையும் போல் நானும் நம்புகிறேன் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியானது. தயாரிப்பு தரப்பின் இந்த முடிவால் தனுஷ் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், ரசிகர்களும் ஓடிடி வெளியீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால், படத்தை ஓடிடி-யில் வெளியிடும் தினத்தன்றே தியேட்டர்களிலும் வெளியிடலாமா என தயாரிப்பாளர் யோசித்து வருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் நடிகர் தனுஷ், எல்லோரையும் போல் நானும் ’ஜகமே தந்திரம்’ தியேட்டரில் வரும் என நம்புகிறேன் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நகராட்சி ஊழியர்களால் துன்புறுத்தப்பட்ட ஆதரவற்ற முதியவர்களுக்கு ஆதரவாக சோனு சூட் களமிறங்கி இருக்கிறார்.
கொரோனா ஊரடங்கு நேரத்தில் பிற மாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி சிக்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அவரவர் சொந்த ஊருக்குத் திரும்ப சோனு சூட் போக்குவரத்து உதவிகளைச் செய்தார். தொடர்ந்து மாணவர்களுக்கும், ஏழைகளுக்கும் ஏராளமான உதவிகளைச் செய்து வருகிறார். இதனால் சமூக வலைதளங்களில் பலரும் அவரை ஒரு சூப்பர் ஹீரோவாக புகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆதரவற்ற முதியவர்கள் சிலரை நகராட்சி ஊழியர்கள், ஒரு லாரியில் அடைத்து இந்தூர் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு நெடுஞ்சாலை அருகே முரட்டுத்தனமாக இறக்கிவிடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.

இதைப்பார்த்த சோனு சூட், ''சில முதியவர்களை நகரிலிருந்து கொண்டு போய் புறநகர்ப் பகுதியில் இறக்கி விடுவதாக ஒரு செய்தி என் கண்ணில் பட்டது. அவர்களுக்கு ஒரு வீட்டை உருவாக்கித் தர இந்தூரில் இருக்கும் சகோதர, சகோதரிகள் உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவர்களுடைய உரிமையை அவர்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன். மேலும், அவர்களுக்கு உண்ண உணவும், குடிக்கத் தண்ணீரும், தங்க வீடும் வழங்க விரும்புகிறேன். உங்களுடைய உதவி இல்லாமல் இதை என்னால் செய்ய இயலாது. வயதான தங்கள் பெற்றோரைக் கைவிடும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும்''
இவ்வாறு சோனு சூட் கூறியுள்ளார்.
ஐதராபாத்தில் நடிகர் அஜித்தை நேரில் பார்த்த ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் எப்போது என்று கேட்டிருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது.

எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக படக்குழு எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஐதராபாத்தில் அஜித்தை கண்ட ரசிகர்கள் சிலர் வலிமை அப்டேட் எப்போது வரும் என்று கேட்டுள்ளனர். அதற்கு அஜித் மிக விரைவில் என பதிலளித்துள்ளார். இதனால் ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். வலிமை படத்தின் அப்டேட் குறித்து அஜித்தே வாய்திறந்து பேசியது ரசிகர்களை மிகுந்த உற்சாகப் படுத்தி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகர் கவின், விஜயின் மாஸ்டர் லுக்கிற்கு மாறிய புகைப்படம் சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.
சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தின் மூலம் வெளிவுலகுக்கு அறிமுகமானவர் கவின். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பல ரசிகர்களை பெற்றார்.


இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கவின், மாஸ்டர் விஜய் கெட்டப்பில் செக்கெட் சர்ட் அணிந்து சென்று இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஐடி கார்டு, ஹெட் செட் போட்டு விஜய் தோற்றத்திற்கு மாற்றி இருக்கிறார்கள். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் பிரபலமான நடிகர் அசீம், தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக அறிவித்து இருக்கிறார்.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 'பகல் நிலவு' சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் நடித்த அசீம் மற்றும் ஷிவானி இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியலுக்குப் பின் ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் அதிக அளவு பிரபலமடைந்தார்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அசீம் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் நடிகர் அசீம் சமூக வலைத்தள பக்கத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் 'அனைவருக்கும் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன். நாங்கள் சட்டப்படி பிரிந்து விட்டோம். எங்கள் இருவரின் பரஸ்பர விருப்பத்தின் பேரில் நீதிமன்றத்தால் விவாகரத்து செய்ய பட்டிருக்கிறோம். தயவுசெய்து எங்கள் திருமண நிலை குறித்து எந்த ஒரு தனிப்பட்ட கேள்விகளும் கேட்க வேண்டாம்' என பதிவிட்டுள்ளார்.






