என் மலர்
சினிமா செய்திகள்
ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன், ஆனந்தி நடித்துள்ள ‘டைட்டானிக்: காதலும் கவுந்துபோகும்’ படத்தின் முன்னோட்டம்.
ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டைட்டானிக்: காதலும் கவுந்துபோகும்'. சி.வி.குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.
படம் குறித்து தயாரிப்பாளர் சிவி.குமார் கூறியதாவது: 'டைட்டானிக்' படம் தொடங்கி 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார்கள். இந்தப் படத்தின் கதைக்கு அவ்வளவுதான் தேவைப்பட்டது. அந்த 25 நாட்களிலேயே சுமார் 60 நாட்களுக்கான செலவு பண்ணினார்கள். இந்தக் கதையைப் படிக்கும்போது 'ஆண் பாவம்' படம் ஞாபகம் வந்தது. அந்தத் தலைப்பைக் கேட்டேன், தரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள்.

பள்ளிக் காதல், கல்லூரிக் காதல், வேலைக்குச் செல்லும்போது உள்ள காதல், திருமணத்துக்குப் பிறகான காதல் என 4 காதல்கள் படத்தில் உள்ளன. ஒரு ஜாலியான படமாக இருக்கும்.'ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் ஒரு வேலை முடியும் என்றால், அதற்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் நீ பெரிய ஆளல்லை. ஒரு கோடி ரூபாய் வேலையை 10 லட்ச ரூபாயில் முடித்தால்தான் நீ பெரிய ஆள்' என்று அப்பா சொல்வார். அதைத்தான் நான் செய்து வருகிறேன்”. என கூறினார்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் சலார் படத்தில் பிரபல நடிகர் வில்லனாக நடிக்க உள்ளாராம்.
கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்க உள்ளார். தெலுங்கில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில், பிரபல கன்னட நடிகர் மது குருசாமி சலார் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளாராம். இதனை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார். இவர் கன்னடத்தில் வெளியான முப்டி, வஜ்ரகயா போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். நடிகர் மது குருசாமி பிரபாசுடன் நடிப்பது இதுவே முதன்முறை.
பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன், தயாரித்து, நடித்த நட்கட் என்கிற குறும்படம் ஆஸ்கர் விருதுக்கான ரேஸில் நுழைந்துள்ளது.
பெங்காலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வித்யா பாலன். அதன்பின் இந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஒருகட்டத்தில் உடல் எடை கூடியதால் சில படங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டார். பின்னர் டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்து தேசிய விருது வென்ற வித்யா பாலன் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரானார். அதேபோல் தமிழில் நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து தமிழ் ரசிகர்க்ளை கவர்ந்தார்.

இந்நிலையில், வித்யா பாலன் தயாரித்து நடித்துள்ள, நட்கட் என்கிற குறும்படம் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆஸ்கர் விருது விழாவில், சிறந்த குறும்படம் என்கிற பிரிவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. பாலியல் சமத்துவம் பற்றி பேசியுள்ள இந்த குறும்படம், ஏற்கனவே சிறந்த இந்திய குறும்படத்துக்கான விழாவில் முதல் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டெலிடெட் சீன் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான படம் மாஸ்டர். கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது. கொரோனா பரவலுக்கு பிறகு திரையரங்கில் வெளியான முதல் பெரிய படம் என்பதால் அமோக வரவேற்பை பெற்றது.
இப்படம் வெளியான 16 நாட்களிலேயே ஓடிடி-யில் வெளியிடப்பட்டாலும், திரையரங்கிலும் தொடர்ந்து வரவேற்பு கிடைத்தது. தற்போது இப்படம் வெற்றிகரமாக 25 நாட்களை எட்டியுள்ளது. இதையொட்டி நேற்று, மாஸ்டர் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்டனர். சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோ தற்போது யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
HERE'S THE EXCLUSIVE DELETED SCENE FROM THE MOVIE! #MasterOnPrime@actorvijay@VijaySethuOffl@MalavikaM_@andrea_jeremiah@imKBRshanthnu@iam_arjundas@Dir_Lokeshpic.twitter.com/oZ5zAkEYME
— amazon prime video IN (@PrimeVideoIN) February 6, 2021
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'லூசிபர்'. மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் மோகன்லால் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார்.
இப்படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்க உள்ளார். இதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. ரீமேக் படமாக இருந்தாலும் அதில் சில மாற்றங்களை செய்துள்ளார் இயக்குனர், குறிப்பாக சிரஞ்சீவிக்கு இப்படத்தில் காதல் காட்சிகள் இணைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க நடிகை திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரிஷாவும், சிரஞ்சீவியும் கடைசியாக கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ஸ்டாலின் என்கிற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அதேபோல் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகை திரிஷா ஏற்கனவே உனக்கும் எனக்கும் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் பிரபாஸ், விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
தெலுங்கு பட உலகில் முன்னணி நாயகனாக வலம் வரும் பிரபாஸ், பாகுபலி படத்தின் மூலம் இந்திய சினிமாவிலும் பிரபலமாகினார். தற்போது ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
பாகுபலி படத்தில் நடிக்கும் போது, பிரபாசுக்கும், அனுஷ்கா ஷெட்டிக்கும் காதல் ஏற்பட்டதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் கிசுகிசுக்கள் வெளியானது. அதனை இருவருமே மறுத்து நட்பாகத்தான் பழகுகிறோம் என்று தெளிவுபடுத்தினர்.

இந்நிலையில் பிரபாஸின் திருமணம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மென்பொருள் நிறுவனம் நடத்தி வரும் பிரபல தொழிலதிபரின் மகளுடன் பிரபாசுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
சூர்யா தயாரிப்பில் சரவ் சண்முகம் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் மூன்று தலைமுறை நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.
ஒரே குடும்பத்திலிருந்து மூன்று தலைமுறையை சேர்ந்த நடிகர்கள் இணைந்து நடிப்பதென்பது நம் இந்திய திரைஉலகிலேயே அரிதான நிகழ்வாகும். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்னவ் விஜய் ஆகிய மூவரும் இணைந்து பிரபல நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்கள். சரவ் சண்முகம் இப்படத்தை இயக்குகிறார்.
இது குறித்து படத்தின் இயக்குநர் சரவ் சண்முகம் கூறியதாவது: சமீபத்தில் தான் அருண் விஜய், ஆர்னவ் விஜய்க்கு தந்தையாக நடிப்பது குறித்து பெருமையாக பகிர்ந்திருந்தேன் இப்போது தமிழ் சினிமாவில் பல சாதனைகள் படைத்திருக்கும் மூத்த நடிகர் விஜய குமார் அவர்கள் எங்கள் படத்தில் இணைந்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது.

அதிலும் ஒரே குடும்பத்தில் இருந்து மூன்று தலைமுறை நடிகர்கள் எங்கள் படத்தில் மூலம் இணைவது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. அருண் விஜய் போன்று விஜய குமார் அவர்களுக்கு கதை சொல்வது அத்தனை எளிதாக இல்லை. அவரது கதாப்பாத்திரம் குறித்தும் படத்தில் அதற்குரிய முக்கியத்துவம் குறித்தும் அவருக்கு விளக்கி கூறினேன்.
இது குடும்ப படம் என்பதாலும் உணர்வுபூர்வமான நிறைய சம்பவங்கள் அவரது கதாப்பத்திரத்தை சுற்றி நடப்பதாலும், படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். படம் மிக அழகாக உருவாகி வருகிறது. குழந்தைகளின் உலகை மையமாக வைத்து உருவாகும், இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் நடிகர் அருண் விஜய் அவர்களின் 32 வது படமாகும். இப்படம் முழுக்க ஊட்டியில் படமாக்கப்படுகிறது.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெப்சி எனும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படும். அதன்படி வருகிற 2021-23ம் ஆண்டிற்கான தேர்தல் வருகிற பிப்.14-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தலைவராக இருக்கும் ஆர்.கே.செல்வமணி மீண்டும் அதே பதவிக்கு போட்டியிட்டார்.

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணியை தவிர்த்து யாரும் போட்டியிடாததால், தற்போது அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் பொதுச்செயலாளராக அங்கமுத்து சண்முகம், பொருளாளராக சுவாமிநாதன் ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பண மோசடி புகார் தொடர்பாக பிரபல இந்தி நடிகை சன்னி லியோனிடம் கொச்சி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
கொச்சி:
29 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக எழுந்த புகாரில் பிரபல இந்தி நடிகை சன்னி லியோனிடம் கொச்சி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். கொச்சி உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ச்சிகள் நடத்தும் அமைப்பின் தலைவர் ஆர்.ஷியாஸ் என்பவர், அம்மாநில டி.ஜி.பி.யிடம் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 29 லட்சம் ரூபாய் பணம் வாங்கிவிட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்க வரவில்லை என சன்னி லியோன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சன்னி லியோனிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஷியாசிடம் மேலும் தகவல்களை பெற்று விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
தன் மீதான குற்றச்சாட்டை சன்னி லியோன் மறுத்துள்ளார். நிகழ்ச்சிகளில் பங்கேற்க தேதி கொடுத்து, அதற்கான பணம் பெற்றுக் கொண்டதாகவும், ஆனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அதனை முறையாக பயன்படுத்தவில்லை எனவும் சன்னி லியோன் கூறியிருக்கிறார். போட்டி ஏற்பாட்டாளர்கள் மீண்டும் தேதி குறித்தால், நிகழ்ச்சியில் பங்கேற்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு உருவான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாகவும், ரெஜினா மற்றும் நந்திதா கதாநாயகிகளாகவும் நடித்துள்ளனர். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ரெஜினா பேயாக நடித்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு அரவிந்த கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் போஸ்டர், பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இப்படம் எடுக்கப்பட்டு 5 வருடங்கள் ஆனாலும், சில காரணங்களால் இன்று வரை ரிலீசாகாமல் உள்ளது.
இந்நிலையில், இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதன்படி வருகிற மார்ச் மாதம் முதல் வாரத்தில் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் நெப்போலியன் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தில், பிரபல நடிகருக்கு தாத்தாவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இசை அமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் அடுத்ததாக நடிக்கும் படம் அன்பறிவு. இப்படத்தை அஸ்வின் ராம் இயக்குகிறார். ஹீரோயினாக காஷ்மிரா பர்தேசி நடிக்கிறார். அஜித்தின் விவேகம், விஸ்வாசம் போன்ற படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தில் நடிகர் நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் நெப்போலியன், இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதியின் தாத்தாவாக நடிக்கிறாராம். கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக அன்பறிவு உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி தான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
"என் மனைவியின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால், நான் இந்த அளவுக்கு முன்னேறி இருக்க முடியாது'' என்று டைரக்டர் கே.பாலசந்தர் கூறினார்.
"என் மனைவியின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால், நான் இந்த அளவுக்கு முன்னேறி இருக்க முடியாது'' என்று டைரக்டர் கே.பாலசந்தர் கூறினார்.
அவர் ஒரு கட்டுரையில் மனைவி ராஜம் பற்றி கூறியிருப்பதாவது:-
"ஆரம்பத்தில் இருந்தே என் மனைவியின் மனப்பூர்வமான ஒத்துழைப்பு எனக்கு கிடைக்காமல் இருந்திருந்தால், நான் இவ்வளவு தூரம் சிறப்பு அடைந்திருக்க முடியாது. அப்போது இவள் செய்ததை `தியாகம்' என்றே சொல்லவேண்டும்.
எங்களுக்குத் திருமணம் நடந்த நாள் 31-5-1956. தஞ்சை மாவட்டத்தின் நன்னிலத்தில் இருந்த என்னையும், பல மைல்களுக்கு அப்பால் திருவனந்தபுரத்தில் இருந்த ராஜத்தையும் திருமணம் ஒன்று சேர்த்தது.
பெண் பார்த்துவிட்டு வந்த என் அண்ணன், "பார்ப்பதற்கு குமாரி கமலா மாதிரி இருக்கிறாள்'' என்றார். 18 வயது பாவையான ராஜம் என்னை கைப்பிடித்தபோது, நான் ஏ.ஜி.எஸ். ஆபீஸ் குமாஸ்தா. என்னுடைய இப்போதைய வளர்ச்சியை இவள் அப்போது கனவில் கூட கற்பனை செய்திருக்க முடியாது.
எனக்கு முதல் காதல் நாடகத்தின் மீதுதான். மனைவி, குடும்பம் எல்லாம் அப்புறம்தான். என் பெரும்பாலான இரவுகளை ஏ.ஜி.எஸ். ஆபீஸ் விழுங்கி விடும். புதிதாகத் திருமணம் ஆன இளம் தம்பதியாகிய நாங்கள் உல்லாசமாகப் பயணம் போவதோ, சினிமா பார்ப்பதோ, வெளியில் எங்காவது சென்று வருவது அவசியம் என்பது கூட என் மனதில் தோன்றாத அளவுக்கு அசுர உழைப்பு உழைத்து விட்டு வந்து படுக்கையில் விழுவேன்.
இப்படியிருக்க, நாங்கள் இருவரும் சேர்ந்து வெளியே செல்ல நேரம் ஏது? ஆனால் இவள் கொஞ்சமாவது முகம் சுளித்தது இல்லை. குடும்பப் பொறுப்புகளையும் என் கண்ணில் காட்டியதில்லை. அதனால்தான் என் முழு கவனத்தையும், கலைத்துறைக்குத் திருப்ப முடிந்தது.
அன்று முதல் இன்று வரை, குடும்பப் பிரச்சினைகள் எதுவும் என் காதுக்கோ, கவனத்துக்கோ வராதபடி பார்த்துக் கொள்வதில் இவள் மிகவும் சாமர்த்தியசாலி. அந்த மாதிரி தொல்லைகளை எல்லாம் தன் தோளிலேயே தூக்கிப்போட்டுக்கொள்வாள்.
குடும்பம், கணவன், குழந்தைகள் என்ற வட்டத்துக்குள்ளேயே சுழன்றால் போதும் என்ற மனோபாவம் கொண்டவள். அநாவசியமான நண்பர் குழாம், வம்பு பேச்சுக்கள், ஆடம்பரம், போலி கவுரவம், நகை ஆசைகள் இவை அனைத்துமே அவள் அகராதியில் இடம் பெறுவதில்லை.
கணவன் எடுத்த திரைப்படம் என்பதற்காக, `ஓகோ' என்றெல்லாம் புகழ்வதில்லை. தனக்குப் பிடிக்கவில்லை என்றால், "பிடிக்கவில்லை''தான். வழவழ கொழகொழ வெல்லாம் கிடையாது.
அலங்காரம், அலங்கார வார்த்தைகள், அகங்காரமான எண்ணங்கள் - இவை என்னவென்றே தெரியாதவள், அக்கவுண்டண்ட் ஜெனரல் அலுவலக குமாஸ்தாவின் மனைவியாக இருந்தபோதும் சரி, பிரபலமான திரைப்பட இயக்குனரின் மனைவியாக இருக்கும்போதும் சரி, அவள் "அவளாகவே இருக்கிறாள்.''
இவ்வாறு பாலசந்தர் குறிப்பிட்டுள்ளார்.
பாலசந்தரின் மனைவி ராஜம், தன் கணவர் பற்றி ஒரு கட்டுரையில் எழுதியிருப்பதாவது:-
"எங்கள் கல்யாணம் ஜாதகப் பொருத்தம் பார்த்துப் பெரியவர்கள் செய்து வைத்ததுதான். எனக்குப் பாலக்காடு சொந்த ஊர். அப்பா ஹெல்த் இன்ஸ்பெக்டராகப் பல ஊர்களில் வேலை பார்த்தவர்.
என் திருமணம் நாகர்கோவிலில் நடந்தது. திருமணமானவுடனேயே சென்னையில் கோபாலபுரத்தில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினோம். அங்கு பல ஆண்டுகள் வசித்தோம்.
அந்த நாளிலும் சரி, இப்போதும் சரி அவர் வீட்டில் பகல் நேரத்தில் அதிக நேரம் இருப்பதில்லை. பட விஷயமான வேலைகளைக் கவனிக்க வெளியே சென்று விடுவார். இரவில் படுக்க எவ்வளவு நேரமானாலும் சரி, காலையில் ஆறு மணிக்கு மேல் தூங்க மாட்டார். எழுந்ததும் உடனே பல் தேய்த்துவிட்டு, ஒரு கப் காபி குடித்தவுடன் தான் மற்ற வேலைகளைக் கவனிப்பார்.
முன்பெல்லாம் தினமும் விடியற்காலையில் கடற்கரைக்குச் சென்று குறைந்தது இரண்டு மைல்களாவது வாக்கிங் போவார். இப்போது போவதில்லை. ஏனென்றால் இப்போது அவருக்கு ஏது ஓய்வு நேரம்?
முன்பு இவருக்கு அதிகமாக கோபம் வரும். அப்படி கோபம் வரும்போது இவர் எதிரில் யாரும் போகமாட்டோம். ஆனால் வந்த வேகத்திலேயே அது மறைந்து போய் விடும். இப்போதெல்லாம் இவருக்கு வீட்டில் கோபம் வந்து பார்ப்பது ரொம்ப அபூர்வம்.
வீட்டில் அவருடைய புத்தகங்களோ மற்றும் பேனா பேப்பர் போன்ற பொருள்களோ அவர் வைத்த இடத்தில் அப்படியே இருக்க வேண்டும். அவை அவர் தேடும்போது இடம் மாறிவிட்டால் அவருக்குப் பிடிக்காது.
பலருடைய பாடல்களை டேப்புகளில் ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கிறார். எப்பொழுதாவது அபூர்வமாகப் பொழுது போகாமல் வீட்டில் இருக்கும்போது தமக்குப் பிடித்த பாடல்களைப் போட்டுக் கேட்டுக்கொண்டிருப்பார். பாட்டுக் கச்சேரிக்கோ, கதா காலட்சேபங்களுக்கோ போக அவருக்கு நேரம் கிடைப்பதில்லை. போக வேண்டும் என்ற ஆசை நிறைய உண்டு. `டேப்பின்' மூலம் அந்த ஆசையை நேரம் கிடைக்கும்போது நிறைவேற்றிக் கொள்கிறார்.
அவர் சினிமாவுக்காக, தான் எழுதிய கதையைப் பற்றி என்னிடம் அபிப்ராயம் எதுவும் கேட்க மாட்டார். பொதுவாக யாரிடமுமே அவர் கேட்பதில்லை. முன்பெல்லாம் படம் மூவாயிரம் அல்லது நாலாயிரம் அடி வளர்ந்த பிறகு என்னை அழைத்துக்கொண்டு போய் படத்தைப் போட்டுக் காண்பிப்பார். அப்போதும்கூட என்னுடைய அபிப்பிராயத்தைக் கேட்கமாட்டார். இப்போது படம் முடிந்து வெளியிடப்பட இருக்கும் சமயத்தில்தான் வீட்டில் எல்லோரையும் அழைத்துக்கொண்டு போய் படத்தைக் காண்பிக்கிறார்.
புதுப்படம் ஆரம்பிக்கும் நாளில் கூட இவர் எவ்வித டென்ஷனும் இல்லாமல் என்றும் போலவே இருப்பார். அதேபோல இவர் டைரக்ட் செய்த புதுப்படம் ரிலீஸ் ஆகும் அன்றும் இவர் சாதாரணமாகவே இருப்பார். அதற்காக ஸ்பெஷலாகக் கோவிலுக்குப் போவதோ, பூஜை செய்வதோ அதெல்லாம் இவரிடம் கிடையாது. மனதிற்குள்ளே கடவுளை வேண்டிக்கொள்வார் என்று நினைக்கிறேன். செய்யும் தொழிலே தெய்வம் என்று சுறுசுறுப்பாய்ப் பணியாற்றும் இவர், வெளிப்படையாக கடவுளிடம் எதையும் வேண்டிக்கொண்டதை நான் பார்த்ததில்லை.
ரசிகர்களிடமிருந்து இவருக்கு நிறையக் கடிதங்கள் வருகின்றன. அவற்றிற்கு உடனுக்குடன் பதில் எழுத நேரம் கிடையாது. ஆனால் இனிமேலும் சேர்ந்தால் சமாளிக்க முடியாது என்கிற அளவிற்கு கடிதங்கள் குவிந்து விடும் பொழுது ஒரே நாளில் எல்லாவற்றையும் பார்த்து முக்கியமான கடிதங்களுக்குப் பதில் எழுதி விடுவார்.
எதையும் செய்யாமல் ஒரு நிமிடம் கூட சும்மா உட்கார இவரால் முடியாது. இதனால் இவர் காரில் ஏறிக்கொண்டால் கார் வேகமாகப் போகவேண்டும். டிரைவரிடம் சீக்கிரமாகப் போகும்படி சொல்வார். முன்பு இவரே டிரைவிங் செய்து கொண்டிருந்தார். இவர் ஓட்டும்பொழுது வேகமாக ஓட்டுவார். இவர் இப்போது காரை ஓட்டுவதில்லை.
இவ்வாறு ராஜம் பாலசந்தர் கூறியுள்ளார்.






