என் மலர்
சினிமா செய்திகள்
சித்தி 2 தொடரிலிருந்து ராதிகா விலகியதை தொடர்ந்து அவரது வேடத்தில் நடிக்க இரண்டு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பிரபல நடிகையான ராதிகா சித்தி 2 தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அந்த தொடருக்கே அடையாளமாக இருந்த ராதிகா இல்லாமல் தொடரை எப்படி தொடர்வது என்ற யோசனையில் படக்குழு யோசனையில் இருக்கிறார்கள்.

ராதிகா இல்லாமல் ஒரு குறிப்பிட்ட வாரம் ஒளிபரப்பி அதற்கான வரவேற்பைப் பொறுத்து அதன் பின்னர் தொடரலாமா இல்லை சீரியலை நிறுத்தி விடலாமா என்ற யோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இப்போது ராதிகா வேடத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் மற்றும் மீனா ஆகியோரிடம் பேசி வருவதாக சொல்லப்படுகிறது. இருவரும் இன்னமும் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நிலையில் மிகப்பெரிய அளவில் சம்பளம் கொடுத்தாவது இருவரில் ஒருவரை நடிக்க சம்மதிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்கள்.
யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் காமெடி, திரில்லர் கலந்த ஹாரர் படமாக உருவாகும் 'கங்காதேவி' படத்தின் முன்னோட்டம்.
'ஸ்ரீகருணை ஆனந்தா மூவிஸ்' தயாரிப்பில், இயக்குநர் ராகவா லாரன்ஸிடம் உதவி இயக்குநராக இருந்து, 'சண்டிமுனி' படத்தை இயக்கியதன் மூலம் கவனம் ஈர்த்த மில்கா செல்வகுமார் இயக்கும் புதிய படத்துக்கு 'கங்காதேவி' என பெயரிடப்பட்டுள்ளது. யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில், முன்னணி நடிகை ஒருவர் ஹீரோயினாகவும், வில்லனாக 'சூப்பர்' சுப்புராயனும் நடிக்கவிருக்கிறார்கள்.
இவர்களோடு சாம்ஸ், ஆர்த்தி கணேஷ் என நகைச்சுவை நடிகர்கள் பலரும் இணைகிறார்கள். 'காக்கா முட்டை' பட இயக்குநர் மணிகண்டனின் உதவியாளர் டி. சுரேஷ் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணிபுரிகிறார்.

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: ''ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதை. அதுவும் கங்கா - தேவின்னு இரட்டை வேடம். குறிப்பிட்ட ஒரு விளையாட்டை மையப்படுத்தி, சஸ்பென்ஸ், திரில்லர், ஹாரர், காமெடி எல்லாமும் கலந்து திரைக்கதை உருவாக்கியிருக்கோம். 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் மாதிரி பூர்வஜென்ம கதையும் பின்னிப் பிணைஞ்சிருக்கும்.
குடும்பத்தோட சிரிச்சு ரசிக்கிற படமா இருக்கும். ரொம்பப் பெரிய இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்கப் போறார். அது பத்தியெல்லாம் அடுத்த மாசம் ஷூட்டிங் தொடங்குறப்போ சொல்றோம்'' என்றார்.
முரளி கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து வரும் ‘மோகன் தாஸ்’ படத்தில் பிரபல மலையாள நடிகர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் அடுத்ததாக நடிக்கும் படம் மோகன் தாஸ். களவு படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இப்படத்தை இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். உண்மைக்கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் ஒப்பந்தமாகி உள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் நரகாசூரன் படத்தில் நடித்திருந்தார். அப்படம் இன்னும் ரிலீசாகவில்லை. அதேபோல் கவுதம் மேனன் இயக்கிய குயின் வெப் தொடரில் எம்.ஜி.ஆராக நடித்திருந்தது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
‘மாஸ்டர்’ படம் மக்களை திரையரங்கிற்கு வரவழைத்தது போல், பாலிவுட்டிலும் ஒரு திரைப்படம் வரவேண்டும் என பிரபல இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள், 50 சதவீத இருக்கைகள் அனுமதியுடன் நவம்பர் மாதமே மீண்டும் திறக்கப்பட்டாலும், பெரிய படங்கள் எதுவும் ரிலீசாகாததால் களையிழந்து காணப்பட்டன. அதற்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் பொங்கலுக்கு ரிலீசான படம் தான் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. வசூலையும் வாரிக் குவித்தது.
இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் பாசு சமீபத்திய பேட்டியில், “தெற்கில் ‘மாஸ்டர்’ படம் வெளியாகி மக்களை திரையரங்கிற்கு வரவழைத்தது போல், பாலிவுட்டிலும் ஒரு திரைப்படம் வரவேண்டும். அப்படி வந்தால் தான் இங்கும் திரையரங்குக்கு பொதுமக்கள் வருவார்கள் என கூறியுள்ளார்.

மேலும் தான் இயக்கிய ‘லூடோ’ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட முயற்சி செய்ததாகவும், அது முடியாததால் வேறு வழியின்றி ஓடிடியில் வெளியிட உள்ளதாகவும் அனுராக் பாசு தெரிவித்துள்ளார்.
13 ஆண்டுகளுக்கு பின் படம் இயக்கும் பிரபல இயக்குனர், அப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம்.
மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலமானவர் இயக்குனர் திருமுருகன். இவர் பரத், கோபிகா மற்றும் நாசர் நடிப்பில் உருவான எம் மகன் படம் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் குடும்பங்கள் கொண்டாடிய வெற்றிப் படமாக அமைந்தது.
இதையடுத்து மீண்டும் பரத்தை வைத்து முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தை 2008-ம் ஆண்டு இயக்கினார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. இதனால் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி நாதஸ்வரம் உள்ளிட்ட தொடர்களை இயக்கினார்.

இந்நிலையில், இயக்குனர் திருமுருகன் தற்போது மீண்டும் படம் இயக்க தயாராகி வருகிறார். இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. திருமுருகன் இயக்கிய இரண்டு படங்களிலும் வடிவேலுவின் நகைச்சுவை பெரிதும் வரவேற்பை பெற்றது.
இதனால் தற்போது இயக்க உள்ள புதிய படத்திலும் வடிவேலுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். குடும்பங்கள் கொண்டாடும் படமாக உருவாக உள்ள இதை, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள ‘டெடி’ படத்தின் ஓடிடி ரிலீஸில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘டெடி’. இப்படத்தை டிக் டிக் டிக், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் போன்ற படங்களை இயக்கிய சக்தி சவுந்தரராஜன் இயக்கியுள்ளார். இதில் ஆர்யாவிற்கு ஜோடியாக அவரது மனைவி சாயிஷா நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில், சதீஷ், கருணாகரன், சாக்ஷி அகர்வால், பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். காமெடி கலந்த திகில் படமாக இது உருவாகி உள்ளது.
முதலில் இப்படத்தை வருகிற மார்ச் 19-ந் தேதி ஓடிடி-யில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் தற்போது அதற்கு ஒரு வாரம் முன்னதாகவே, அதாவது வருகிற மார்ச் 12-ந் தேதியே ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படத்தின் டீசரைப் பார்த்த தனுஷ் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளார்களாம்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. இப்படத்தை ஏற்கனவே ஓ.டி.டி.யில் வெளியிட முயற்சிகள் நடந்தன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தனுஷ், “தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் எனது ரசிகர்களைப் போல நானும் ‘ஜகமே தந்திரம்’ திரையரங்கில் வெளியாகும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்’’ என்று டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
தனுஷ் ரசிகர்களும் படத்தை ஓ.டி.டி.யில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டினர். இதையடுத்து ‘ஜகமே தந்திரம்’ படத்தை தியேட்டர்களில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்ததாக கூறப்பட்டது.

ஆனால் அதே பட நிறுவனம் தயாரித்த ‘ஏலே’ படம் ஓ.டி.டி.யில் வெளியாவதால் அந்த படத்தை தியேட்டர் அதிபர்கள் திரையிட மறுத்து விட்டனர். இந்த மோதல் போக்கினால் ‘ஜகமே தந்திரம்’ படத்தையும் ஓ.டி.டி. தளத்திலேயே வெளியிட தயாரிப்பு தரப்பில் முடிவு செய்துள்ளனர்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று ஜகமே தந்திரம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த டீசர் தனுஷ் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இந்த டீசரில் நடிகர் தனுஷின் பெயர் குறிப்பிடப்படவில்லையாம். டீசரில் தனுஷ் பெயரை குறிப்பிடாததற்கு தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் தனுஷும் தனது சமூக வலைதள பக்கங்களில் ஜகமே தந்திரம் படத்தின் டீசரை பகிரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மலையாளத்தில் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இப்படத்தை தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர். இதற்கான ரீமேக் உரிமையை இயக்குனர் கண்ணன் கைப்பற்றி உள்ளார். இப்படத்தை அவரே இயக்கவும் உள்ளார். பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் காரைக்குடியில் தொடங்க உள்ளது.
ஒரே நேரத்தில் இரு மொழிகளிலும் எடுக்கப்படுவதால், தமிழ் - தெலுங்கில் புகழ்பெற்ற நடிகையை இதில் நடிக்க வைக்க உள்ளதாக இயக்குனர் கண்ணன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அந்த நடிகை யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளார்களாம்.
இந்தியில் வெற்றி பெற்ற படங்களை தமிழில் ரீமேக் செய்வது என்பது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் சமீப காலமாக தமிழ் படங்களை இந்தியில் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், கைதி, விஜய்யின் மாஸ்டர், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று போன்ற படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் ஆகியோர் நடித்து 2016-ல் திரைக்கு வந்த ‘இருமுகன்’ படத்தையும் இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. இருமுகன் படத்தை இயக்கிய ஆனந்த் சங்கரே அதன் இந்தி பதிப்பையும் இயக்குவார் என்று தெரிகிறது. இதில் நடிக்கப்போவது யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய், மீண்டும் இயக்குனர் அட்லீயுடன் இணைந்து பணியாற்ற சம்மதம் தெரிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் விஜய் நடிக்கும் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே விஜய்யின் 66-வது படத்தை இயக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
தளபதி 66 படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே விஜய்யின் மெர்சல் படத்தை தயாரித்திருந்தது.

இதனிடையே தளபதி 66 படத்தை இயக்க இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லீ இடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில், நடிகர் விஜய், அட்லீயுடன் இணைந்து பணியாற்ற சம்மதம் தெரிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் படங்களை அட்லீ கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷி கண்ணா, தனக்கு வந்த காதல் கடித அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் ராஷி கண்ணா. தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், தனக்கு வந்த காதல் கடித அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது: “நான் கல்லூரியில் படித்த காலத்தில் ஒரு சீனியர் மாணவர் என்னை காதலித்தான். காதல் கடிதம் எழுதி எனக்கு கொடுக்க முயற்சிக்கும் போதெல்லாம் எப்படியோ தப்பித்து விடுவேன். ஆனாலும் ஒருநாள் பின் தொடர்ந்து வந்து தைரியமாக எனது கையில் கடிதத்தை திணித்து விட்டுபோய் விட்டான். ஒரு பூவும் கொடுத்தான்.

எனக்கு முதலில் இருந்தே அவனை பிடிக்கவில்லை. ஆனால் அந்த கடிதத்தில் என்னை வர்ணித்து பெருமையாக எழுதி இருந்ததை படித்ததும் சந்தோஷமாக இருந்தது. அந்த கடிதத்தை வீட்டுக்கு கொண்டு போய் அம்மாவிடம் காட்டினேன். அவரும் இந்த அளவுக்கு உன்னை யாரும் வர்ணித்து இருக்க மாட்டார்கள்.
இத்தனை அழகாக இருக்குறியே. நாங்கள் கூட கவனிக்கவில்லையே. அவனை பிடித்து இருந்தால் சொல்லு’ என்றார் அம்மா. எனக்கு அந்த மாதிரி எண்ணம் இல்லை என்றேன். அதன்பிறகு அவன் என்ன ஆனான் என்று தெரியவில்லை” என்றார்.
நடிகை மீரா மிதுன், தான் சொந்தமாக படம் தயாரிக்க உள்ளதாகவும், விருப்பம் இருந்தால் அதில் நடிக்க வருமாறும் நடிகர் வடிவேலுவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
திரைப்படங்களில் நடிக்க தடை விதித்ததால் ஒதுங்கி இருக்கும் நகைச்சுவை நடிகர் வடிவேல் சமீபத்தில் வாட்ஸ் அப் குழு நண்பர்கள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசும்போது, “நான் நடிக்காமல் 10 வருடங்களாக வீட்டில் முடங்கி கிடப்பது பெரிய ரணம். எனது உடலில் தெம்பு இருக்கிறது. நடிக்கவும் ஆசை இருக்கிறது. ஆனால் யாரும் வாய்ப்பு தரவில்லை'' என்றார். வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்ற பாடலை பாடியும் கண்கலங்கினார்.
அதைப் பார்த்து வருந்திய நடிகை மீரா மிதுன் வெளியிட்டுள்ள வீடியோவில், “வடிவேலுவின் சமீபத்திய பேச்சுகள், பேட்டிகளை பார்த்தேன். வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்று வருத்தப்பட்டு இருந்தார். எப்போதும் வெற்றிகரமான ஒரு மனிதரை வஞ்சகமாகவும், மோசடி செய்தும்தான் வீழ்த்துவார்கள். ஆனாலும் யாரையும் யாருமே ஒதுக்க முடியாது. இது எனது வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடம்.

உங்கள் தெனாலிராமன் படம் பார்த்து இருக்கிறேன். அந்த படத்துக்கு நான் பெரிய ரசிகை. நிறைய பேர் நடிப்புக்கான விதிமுறையே தெரியாமல் கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் பெரிய சகாப்தம். கண்கலங்க கூடாது. நான் சொந்தமாக படம் தயாரிக்கிறேன். எனது படத்தில் உங்களுக்கு நடிக்க விருப்பம் இருந்தால் நடியுங்கள். பெருமைப்படுவேன்'' என்று கூறியுள்ளார்.






