என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகை ஜெயசித்ரா, "புதிய ராகம்'' படத்தின் மூலம் டைரக்டர் ஆனார்.
    1977-ம் ஆண்டில் ஏ.பீம்சிங் டைரக்ட் செய்த "பாத பூஜை''யில் ஜெயசித்ரா நடித்தார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்தார்.

    ஜெயசித்ராவின் 100-வது படம் "நாயக்கரின் மகள்.'' முதல் படத்தை டைரக்ட் செய்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்தான், 100-வது படத்தையும் இயக்கினார். இதையொட்டி, கோபாலகிருஷ்ணனுக்கு மோதிரம் அணிவித்து வாழ்த்து பெற்றார், ஜெயசித்ரா.

    பிற்காலத்தில், டைரக்டர் மணிரத்தினத்தின் "அக்னி நட்சத்திரம்'' படத்தில் நடித்தார்.

    1988-ல், கே.பாலசந்தரின் "புதுப்புது அர்த்தங்கள்'' படத்தில் ரகுமானின் மாமியாராக (கீதாவின் அம்மாவாக) நடித்தார். இந்தப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு குழந்தை பிறந்தது. ஜெயசித்ரா படப்பிடிப்புக்காக ஸ்டூடியோ வந்து போவது சிரமமாக இருக்கும் என்பதால், குடியிருந்த பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, படப்பிடிப்பை நடத்தினார்கள்.

    1991-ல் ரகுமானை கதாநாயகனாக வைத்து, "புதிய ராகம்'' என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்து டைரக்ட் செய்தார்.

    ஜெயசித்ராவின் மகன் அம்ரேசுக்கு அப்போது ஒரு வயது. அவனையும் அப்படத்தில் நடிக்க வைத்தார்.

    ஜெயசித்ரா தமிழிலும், இதர தென்மாநில மொழிகளிலும் 200-க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தி மொழி தெரியாதாகையால், இந்திப்படங்களில் நடிக்கவில்லை.

    படங்களில் நடித்து வந்தபோது, "சுமங்கலி'' டெலிவிஷன் தொடரில் நடித்தார். அந்தத் தொடரில் இவர் ஏற்று நடித்த சாவித்திரி என்ற வேடம், பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

    பின்னர் "சிவரஞ்சனி'' என்ற தொடரை சொந்தமாகத் தயாரித்தார். அந்தத் தொடரின் கதை, திரைக்கதை, டைரக்ஷன் ஆகிய பொறுப்புகளையும் கவனித்தார்.

    இந்தத் தொடரில் ஜெயசித்ராவின் மகன் அம்ரேஷ், கண்ணன் என்ற கேரக்டரில் நடித்தார்.

    ஜெய்சித்ரா -கணேஷ் தம்பதிகளின் மகன் அம்ரேஷ். இப்போது "பிளஸ்-2'' படித்து முடித்துள்ளார். சினிமாவில் அவரை முன்னுக்குக்கொண்டு வரவேண்டும் என்பது ஜெயசித்ராவின் விருப்பம். அதற்காக நடனம், சண்டை முதலியவற்றில் பயிற்சி அளித்து வருகிறார்.

    "சிவரஞ்சனி'' டெலிவிஷன் தொடரில், சண்டைக்காட்சிகளை வடிவமைத்தவர் அம்ரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

    திரைப்பட அனுபவங்கள் பற்றி ஜெயசித்ரா கூறியதாவது:-

    "நான் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கியபோது, ரொம்ப பிசியாக இருந்தேன். 1974 முதல் 1976 வரை, ஒவ்வொரு ஆண்டும் 18 படங்களில் நடித்தேன். ஆயிரத்திற்கு மேற்பட்ட பரத நாட்டிய நிகழ்ச்சியும் பண்ணி இருக்கிறேன்.

    கால்ஷீட் பணிகளை கவனிப்பதற்கு யாரையும் வேலைக்கு வைத்துக்கொள்ளவில்லை. நானே கவனித்தேன். சோர்வின்றி உழைத்ததாலும், என் பணிகளில் கவனமாக இருந்ததாலும்தான் 200 படங்களுக்கு மேல் நடிக்க முடிந்தது.

    ரஜினிகாந்த் தமிழ்ப்படங்களில் நடிக்க வருவதற்கு முன், சிவாஜிராவ் என்ற பெயரில் "தொலிரேகி -கடிசிந்தி'' என்ற தெலுங்குப்படத்தில் என்னுடன் நடித்துள்ளார்.

    முதன் முதலில் கமல் கதாநாயகனாக நடித்த "பட்டாம் பூச்சி'' படத்தில், நான்தான் அவருக்கு ஜோடியாக நடித்தேன். இதுகுறித்து பெருமைப்படுகிறேன்.

    நான் டைரக்ட் செய்த `புதிய ராகம்' படத்தை, ராஜீவ் காந்திக்கு போட்டுக்காட்ட நினைத்தேன். ஸ்ரீபெரும்புதூருக்கு செல்லும் வழியில் அவரை விமான நிலையத்தில் சந்தித்தேன்.

    தேர்தல் பணிகளில் தீவிரமாக இருந்ததால், படம் பார்க்க இயலாமையைத் தெரிவித்தார். எனக்கு வாழ்த்து எழுதிக் கொடுத்தார்.

    படத்தை தியேட்டரில் தொடங்கி வைத்துவிட்டு, ஸ்ரீபெரும்புதூர் சென்று ராஜீவ் காந்தி கூட்டத்தில் கலந்து கொள்ள எண்ணினேன். தியேட்டரில் மின்சார தடை ஏற்பட்டதால், படத்தை உரிய நேரத்தில் தொடங்க முடியவில்லை. இதனால் நான் ஸ்ரீபெரும்புதூருக்கு செல்ல முடியாமல் போய்விட்டது. சென்றிருந்தால், அந்த குண்டு வெடிப்பில் நானும் சிக்கி இருப்பேன்.

    நல்ல கேரக்டர் கிடைத்தால், படங்களில் நடிப்பேன்.

    என் மகனுக்கு நடிப்புத் திறமை இருக்கிறது. எனவே, நல்ல முறையில் அவனை அறிமுகப்படுத்த பயிற்சி அளித்து வருகிறேன்.

    எல்லோரும் சினிமாத்துறையில் முன்னேறி விட முடியாது. அதற்கு, கடவுளின் அனுக்கிரகம் தேவை.''

    இவ்வாறு ஜெயசித்ரா கூறினார்.
    ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் முகின் நடிக்கும் “வேலன்” திரைப்படத்தின் முன்னோட்டம்.
    தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் “வேலன்” எனும் அழகான ரொமான்ஸ் காமெடி படத்தினை தயாரிக்கிறார். இயக்குநர் கவின் இப்படத்தினை எழுதி இயக்குகிறார். 

    இப்படத்தில் பிக்பாஸ் முகின் நாயகனாகவும், மீனாக்‌ஷி நாயகியாகவும் நடிக்கிறார்கள். பிரபு, சூரி, மரியா, தம்பி ராமையா, ஹரீஷ் பேரடி, ஶ்ரீரஞ்சனி, சுஜாதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் கவின் எழுதி இயக்க, பிரபல மலையாள மொழி இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

    கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, பாலாசுப்பிரமணியன் கலை இயக்கம் செய்கிறார். K.சரத்குமார் படத்தொகுப்பு செய்ய, சண்டைப்பயிற்சி மகேஷ் மேத்யூ செய்துள்ளார். தினேஷ் நடன அமைப்பு செய்ய, பாடல்களை மதன் கார்கி, ஏகாதசி, வேல்முருகன் எழுதியுள்ளனர். 
    தமிழ் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷின் தூய்மையான காதல் பற்றி பதிவு செய்திருக்கிறார்.
    இது என்ன மாயம் படத்தில் அறிமுகமாகி விஜய், சூர்யா, விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் ஆகியோருடன் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்த கீர்த்தி சுரேஷ் தேசிய விருதும் பெற்றார். தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். 

    சில தினங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேசும் இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக இணைய தளங்களில் கிசுகிசுக்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. இருவரும் சில மாதங்களுக்கு முன்பு நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வைரலானது. இந்த கிசுகிசுவை கீர்த்தியின் தந்தை மறுத்திருந்தார். 

    கீர்த்தி சுரேஷ்

    இந்நிலையில் படப்பிடிப்புக்காக வீட்டை விட்டு துபாயில் இருக்கும் கீர்த்தி சுரேஷ், தனது குடும்பத்தை மிஸ் செய்வதாக தெரிகிறது. அதனால் தனது அம்மாவுடன் இருக்கும் ஒரு அழகிய படத்தைப் பகிர்ந்துள்ளார். தனது அம்மா மேனகா மருதாணி வைத்துவிடும் படத்தைப் பகிர்ந்துள்ள கீர்த்தி, ‘தூய்மையான வடிவத்தில் காதல்’ எனத் தலைப்பிட்டுள்ளார். இந்த படம் ஊரடங்கில் எடுக்கப்பட்டது. இந்தப் படத்திற்கு கீர்த்தியின் ரசிகர்கள் லைக்ஸ் மழையை பொழிந்து வருகிறார்கள்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை கவர்ந்த சுரேஷ் சக்ரவர்த்தி பிரபல இயக்குனர் படத்தில் நடித்து வருகிறார்.
    கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல நடிகரும், சமையல் கலைஞருமான சுரேஷ் சக்ரவர்த்தியும் போட்டியாளர்களில் ஒருவராக இடம்பெற்றிருந்தார். சுரேஷ் சக்ரவர்த்தி பன்முக தன்மையுடன் நடிகர், இயக்குனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் பணியாற்றியவர். 1991-ம் ஆண்டு கே.பாலச்சந்தரின் 'அழகன்' படத்தில் அறிமுகமானார்.

    இது தவிர, அவர் ஒரு சமையல் கலைஞர். சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலரது கவனத்தைப் பெற்ற சுரேஷ் சக்ரவர்த்தி, தற்போது படங்களில் நடிக்க ஆர்வம் காண்பித்து வருகிறார்.

    சுரேஷ் சக்ரவர்த்தி

    இந்நிலையில் சுரேஷ் அடுத்ததாக இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் படத்தில் இணைந்துள்ளார். இந்த செய்தியை அவரே சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
    பிரபல நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பு, தனது சமூக வலைத்தள பக்கத்தில் 26 ஆகிவிட்டது என்று நெகிழ்ச்சியுடன் பதிவு செய்திருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை குஷ்பு. வருஷம் 16 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அவர் அதனை தொடர்ந்து தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டிருந்தார்.

    கடந்த 2000 ஆம் ஆண்டு இயக்குனரும், நடிகருமான சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் குஷ்பு. அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

    சுந்தர் சி - குஷ்பு

    இந்த நிலையில் இன்று சுந்தர் சி குஷ்புக்கு காதலை தெரிவித்து 26 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதனை மிகவும் மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர், சுந்தர் சி காதலைத் கூறி இன்றுடன் 26 ஆண்டுகள் ஆகிறது. அப்போது எது உங்களது காதலை உடனே ஏற்க வைத்தது என்று எனக்கு தெரியவில்லை. அந்த மாதிரியான நேரத்தில் உள்ளுணர்வை நம்பி எடுக்கும் முடிவு சிறப்பாக அமையும். அதையேதான் நானும் செய்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
    வாய்ப்பு கொடுக்கவில்லை; வாழ்க்கை கொடுத்திருக்கிறார் என்று பிரபல காமெடி நடிகர் ஒருவர் தனுஷை புகழ்ந்த பேசி இருக்கிறார்.
    தனுஷ் ரசிகர் ஒருவர் உணவகத் திறப்பு விழா ஒன்றை நடத்தினார். இதில் நடிகர் ரோபோ சங்கர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உணவகத்தைத் திறந்து வைத்தார். 

    பின்னர் பேசிய அவர், ''தனுஷ் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை; வாழ்க்கை கொடுத்திருக்கிறார். தென்னிந்தியாவில் அதிக ரசிகர்களைக் கொண்டவர் தனுஷ்தான். கொரோனா காலகட்டத்தில் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய உதவியைச் செய்தார்.

    ரோபோ சங்கர் - தனுஷ்

    ஒரு பிரச்சினையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். பிறகு தனுஷுக்கு போன் செய்தேன். அப்போது அவர் டெல்லி கிளம்பிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் இதைக் கேட்கலாமா என்று யோசித்து தயக்கத்துடன் கேட்டேன். எனக்குக் குடும்ப ரீதியான மிகப்பெரிய உதவியைச் செய்தார்.

    நான் இன்று என் குடும்பத்துடன் மூன்று வேளை நிம்மதியாகச் சாப்பிடுவதற்கான ஆரம்பப் புள்ளியைப் பல இயக்குநர்கள் வைத்திருந்தாலும், என் வாழ்க்கையை உயர்த்தியவர் தனுஷ்தான்.

    இவ்வாறு ரோபோ சங்கர் கூறினார்.
    டிம் ஸ்டோரி இயக்கத்தில் க்லோய் கிரேஸ், மைக்கேல் பெனா நடிப்பில் வெளியாகி இருக்கும் டாம் அண்ட் ஜெர்ரி படத்தின் விமர்சனம்.
    ஒரு மிகப்பெரிய நட்சத்திர ஓட்டலில் ஆடம்பர திருமணம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த தருணத்தில் படத்தின் நாயகி க்லோய் கிரேஸ், அந்த நட்சத்திர ஓட்டலில் பொய் சொல்லி வேலைக்கு சேர்கிறார். அந்த சமயத்தில் ஓட்டலில் ஒரு எலி புகுந்து ஆட்டம் காட்டுகிறது, அதை எப்படியாவது வெளியே துரத்த வேண்டும் என்கிற பொறுப்பு நாயகிக்கு கொடுக்கப்படுகிறது.

    அந்த எலியை துரத்த நாயகி, டாம் என்கிற பூனையின் உதவியை நாடுகிறார். இதையடுத்து இருவரும் சேர்ந்து அந்த எலியை துரத்தினார்களா? இல்லையா? திட்டமிட்டபடி அந்த ஆடம்பர திருமணம் நடந்து முடிந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    டாம் அண்ட் ஜெர்ரி

    படத்தின் மிகப்பெரிய பலம் அனிமேஷன் தான். நிஜ கதாபாத்திரங்களும், அனிமேஷன் கதாபாத்திரங்களும் ஒரே காட்சியில் கொண்டுவந்துள்ள விதம் அழகாக உள்ளது. கதாபாத்திரங்களை பொருத்த வரை நாயகி க்லோய் மற்றும் மைக்கேல் பெனா மீது தான் கதைக்களம் அதிகளவில் உள்ளது. இருவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்கள்.

    அனிமேஷன் காட்சிகளை திறம்பட கையாண்டுள்ள இயக்குனர் டிம் ஸ்டோரி, திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். ஏனெனில் இதில் டாம் மற்றும் ஜெர்ரி வரும் காட்சிகளை இன்னும் வைத்திருக்கலாமோ என தோன்ற வைக்கிறது. அந்த இரண்டு கார்ட்டூன் கதாபாத்திரங்களின் காட்சிகளை அதிகளவில் வைத்திருந்தால் படம் இன்னும் ரசிக்கும் படி இருந்திருக்கும்.  

    டாம் அண்ட் ஜெர்ரி

    கிறிஸ்டோபரின் இசை படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. பின்னணி இசை காட்சிகளுக்கு வலு சேர்த்திருக்கிறது. ஆலன் ஸ்டேவார்ட்டின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சிகளும் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கின்றன.

    மொத்தத்தில் ‘டாம் அண்ட் ஜெர்ரி’ சேட்டை.
    கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட நடிகை நிரஞ்சனி தனது தோழிகளுடன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடி உள்ளார்.
    கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிரஞ்சனி. பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளான இவருக்கு வருகிற 25-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை தான் அவர் திருமணம் செய்ய உள்ளார்.

    இந்நிலையில், திருமணத்திற்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில், நடிகை நிரஞ்சனி பேச்சிலர் பார்ட்டி கொண்டாடி உள்ளார். இந்த பேச்சிலர் பார்ட்டியில் நிரஞ்சனியின் மூத்த அக்காவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவருமான கனி, இரண்டாவது அக்காவும், நடிகையுமான விஜயலட்சுமி மற்றும் தோழிகள் கலந்து கொண்டனர். 

    நிரஞ்சனியின் பேச்சிலர் பார்ட்டி புகைப்படம்

    தங்கையின் பேச்சிலர் பார்ட்டியில் எடுத்த புகைப்படங்களை நடிகை விஜயலட்சுமி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. நிரஞ்சனி - தேசிங்கு பெரியசாமி திருமணம் வருகிற 25-ந் தேதி பாண்டிச்சேரியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 
    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், ராம் சரணை தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகர் நடிக்கும் படத்தை இயக்க உள்ளாராம்.
    ஷங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது. இதனால், இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் ஷங்கர். இவர் இயக்கி வந்த இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன் நிறுத்தப்பட்டது. தற்போது படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையிலும் இன்னும் தொடங்கப்படவில்லை.

    நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டுள்ளதால், இந்தியன் 2 படப்பிடிப்பு இப்போதைக்கு தொடங்க வாய்ப்பில்லை. ஆதலால், ராம்சரண் படத்தை இயக்க தயாராகி வருகிறார் ஷங்கர். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியானது.

    ரன்வீர் சிங்

    இந்நிலையில், இயக்குனர் ஷங்கர், பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு கதை சொல்லி உள்ளாராம். சமீபத்தில் சென்னை வந்த ரன்வீர் சிங், இயக்குனர் ஷங்கரை சந்தித்து கதை கேட்டாராம். அந்தக் கதை அவருக்கு மிகவும் பிடித்துப்போனதாக கூறப்படுகிறது. விரைவில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்து வெற்றி பெற்ற பில்லா திரைப்படம் தமிழகம் முழுவதும் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் ‘பில்லா’வும் ஒன்று. கடந்த 2007-ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. 

    இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா, நமீதா ஆகியோர் நடித்திருந்தனர். இது ரஜினியின் பில்லா பட ரீமேக்காக இருந்தாலும், அஜித்தின் நடிப்பும், படத்தை ஸ்டைலிஷாக எடுத்திருந்த விதமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து பில்லா 2-ம் பாகமும் எடுக்கப்பட்டது. ஆனால் இது முதல் பாகம் அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.

    அஜித், நயன்தாரா

    இந்நிலையில், பில்லா படத்தை வருகிற மார்ச் 12-ந் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய உள்ளார்களாம். இந்த தகவல் அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. 
    பிரபல ஹாலிவுட் கவர்ச்சி நடிகை கிம் கர்தாஷியன், பாடகருடன் நெருக்கம் ஏற்பட்டதால் கணவரை விவாகரத்து செய்ய உள்ளார்.
    உலக அளவில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியன். இவர் அமெரிக்காவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார். மாடல் அழகியாகவும் இருக்கிறார். கிம் கர்தாஷியன் கடந்த 2014-ல் பிரபல பாப் பாடகர் கென்யே வெஸ்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். 

    சமீபத்தில் பாடகர் மீக் மில் என்பவருடன் கிம் கர்தாஷியனுக்கு நெருக்கம் ஏற்பட்டதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கிசுகிசுக்கள் பரவின. இந்த நிலையில் கணவர் கென்யே வெஸ்ட்டை விவாகரத்து செய்ய கிம் கர்தாஷியன் முடிவு செய்து இருக்கிறார். கணவருக்கு வக்கீல் மூலம் விவாகரத்து நோட்டீசும் அனுப்பி உள்ளார். 

    கிம் கர்தாஷியன், கென்யே வெஸ்ட்

    இதன் மூலம் இவர்களின் 7 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. இருவரும் இணைந்து வாங்கிய சொத்துக்களை சமமாக பிரித்துக்கொள்வது என்றும், 4 குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பை இருவரும் ஏற்றுக்கொள்வது என்றும் முடிவு எடுத்துள்ளனர்.
    தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா, பிரபல பாலிவுட் இயக்குனரிடம் நடிப்பு பயிற்சி பெறுகிறாராம்.
    கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான கிரிக்பார்ட்டி மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. 

    தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் ராஷ்மிகா, தற்போது அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடிக்கிறார். அதேபோல், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘சுல்தான்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். மேலும் தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக அவர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ராஷ்மிகா, மிஷன் மஜ்னு பட போஸ்டர்

    இவ்வாறு தென்னிந்திய திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வரும் ராஷ்மிகா, அடுத்ததாக இந்தியில் அறிமுகமாக உள்ளார். ‘மிஷன் மஜ்னு’ எனும் பாலிவுட் படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது இந்திய ராணுவத்தில் நடந்த ஒரு நிகழ்வை மையமாக கொண்டு உருவாகும் படம். இதில் நடிக்க நடிகை ராஷ்மிகாவுக்கு, படத்தின் இயக்குனர் ஷாந்தனு நடிப்பு பயிற்சி அளித்து வருகிறாராம். இந்த பயிற்சி கடந்த 2 மாதங்களாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. 
    ×