என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ராஜேஷ் எம் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள படத்தின் தலைப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
    தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் ஜிவி பிரகாஷ், தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தை ராஜேஷ் எம் இயக்குகிறார். இவர் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர். 

    மேலும் இப்படம் நேரடியாக டி.வி.யில் வெளியிடுவதற்காக தயாராகிறதாம். இதில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் நடிக்கிறார். மேலும் ஆனந்தராஜ், ரேஷ்மா, டேனியல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வணக்கம்டா மாப்ள பட போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் தலைப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘வணக்கம்டா மாப்ள’ என பெயரிட்டுள்ளனர். மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தமிழில் திமிரு, கொம்பன், பிகில் போன்ற படங்களில் வில்லனாக நடித்து கவனம் பெற்ற நடிகர் விஜயனுக்கு கேரள காவல்துறை பதவி உயர்வு வழங்கி உள்ளது.
    கேரள மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர் விஜயன். முன்னாள் இந்திய கால்பந்து வீரரான இவர், இந்திய அணிக்காக 70 போட்டிகளில் விளையாடி உள்ளார். 2000 - 2004ம் ஆண்டு வரை இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக இருந்துள்ளார். கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் போலீஸ் வேலையில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். அதுமட்டுமின்றி இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

    விஜயன், அட்லீ

    தமிழில் திமிரு, கொம்பன், பிகில் போன்ற படங்களில் வில்லனாக நடித்து கவனம் பெற்றார். இந்நிலையில், கேரள காவல்துறை தனக்கு பதவி உயர்வு வழங்கி உள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் விஜயன். பதவி உயர்வு பெற்ற விஜயனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. குறிப்பாக விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் டீசரை வெளியிட்டுள்ள படக்குழு, ஓடிடி வெளியீட்டை உறுதி செய்துள்ளது.
    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

    இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் படக்குழு தரப்பில் இதுகுறித்து எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தனர்.

    தனுஷ்

    இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்தின் டீசரை வெளியிட்டு, படம் ஓடிடி-யில் வெளியாவதை உறுதிப்படுத்தி உள்ளனர். நெட்பிளிக்ஸ் தளத்தில் இப்படம் நேரடியாக வெளியிடப்பட உள்ளது. விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளனர். டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவந்தாலும், படத்தை திரையரங்கில் வெளியிடுமாறு ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். 
    மலையாளத்தில் திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகுமா என்பது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார்.
    பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடித்து 2013ம் ஆண்டில் வெளியான படம் திரிஷ்யம். கேரளாவில் அதிக வசூல் ஈட்டிய படங்களில் வரிசையில் முதல் இடத்தை பிடித்தது. இதில் மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில், ஆஷா சரத், சித்திக் ஆகியோரும் நடித்திருந்தனர், இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். 

    தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் திரிஷ்யம் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. இப்படம் இந்தி உள்ளிட்ட மாநில மொழிகளிலும், சீன மற்றும் சிங்கள என சர்வதேச மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மோகன்லால்

    இதனிடையே திரிஷ்யம் 2 திரைப்படம் கடந்த வெள்ளியன்று ஓடிடி-யில் வெளியிடப்பட்டது. முதல் பாகத்தைப் போன்று 2-ம் பாகமும் விறுவிறுப்பாக உள்ளதால், நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

    இந்நிலையில், திரிஷ்யம் 2 படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: நான் ஜீத்து ஜோசப்பிடம் சமீபத்தில் பேசினேன், அப்போது அவருக்கு திரிஷ்யம் 3ம் பாகம் இயக்கும் எண்ணம் இருப்பது எனக்கு தெரியவந்தது. திரிஷ்யம் 3-ம் பாகம் உருவாகும் என நான் நம்புகிறேன். அதேபோல் திரிஷ்யம் 2 படத்தை பிற மொழிகளிலும் ரீமேக் செய்ய உள்ளதாக தெரிவித்த அவர், விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என கூறினார்.
    டைரக்டர் பி.மாதவன் தயாரிப்பில் உருவான "பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தின் மூலம் ஜெயசித்ரா கதாநாயகியானார். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களிலும் அவர் இடம் பெற்றார்.
    "குறத்திமகன்'' படத்தில் நடித்ததற்கு பிறகு தொடர்ச்சியாக கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் டைரக்ஷனில் "வாழையடி வாழை'', "தசாவதாரம்'' ஆகிய படங்களில் ஜெயசித்ரா நடித்தார். டைரக்டர் பி.மாதவன் மூலம் 1973-ம் ஆண்டு "பொண்ணுக்கு தங்கமனசு'' படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இதில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தார்.

    நடிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்த ஜெயசித்ராவுக்கு, அந்த படத்தில் நடித்த பிறகுதான் நடிப்புத்துறை மீது ஆர்வம் வந்தது.

    1974-ம் ஆண்டு சிவாஜியின் மகளாக "பாரதவிலாஸ்'' படத்தில் ஜெயசித்ரா நடித்தார்.

    ஜெயசித்ரா பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது இந்த படத்தில் நடித்தார். அவர் படத்தில் நடிக்கும்போது தேர்வு நடந்து கொண்டு இருந்தது. எனவே சூட்டிங் சென்றுவிட்டு மேக்கப் சரிவர கலைக்காமல் அப்படியே சென்று தேர்வு எழுதினார். 7-ம் வகுப்பு படிக்கும் போதே நடிக்கத்தொடங்கிய ஜெயசித்ரா, 10-ம் வகுப்பு படிக்கும் வரை திரைப்படங்களில் நடித்ததை மறைத்து வந்தார். சில ஆசிரியைகளுக்கு இது தெரிந்தாலும், தெரிந்ததுபோல் யாரும் காட்டிக்கொள்ளவில்லை.

    தொடர்ந்து சிவாஜியுடன் "சத்யம்'', "லட்சுமி வந்தாச்சு'', "பைலட் பிரேம்நாத்'', "ரத்தபாசம்'' உள்பட பல படங்களில் நடித்தார்.

    சிவாஜி பற்றி ஜெயசித்ரா கூறும்போது, "பாரதவிலாஸ் படத்தில் நடித்தபோது, நன்றாக நடிக்க கற்றுக்கொடுத்தார். அப்போது நான் பாக்கு போட்டுக்கொண்டு டயலாக் பேசுவேன். அதற்கு சிவாஜி, "இப்படி பாக்கு போடக்கூடாது'' என்று கூறினார். அன்று முதல், நடிக்கும்போது நான் பாக்கு போடுவது இல்லை. சத்தியம் படத்தில் அதிகமாக டயலாக் பேச எனக்கு வாய்ப்பு கொடுத்தார்" என்றார்.

    "பொன்வண்டு'' என்ற படத்தில் நடிக்கும்போது, 11-ம் வகுப்பு தேர்வு எழுதமுடியாமல் போயிற்று.

    பின்னர் டைரக்டர் ஏ.பி.நாகராஜனின் "நவரத்னம்'' படத்தில் ஜெயசித்ரா நடித்தார். இந்த படத்தில் 9 கதாநாயகிகளை எம்.ஜி.ஆர் சந்திக்கும் நிலை ஏற்படும். அதில் பவளாயி என்ற கேரக்டரில் ஜெயசித்ரா நடித்தார். படத்தில் நடிக்கும் போது ஜெயசித்ரா குளத்தில் குதிப்பது போல ஒரு காட்சி எடுத்தனர்.

    இது குறித்து ஜெயசித்ரா கூறும்போது, "நான் குளத்துக்குள் குதிப்பதற்கு முன்பு தண்ணீர் அழுக்காக இருக்கிறதே என்று லேசாக கூறினேன். இது அருகே நின்ற எம்.ஜி.ஆருக்கு கேட்டு இருக்கிறது. உடனே, அந்தக் குளத்தில் இருந்த தண்ணீர் அனைத்தையும் மாற்றி, புதுத்தண்ணீர் நிரப்ப எம்.ஜி.ஆர் உத்தரவிட்டார். அது மட்டும் இல்லாமல் எனக்கு நீச்சல் தெரியாது என்பதால், கீழே பலகையை போட்டு உள்ளே கயிறு போட்டுக்கொடுத்தார்" என்றார்.

    டைரக்டர் கே.பாலசந்தரின் "அரங்கேற்றம்'' என்ற படத்தில் ஜெயசித்ரா நடித்தார்.

    தொடர்ந்து "சொல்லத்தான் நினைக்கிறேன்'' படத்தில் 3-வது தங்கையாக நடித்தார். இந்தப் படத்தில் நடித்தபிறகுதான், ஜெயசித்ராவுக்கு "குணச்சித்திர நடிகை'' என்ற பெயர்கிடைத்தது. "டொட்டடொய்ங்'' என்ற மேனரிசம் அந்தப் படத்தில்தான் வந்தது.

    அந்த படத்தில் நடித்தது பற்றி ஜெயசித்ரா கூறும்போது, "நான் கதாபாத்திரமாக மாறி சிறப்பாக நடித்தேன் என்று பல நடிகைகளிடம் பாலசந்தர் சார் கூறியதாகக் கேள்விப்பட்டேன். அது எனக்கு மிகவும் சந்தேசமாக இருந்தது. அவரது டைரக்ஷனில் நடித்தை பெருமையாக கருதுகிறேன்" என்றார்.

    தேவர் பிலிம்சாரின் "வெள்ளிக்கிழமை விரதம்'' படத்தில் சிவகுமாருக்கு ஜோடியாக நடித்தார். தேவர் பிலிம்ஸ் என்றாலே மிருகங்கள் இருக்கும். இந்த படத்தில் பாம்பை நடிக்க வைத்தார்கள்.

    படத்தில் பாம்பை கண்டாலே சிவகுமாருக்கு பிடிக்காது. திருமணத்தின் போது, பாம்பை ஒரு கட்டிடத்திற்குள் போட்டு தீ வைத்து விடுவார். பாசமான பாம்பு இறந்து விட்டதே என்று ஜெயசித்ரா மயக்கமாகி விடுவார்.

    முதலிரவுக்காக அலங்கரிக்கப்பட்ட அறையில் ஜெயசித்ராவின் மீது பாம்பு ஊர்ந்து சென்று, அவர் முகம் அருகே வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது பாம்பு ஜெயசித்ராவின் முகத்திற்கு நேராக நின்று அவரது உதட்டை தனது நாவால் வருடிவிடும். உடனே கண் விழிக்கும் ஜெயசித்ரா, "தெய்வமே நீ உயிரோடுதான் இருக்கிறாயா?'' என்று வசனம் பேசுவார்.

    இந்த காட்சியை படத்தில் பார்க்கும் போது மெய்சிலிர்க்கும்.

    பாம்புடன் தைரியமாக நடித்தது பற்றி ஜெயசித்ரா கூறியதாவது:-

    நான் மயங்கிக் கிடப்பதுபோல் நடித்தபோது, பாம்பு என் உடல் மீது ஏறி பாம்பு என்முகத்திற்கு நேராய் வந்தது. எனக்கு பயம். அருகே தேவர், "முருகா முருகா'' என்று வணங்கிக்கொண்டு இருந்தார்.

    பாம்பு என் உதட்டை தடவிவிட்டு, படம் எடுத்து நிற்கும். உடனே நான் கண்விழித்து, "தெய்வமே நீ உயிருடன் தான் இருக்கிறாயா'' என்று சந்தோஷத்துடன் வசனம் பேசவேண்டும். அப்படி விழித்து வசனம் பேசும்போது பாம்பு திடீர் என்று எனது நெற்றியில் வேகமாக மோதியது. பாம்பு என்னைக் கடித்து விட்டது என்று நினைத்து பயந்து, வசனம் பேசுவதை நிறுத்தி விட்டேன். ஆனால், பாம்பு கடிக்கவில்லை, என்னை ஆசிர்வாதம் செய்தது. அதை என்றைக்கும் என்னால் மறக்கமுடியாது.

    இந்த காட்சியில் பயப்படாமல் நடித்ததற்காக தேவர் பாராட்டினார். தியேட்டருக்குச் சென்று படத்தைப் பார்த்தேன். அந்தக்காட்சியில் பெண்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை கண்கூடாகக் கண்டேன்.

    இவ்வாறு ஜெயசித்ரா கூறினார்.

    1975-ம் ஆண்டு "சினிமாப்பைத்தியம்'' என்ற படத்தில் நடித்தார். "கல்யாணமாம் கல்யாணம்'' என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்தார்.

    அதேபோல "அக்கரைப்பச்சை'', "கலியுககண்ணன்'', "வண்டிக்காரன்மகன்'', "பணக்காரப்பெண்'', "தேன்சிந்துதே வானம்'' உள்பட பல படங்களில் நடித்தார்.

    டைரக்டர் ஸ்ரீதரின் "இளமை ஊஞ்சலாடுகிறது'' படத்தில் கமல் ஜோடியாக ஜெயசித்ரா நடித்தார். இந்த சமயத்தில், தெலுங்கு படதயாரிப்பாளர் ராமாநாயுடு மூலம் "சோகாடு'' என்ற படம் மூலம் சோபன்பாபுக்கு ஜோடியாக தெலுங்கில் நடிக்கத்தொடங்கினார்.

    ஜெயசித்ராவின் திருமணம் 1983-ல் நடந்தது. கணவர் பெயர் கணேஷ். இவர் தொழில் அதிபர்.
    அறிமுக இயக்குனர் சாய் கார்த்திக் இயக்கத்தில் நட்ராஜ், வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகி வரும் ‘இன்ஃபினிட்டி’ படத்தின் முன்னோட்டம்.
    மென்பனி புரோடக்‌ஷன்ஸ் சார்பாக மணிகண்டனும், ழகரலயா ஃபிலிம் புரோடக்‌ஷன்ஸ் சார்பாக பிரியதர்ஷினியும் இணைந்து தயாரிக்கும் படம் ‘இன்ஃபினிட்டி’. நட்டி நட்ராஜ்  கதாநாயகனாக நடிக்கிறார். வித்தியாசமான கதை களம் கொண்ட இப்படம் உண்மை சம்பவத்தை மையமாக உருவாகி வருகிறது. அறிமுக இயக்குனர் சாய் கார்த்திக் எழுதி இயக்குகிறார். 

    நட்ராஜ்

    மேலும் வித்யா பிரதீப், ராமதாஸ் (முனிஸ்காந்த்), மெட்ராஸ் சார்லஸ் வினோத், முருகானந்தம், ராட்சசன் வினோத் சாகர், மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். டாம் ஜோ இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு கே ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு  பணிகளை எஸ்.என். ஃபாசில் கவனிக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டராக சில்வா பணியாற்றி உள்ளார்.
    நகைச்சுவை நடிகர் வடிவேலு, சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, பட வாய்ப்பு கிடைக்காதது குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
    தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர்.

    இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க அவர் மறுத்ததால் இயக்குனர் ஷங்கர் அளித்த புகாரின் பேரில் வடிவேலுவை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.

    இதனால் கடந்த சில வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தின் தடையை மீறி அவருக்கு வாய்ப்பு அளிக்க பட அதிபர்கள் தயங்குகின்றனர்.

    வடிவேலு

    இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வடிவேலு, பட வாய்ப்பு கிடைக்காதது குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அவர் பேசியதாவது: “உங்களுக்கெல்லாம் ஒரு வருஷம் தான் லாக்டவுன். ஆனால் நான் பத்து வருஷமா லாக்டவுனிலேயே தான் இருக்கிறேன். இப்போதும் நடிக்க உடம்பில் தெம்பு இருக்கு, ஆனால் யாரும் வாய்ப்பு தருவதில்லை எனக்கூறிய வடிவேலு, கர்ணன் படத்தில் வரும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலில் வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்ற வரியை பாடும்போது கண்கலங்கினாராம்.
    மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரிஷ்யம் 2 படத்தின், ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திரிஷ்யம்’-ன் இரண்டாம் பாகமான ‘திரிஷ்யம்-2 ’ வெள்ளியன்று வெளியாகி பெரும் பாராட்டுதல்களை பெற்றுவரும் நிலையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்பு குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ‘திரிஷ்யம்’ முதல் பாகத்தை தெலுங்கில் ரீமேக் செய்த அதே குழு, இரண்டாம் பாகத்தின் ரீமேக்குக்கும் தயாராகிறது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில், வெங்கடேஷ், மீனா, நதியா, நரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘திரிஷ்யம்’ திரைப்படங்களை மலையாளத்தில் இயக்கியதும் ஜீத்து ஜோசப் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தின் பூஜை மார்ச் 1 அன்று நடைபெறுகிறது. மார்ச் 5 படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து 50 நாட்கள் நடைபெறுகிறது. தெலுங்கு பதிப்பை ராஜ்குமார் தியேட்டர்ஸ் சார்பில் ராஜ்குமார் சேதுபதி மற்றும் ஸ்ரீ பிரியா, மலையாள தயாரிப்பாளரான அந்தோணி பெரும்பாவூர் மற்றும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான சுரேஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

    திரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக் படக்குழு

    இதற்கிடையே, ‘திரிஷ்யம் 2’ படத்தின் தமிழ் பதிப்பை ராஜ்குமார் தியேட்டர்ஸ் சார்பில் ராஜ்குமார் சேதுபதி ,ஸ்ரீ பிரியா ராஜ்குமார் மற்றும் ஆண்டனி பெரும்பாவுர் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளனர். தமிழ் பதிப்பின் இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.

    ‘திரிஷ்யம்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பாபநாசம்’, ஜீத்து ஜோசப் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் கௌதமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
    மலையாளம், இந்தி, தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை பிரியா வாரியருக்கு, ரசிகர்கள் ஆபாச கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    சமூகவலைதளங்களால் பிரபலங்கள் தங்கள் ரசிகர்களுடன் எளிதாக தொடர்பில் இருக்க முடிகிறது. ஆனால் சில நெகட்டிவான மனிதர்களின் வக்கிரமான செயல்களையும் இதில் தவிர்க்க முடிவதில்லை. இளம் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், 'ஓரு அதார் லவ்' படத்தின் ‘மாணிக்க மலராய பூவி’ என்ற பாடலில் கண் சிமிட்டியதால், 2018-ஆம் ஆண்டில் இணையத்தில் வைரலானார். 

    பின்னர் அவர் இந்திய அளவில் கவனிக்கப்பட்டார். அதோடு ‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். சமூக ஊடகங்களில் தீவிரமாக உள்ள பிரியா, ‘ஹேப்பி நியூ இயர்’ என்ற படத்தில் இடம் பெற்றுள்ள ‘மான்வா லாகே’ பாடலுக்கு உதட்டை அசைத்து வீடியோ ஒன்றை பதிவேற்றியிருந்தார். 

    பிரியா வாரியர் பதிவிட்ட புகைப்படம்

    இதற்கு பிரியாவின் நண்பரும், இணைய பிரபலமுமான ஷரன் நாயர், "உங்கள் உதட்டை எப்படி கடிக்க வேண்டும் என்று எனக்குக் கற்றுக் கொடுங்கள்" என்று கேட்டிருந்தார். எதிர்பார்ப்புகளுக்கு மாறாக இருபத்தி இரண்டு வயதான நடிகை பிரியா, “ஹ்ம்ம்ம்ம் நான் செய்வேன்” என்று பதிலளித்திருந்தார். இப்போது தங்களுக்கும் அதை கற்பிக்க வேண்டுமென, மற்றவர்களும் பிரியாவுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
    பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ் நடிப்பில் உருவாகி உள்ள ‘எம்.ஜி.ஆர் மகன்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    கிராமம் சார்ந்து கமர்ஷியல் படங்கள் கொடுத்து வெற்றி பெற்றவர் இயக்குனர் பொன்ராம். அவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘எம்.ஜி.ஆர் மகன்’. சசிகுமார் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளனர். 

    எம்.ஜி.ஆர் மகன் பட போஸ்டர்

    வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, அந்தோணிதாசன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

    இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 23-ந் தேதி இப்படம் தியேட்டரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    அர்ஜுன் டெண்டுல்கரை நோக்கி வீசப்படும் ‘வாரிசு’ என்ற வார்த்தை மிகவும் கொடுமையானது மற்றும் நியாயமற்றது என பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.
    14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலம், அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் இடம்பெற்றிருந்தார். 21 வயதான அர்ஜுனுக்கு அடிப்படை விலையாக ரூ.20 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அவருடைய ஏலம் தொடங்கிய போது, எந்தவொரு அணியும் அவரை எடுக்க முன்வரவில்லை. இதனையடுத்து அடிப்படை விலைக்கே மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ஏலம் எடுத்தது.

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சச்சின் பேட்டிங் ஆலோசகராக உள்ளதால், அந்த அணி சச்சினின் வாரிசு என்ற அடிப்படையில் அர்ஜுனை ஏலம் எடுத்ததாக சர்ச்சை எழுந்தது. பலரும் இதனை விமர்சித்து கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.

    பர்ஹான் அக்தரின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில், இந்த சர்ச்சை தொடர்பாக பிரபல பாலிவுட் நடிகரும், இயக்குனருமான பர்ஹான் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: “அர்ஜுன் டெண்டுல்கரும், நானும் ஒரே ஜிம்முக்கு தான் செல்கிறோம். அங்கு அவர் தனது உடலை பராமரிக்க எவ்வளவு கடினமாக உழைக்கிறார் என்பதையும், ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக மாற அவர் எவ்வளவு கவனம் செலுத்துகிறார் என்பதையும் நான் பார்த்திருக்கிறேன். 

    அவரை நோக்கி வீசப்படும் ‘வாரிசு’ என்ற வார்த்தை நியாயமற்றது மற்றும் கொடுமையானது. அவரது உத்வேகத்தை கொன்றுவிடாதீர்கள், பயணத்தை ஆரம்பிக்கும் முன்னரே அவரை கீழே தள்ளி விடாதீர்கள்” என பதிவிட்டுள்ளார்.
    பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு இன்று காலை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.
    பிரபல இந்தி நடிகை கரீனா கபூர், கடந்த 2012-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சயீப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தைமூர் என்ற ஆண் குழந்தை உள்ளது. இதனிடையே நடிகை கரீனா கபூர் கடந்தாண்டு மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து மும்பையில் உள்ள பிரீச் கேண்டி என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

    கரீனா கபூர்

    இந்நிலையில் இன்று காலை 8.30 மணிக்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையும், நடிகை கரீனா கபூரும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண் குழந்தை பெற்றெடுத்த கரீனா கபூர் - சயீப் அலிகான் தம்பதிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 
    ×