என் மலர்
சினிமா செய்திகள்
கடந்த ஆண்டு ஆங்கிலத்திலும் தற்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் லெகசி ஆப் லைஸ் என்ற படத்தின் விமர்சனம்.
படம் ஆரம்பத்தில் 12 வருடங்களுக்கு முன்பு நாயகன் ஸ்காட் அட்கின்ஸ் (எம்.ஐ.6) சீக்ரெட் ஏஜெண்ட்டாக இருக்கிறார். ஆனால் பொது வெளியில் ரிப்போர்டராக இருக்கிறார். ஒரு முக்கியமான ஆவணம் கைமாற்றத்தின் போது, ஸ்காட் அட்கின்ஸின் மனைவி இறக்கப்படுகிறார்.
தற்போது நிஜ வாழ்க்கையில், ஸ்காட் அட்கின்ஸ் பாரில் வேலை பார்த்துக் கொண்டு தனது மகளை வளர்த்து வருகிறார். ஒருநாள் யூலியா சோபோல் என்ற பெண், ஸ்காட்டிடம் ஒரு முக்கியமான ஆவணம் எடுத்து வரசொல்லி கேட்கிறார். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் ஸ்காட்டை, ஒரு மர்ம கும்பல் தாக்குகிறது. மேலும் ஸ்காட்டின் மகளை பணய கைதியாக வைத்து முக்கிய ஆவணத்தை கேட்கிறார்கள்.

இறுதியில் ஸ்காட் அட்கின்ஸ், முக்கிய ஆவணத்தை கைப்பற்றி தன் மகளை மீட்டாரா? இல்லையா? முக்கிய ஆவணத்தில் என்ன இருக்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் ஸ்காட் அட்கின்ஸ் கதாபாத்திரத்திற்கு ஓரளவிற்கு பொருந்தி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகள் புதியதாகவும், சுவாரஸ்யமாகவும் இல்லை. சில காட்சிகள் மட்டும் ரசிக்கும் அளவிற்கு உள்ளது. மகளாக நடித்திருப்பவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தந்தை மகள் பாசத்தை உணர்த்தும் அளவிற்கு காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரிய அளவில் கைக்கொடுக்க வில்லை.

ஸ்பைக் திரில்லர் படத்தை ஹாரர், ஆக்ஷன் கலந்து கொடுத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் அட்ரியன் பால். முதல் பாதி விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை பிற்பாதியில் மெதுவாக நகர்கிறது. ஆர்காடியஸ் ரெய்கோவ்ஸ்கியின் பின்னணி இசையும், சைமன் ரவுலிங்கின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.
மொத்தத்தில் ‘லெகசி ஆப் லைஸ்’ விறுவிறுப்பு குறைவு.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டு ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார்.
சிவகார்த்திகேயனுடன் ’ரஜினி முருகன்’ மற்றும் ’ரெமோ’ ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தவர் கீர்த்தி சுரேஷ். அதேபோல் சிவகார்த்திகேயனுடன் ’ஹீரோ’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தவர் கல்யாணி பிரியதர்ஷன். இவர்கள் இருவரும் சிறுவயது முதலே தோழியாக இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று கல்யாணி பிரியதர்ஷன் பிறந்தநாளை அடுத்து திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கல்யாணி பிரியதர்ஷனுக்கு கீர்த்தி சுரேஷ் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் சிறு வயதில் எடுத்த புகைப்படங்களையும் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் சிறுவயதில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணன் மற்றும் நடிகர் மாதவன் இருவரும் பிரதமர் மோடியை சந்தித்து பேசி இருக்கிறார்கள்.
நடிகர் மாதவன் தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள ‘ராக்கெட்ரி’ படத்தில் நம்பி நாராயணனாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவரே திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரிக்கவும் செய்துள்ளார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரெய்லர், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்த டிரெய்லரை பார்த்த பிரபலங்கள் பலரும் மாதவனை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடியை இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றிய நம்பி நாராயணன் மற்றும் நடிகர் மாதவன் இருவரும் நேரில் சென்று சந்தித்த புகைப்படத்தை மாதவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
A few weeks ago, @NambiNOfficial and I had the honour of calling on PM @narendramodi. We spoke on the upcoming film #Rocketrythefilm and were touched and honored by PM's reaction to the clips and concern for Nambi ji & the wrong done to him. Thank you for the privilege sir. pic.twitter.com/KPfvX8Pm8u
— Ranganathan Madhavan (@ActorMadhavan) April 5, 2021
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற இருக்கும் நிலையில், நடிகர்கள், நடிகைகள் சென்னையில் எந்த ஏரியாவில் வாக்குகள் செலுத்த இருக்கிறார்கள் என்ற விவரம்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (6-ந் தேதி) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 3,585 பேர் ஆண்கள். 411 பேர் பெண்கள். சட்டமன்ற தேர்தலுக்காக 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. நாளை பொதுமக்கள் அனைவரும் வாக்குகள் போட இருக்கும் நிலையில், சென்னையில் நடிகர்கள், நடிகைகள் எந்தெந்த இடங்களில் வாக்குகள் செலுத்துகிறார்கள் என்ற விவரங்கள் பின்வருமாறு...

1. ரஜினிகாந்த் - ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி,
2. கமல், ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் - ஆழ்வார்பேட்டை
3. விஜய் - நீலாங்கரை
4. அஜித் மற்றும் ஷாலினி - திருவான்மியூர்
5. விஜயகாந்த் மற்றும் குடும்பத்தினர் - சாலிகிராமம்
6. சிவக்குமார், சூர்யா, கார்த்திக், ஜோதிகா - ஹிந்தி பிரச்சார சபா தியாகராய நகர்
7. உதயநிதி ஸ்டாலின் மற்றும் கிருத்திகா உதயநிதி - எஸ்ஐடி கல்லூரி, தேனாம்பேட்டை
8. விஜய் சேதுபதி - கோடம்பாக்கம் கார்ப்பரேஷன் காலனி
9. குஷ்பு - பட்டினம்பாக்கம்
10. நடிகர் தனுஷ் - ஆழ்வார்பேட்டை
11. நடிகர் சித்தார்த் - ஆழ்வார்பேட்டை
12. இசையமைப்பாளர் அனிருத் - ஆழ்வார்பேட்டை
13. திரிஷா - ஆழ்வார்பேட்டை
14. அர்ஜுன் மற்றும் குடும்பத்தினர் - ஆழ்வார்பேட்டை
15. சத்யராஜ் மற்றும் குடும்பத்தினர் - நுங்கம்பாக்கம்
16. ரமேஷ் கண்ணா - சாலிகிராமம்
17. ஸ்ரீகாந்த்- காவேரி பள்ளி சாலிகிராமம்
18. இயக்குனர் முருகதாஸ் - வடபழனி
19. வடிவேலு- சாலிகிராமம்
20. பிரபு மற்றும் குடும்பத்தினர் - தியாகராய நகர்
21. டி.ராஜேந்தர், சிலம்பரசன் மற்றும் குடும்பத்தினர் - தியாகராய நகர்
22. விஜய் ஆண்டனி - விருகம்பாக்கம்
23. சிவகார்த்திகேயன் - வளசரவாக்கம்
24. இசையமைப்பாளர் இளையராஜா - இந்து பிரச்சார சபா, தியாகராய நகர்
25. விந்தியா- ஆயிரம் விளக்கு
26. செந்தில் - சாலிகிராமம்
27. கார்த்திக் மற்றும் குடும்பத்தினர் - தியாகராய நகர்
28. ஆனந்தராஜ் - நுங்கம்பாக்கம்
29. கவுண்டமணி - சாலிகிராமம்
30. விவேக் - விருகம்பாக்கம்
31. மன்சூர் அலிகான் - நுங்கம்பாக்கம்
பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமாருடன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட 45 பேருக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட நடிகர் அக்ஷய் குமார் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவருடன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட 45 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அபிஷேக் ஷர்மா இயக்கிவந்த ’ராம்சேது’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், படக்குழுவைச் சார்ந்த 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது 45 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், தற்போது ராம்சேது படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்களது திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் சமூகவலைதள பக்கத்தில் தாங்கள் சென்ற பயணம், விடுமுறைக் கொண்டாட்டம் உள்ளிட்டவற்றை புகைப்படங்களாக பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஈஸ்டர் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் விக்னேஷ் சிவன், ஈஸ்டர் நாள் மகிழ்ச்சியான நாள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நானும் ரவுடிதான் படத்துக்கு பின்னர் தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றுகிறார் நயன்தாரா. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தாவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
நடிகர், இயக்குனர், வசனகர்த்தா என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கிய பாலச்சந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார்.
கேரள மாநிலம் கொல்லம், சாஸ்தான்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்திரன். மலையாள திரையுலகில் நடிகராகவும், திரைக்கதை இயக்குனராகவும் இருந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாலச்சந்திரன், தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று இரவு இவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பாலச்சந்திரன் அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இவருக்கு வயது 70.
பாலச்சந்திரன், மலையாள திரையுலகில் 1991-ம் ஆண்டு வசனகர்த்தாவாக நுழைந்தார். மோகன்லால் நடித்த ‘அங்கிள் பன்’ படத்தில் வசனங்கள் எழுதி பிரபலமானார். அதன்பின்பு அக்னிதேவன், உள்ளடக்கம், பவித்தரம், புனர்திவசம், காமாத்திபாடம் போன்ற படங்களிலும் திரைக்கதை எழுதினார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவும், இயக்கவும் செய்தார். இவரது இயக்கத்தில் உருவான இவன் மெகரூபன் படம் பல விருதுகளை பெற்றது. மேலும் இப்படத்திற்காக பாலச்சந்திரனுக்கு கேரள திரைப்பட விருதும் கிடைத்தது.
பாலச்சந்திரனுக்கு ஸ்ரீலதா என்ற மனைவியும், ஸ்ரீகாந்த், பார்வதி என்ற மகனும், மகளும் உள்ளனர். பாலச்சந்திரன் மறைவு செய்தி அறிந்ததும் மலையாள திரையுலகை சேர்ந்தவர்கள் அவரது வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
தம்பா குட்டி பம்பராஸ்கி இயக்கத்தில் ஆதித்ய வர்மன், ரேணு செளந்தர் நடிப்பில் வெளியாகி இருக்கும் மஞ்ச சட்ட பச்ச சட்ட படத்தின் விமர்சனம்.
ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதிக்கும், சுயநல கார்போரேட் புரோக்கருக்கும் இடையே ஒரு விரோதம் ஏற்படுகிறது, அதன் விளைவாக அரசியல்வாதியின் வீட்டில் வருமானவரி சோதனை நடைப்பெறுகிறது. அதே நாளில் தங்களை கண்டுக்கொள்ளாத சமூகத்திற்கு ஒரு ஏடிஎம் கொள்ளையை நடத்திக் காட்ட இரு இளைஞர்கள் திட்டமிடுகிறார்கள். இந்த இரண்டு முயற்சியும் தோல்வியை தழுவுகிறது. இந்த இரு நிகழ்வுகளுக்கும் ஒன்றோடு ஒன்று தொடர்பு ஏற்பட இதில் சிக்கிக்கொள்கிறான் கதாநாயகனும் அவன் நண்பனும்.

பணம் சம்பாதிக்க தெரியாத கதநாயகன், பணம் சம்பாதிக்க தெரியாத போலீஸ் அதிகாரி, சுயமாக சிந்திக்க தெரியாத இரண்டு போலீஸ்காரர்கள், சுயநினைவே இல்லாத இரண்டு மனநோயாளிகள், பேராசை கொண்ட அரசியல்வாதியின் உதவியாளர் என அனைவருமே ஒரு ஜாக்பாட்டை நோக்கி ஓடுகிறார்கள். அந்த ஜாக்பாட் என்ன ஆனது என்பது தான் படத்தின் மீதிக்கதை.
நாயகன் ஆதித்ய வர்மன், கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். நாயகியாக வரும் ரேணு செளந்தர், அழகு பதுமையுடன் வந்து செல்கிறார்.

படத்தில் முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது ஜோக்கர் பட நாயகன் குரு சோமசுந்தரத்துடையது தான், அரசியல்வாதியாக நடித்துள்ள அவர், தனது அனுபவ நடிப்பால் பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார்.
இயக்குனர் தம்பா குட்டி பம்பராஸ்கி, நான்கு வெவ்வேறு கதைகளை திறம்பட கையாண்டுள்ளார். அவை அனைத்தையும் ஒரே இடத்தில் இணைத்த விதம் சிறப்பு. அதேபோல் படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள் இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுத்துள்ள விதம் அருமை. காமெடியும் ஒர்க் அவுட் ஆகி இருப்பது படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.

கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம், பின்னணி இசையும் படத்திற்கு விறுவிறுப்பை கூட்டி உள்ளது. ஜெய் சுரேஷின் நேர்த்தியான ஒளிப்பதிவு ரசிக்கும் படி உள்ளது.
மொத்தத்தில் ‘மஞ்ச சட்ட பச்ச சட்ட’ காமெடி கலாட்டா.
சிவானி செந்தில் இயக்கத்தில் சிவகுமார், பாடினி குமார், காயத்ரி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டேக் டைவர்ஷன்’ படத்தின் முன்னோட்டம்.
சிவானி செந்தில் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘டேக் டைவர்ஷன்’. ஏற்கெனவே'கார்கில்' என்ற படத்தை 2018-ல் இயக்கி இருந்தார். இப்படத்தில் அறிமுக நாயகன் சிவகுமார் ஹீரோவாக நடித்துள்ளார். பாடினி குமார் நாயகியாக நடித்துள்ளார். இரண்டாம் கதாநாயகியாக காயத்ரி நடித்துள்ளார். ஜான் விஜய் வில்லனாக வருகிறார். 'பேட்ட', 'சதுரங்கவேட்டை' படங்களில் வில்லனாக நடித்த ராமச்சந்திரன் முக்கியமான கதாபாத்திரத்தில் இளமை துள்ளலுடன் நடித்துள்ளார் .
மேலும் விஜய் டிவி புகழ் ஜார்ஜ் விஜய், பாலாஜி சந்திரன், சீனிவாசன், அருணாச்சலம், ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஈஸ்வரன் தங்கவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் ஏற்கெனவே நான்கு படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். கன்னடத்தில் இவர் ஒளிப்பதிவு செய்த ஒரு படத்திற்குத் தேசிய விருது கிடைத்திருக்கிறது.

ஜோஸ் பிராங்க்ளின் இசை அமைத்துள்ளார். இவர் 'நெடுநல்வாடை', 'என் பெயர் ஆனந்தன்' படங்களின் மூலம் நல்லதொரு அறிமுகம் பெற்றிருப்பவர். படத்தொகுப்பை விது ஜீவா கவனிக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது: “நாம் அனைவருமே புறப்பட்ட பாதையிலிருந்து நேராகச் சரியாக அடையவேண்டிய இடத்திற்குப் போய்ச் சேருவதில்லை. காலம் நம்மை மாற்றுப்பாதையில் திசை திருப்பி வேறு ஒரு கிளை பிரித்து அங்கே பயணிக்க வைத்து இறுதியில் தான் அந்த இடத்தை அடைய வைக்கும். அப்படி வாழ்க்கையில் ' டேக் டைவர்ஷன் ' என்ற வார்த்தைக்குப் பொருள் அனைவரும் அனுபவபூர்வமாக உணர்ந்து இருப்பார்கள். அந்த வகையில்தான் இந்த பெயரை வைத்தேன். இதற்கான சரியான தமிழ்ப்பெயர் கிடைக்கவில்லை என்பது ஒரு காரணம். இது ஒரு கலர்ஃபுல்லான படமாக இருக்கும். இளமை ததும்பும் காட்சிகள் புதிதாக இருக்கும்” என்றார்.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 65 படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய உள்ளார். காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது.
இதனிடையே நகைச்சுவை நடிகர் யோகிபாபு இப்படத்தில் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், நடிகர் யோகிபாபு சமீபத்திய பேட்டியில் இதனை உறுதி செய்துள்ளார்.

இவர் ஏற்கனவே விஜய்யுடன் மெர்சல், சர்கார், பிகில் போன்ற படங்களில் நடித்திருந்த நிலையில், தற்போது 4-வது முறையாக கூட்டணி சேர உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘கர்ணன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘கர்ணன்’. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, லால், கவுரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு தயாரித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இதனிடையே தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதால், கர்ணன் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இந்நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கர்ணன் படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி திட்டமிட்டபடி வெளியாகும் என தனுஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
நடிகர் அக்ஷய் குமாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர், நடிகைகள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் நடிகர் அக்ஷய் குமாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று உறுதியானதை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்த அக்ஷய் குமார், வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதாகவும், தன்னை சமீப காலங்களில் சந்தித்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவர்களின் அறிவுறுத்தல் படி அக்ஷய் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவலை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அக்ஷய் குமார், நலமாக இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.






