என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘மதகஜராஜா’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.
    விஷால் நடிப்பில் உருவான படம் ‘மதகஜராஜா’. சுந்தர் சி இயக்கிய இப்படம் கடந்த 2013-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்டது. இருப்பினும் பண பிரச்சினையால் இப்படம் ரிலீசாகாமல் முடங்கியே உள்ளது. இப்படத்தை வெளியிட விஷால் தரப்பிலும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால், எதுவும் பலனளிக்காததால், இப்படம் கிடப்பில் போடப்பட்டது.

    இந்நிலையில், இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. அதன்படி இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மதகஜராஜா பட போஸ்டர்

    மதகஜராஜா படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். சந்தானம் நகைச்சுவை கதாபாத்திரத்திலும், சோனு சூட் வில்லனாகவும் நடித்துள்ளார். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரிச்சர்டு எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெமினி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான பிரியா பவானி சங்கர், முதன்முறையாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்கிறாராம்.
    சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமான நடிகை பிரியா பவானி சங்கர், மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. 

    நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது, அதர்வாவுடன் குருதி ஆட்டம், எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை, ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஓமணப்பெண்ணே போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. 

    ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன், கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, சிம்புவின் பத்து தல, அருண் விஜய்யின் 33-வது படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.  

    பிரியா பவானி சங்கர்

    இந்நிலையில், மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதன்படி இப்படத்தை நயன்தாராவின் ஐரா படத்தை இயக்கிய சர்ஜூன் இயக்குகிறார். திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகிறதாம். கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் டிவி ரிப்போர்ட்டராக நடிக்கிறாராம். 

    மேலும் இந்த படத்தில் மெட்ரோ சிரிஷும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறாராம். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை இர்பான் மாலிக் என்பவர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
    நடிகர் அஜாஸ் கானிடம் விசாரணை நடத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
    மும்பை:

    பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கில், சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தி, அவரது தம்பி சோவிக் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணை மற்றும் சோதனை தொடர்ந்து நடைபெறுகிறது. 

    அவ்வகையில் பாலிவுட் நடிகர் அஜாஸ் கான் கடந்த மாத இறுதியில் கைது செய்யப்பட்டார். ராஜஸ்தானில் இருந்து மும்பை திரும்பிய அவரிடம், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் 8 மணி நேரம் விசாரணை நடத்தி கைது செய்தனர்.

    நடிகர் சுஷாந்த் சிங்

    அந்தேரி மற்றும் லோகண்ட்வாலா பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது, அஜாஸ் கான் வீட்டில் இருந்து போதை மாத்திரைகள் கிடைத்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஷாதாப் பாரூக் ஷாயிக் என்ற போதைப்பொருள் வியாபாரியுடன் அஜாஸ் கான் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அஜாஸ் கானிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் அஜாஸ் கானுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வந்ததையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும், அவரிடம் விசாரணை நடத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இத்தகவலை போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த மாஸ்டர் படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.
    கொரோனா பரவலுக்கு பின் களையிழந்து காணப்பட்ட திரையரங்குகளுக்கு, புத்துயிர் கொடுக்கும் வகையில் பொங்கலுக்கு ரிலீசான படம் தான் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்திருந்த இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. வசூலையும் வாரிக் குவித்தது. இப்படம் திரையரங்குகளில் வெளியான 16 நாட்களில் ஓடிடியில் வெளியிடப்பட்ட போதிலும் நிறைய இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடின. 

    மாஸ்டர் படம் இந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டாலும், அதனை தற்போது இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதன் இந்தி ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

    விஜய், சல்மான் கான்

    இந்நிலையில், மாஸ்டர் இந்தி ரீமேக்கில் விஜய்யின் ஜேடி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சல்மான் கானை அணுகியதாக கூறப்படுகிறது. சல்மான் கான், படத்தின் கதையை விரும்பியதோடு, அதில் நடிக்கவும் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    நடிகர் பிரபாஸ், ஒவ்வொரு மொழியிலும் இருக்கும் திறமை வாய்ந்த இயக்குனர்களின் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.
    ‘பாகுபலி’ படங்களுக்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமான நடிகராகிவிட்டவர் பிரபாஸ். இதனால் அவர் நடித்து வரும் படங்களை பான்-இந்தியா படமாகவே உருவாக்கி வருகின்றனர். மேலும், ஒவ்வொரு மொழியிலும் இருக்கும் திறமை வாய்ந்த இயக்குனர்களின் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் பிரபாஸ். 

    அதன்படி தற்போது, கன்னடத்தில் ‘கேஜிஎப்’ என்ற பிளாக்பஸ்டர் ஆக்‌ஷன் படத்தை கொடுத்த பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தமிழ் திரையுலகின் டிரெண்டிங் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. 

    பிரபாஸ்

    பிரபாஸ், லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் பேச்சுவார்த்தை தற்போது ஆரம்பக் கட்டத்தில் உள்ளதாம். இவர்கள் இணைவது உறுதியானால் அடுத்த வருடம் மே மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்கிறார்கள். அதற்குள் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை லோகேஷ் முடித்துவிடுவார் எனவும் கூறப்படுகிறது.
    தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.
    சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். 

    கடந்த சில தினங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனை தனது சமூக வலைதள பதிவு மூலம் உறுதிப்படுத்தி உள்ள வெங்கட் பிரபு, படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து பின்னணி பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாம்.

    மாநாடு படக்குழுவினருடன் வெங்கட் பிரபு

    மாநாடு படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். வருகிற மே மாதம் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    நடிகை நிவேதா தாமஸ், தர்பார் படத்தில் ரஜினிகாந்த் மகளாகவும், பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் மகளாகவும் நடித்திருந்தார்.
    கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதில் நடிகர், நடிகைகளும் சிக்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது நடிகை நிவேதா தாமசுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. நிவேதா தாமஸ், தமிழில் விஜய்யுடன் குருவி, ஜில்லா படங்களில் நடித்துள்ளார். தர்பார் படத்தில் ரஜினிகாந்த் மகளாகவும், பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் மகளாகவும் வந்தார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

    நிவேதா தாமஸ்

    இதுகுறித்து நடிகை நிவேதா தாமஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதற்காக தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். மருத்துவ விதிமுறைகளையும் கடைபிடிக்கிறேன். விரைவில் குணமடைந்து திரும்புவேன். எனக்கு ஆதரவும் அன்பும் காட்டியவர்களுக்கும் சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழுவினருக்கும் நன்றி. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், முகக் கவசம் அணியுங்கள்” என்று கூறியுள்ளார். 
    நடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார்.
    நடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார்.

    விஜயகுமார், அப்போது மிகவும் `பிசி'யான நட்சத்திரம். இரவும் பகலுமாக படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். சில நாட்கள் வீட்டுக்கே போக முடியாத அளவுக்கு ஸ்டூடியோவிலேயே குட்டித் தூக்கம் போட்டு விட்டு, அடுத்த படப்பிடிப்புக்கு போய் விடுவார்.

    சொந்த ஊரில் இருந்து மனைவி முத்துக்கண்ணுவை அழைத்து வந்து விட்டார். 1970-ல் மகள் கவிதா, 1973-ல் அடுத்த மகள் அனிதா, 1976-ல் மகன் அருண்குமார் என மூன்று வாரிசுகள்.

    1976-ல் ஏ.பீம்சிங் டைரக்ஷனில் ``உன்னிடம் மயங்குகிறேன்' படத்தில் நடித்த போதுதான் நடிகை மஞ்சுளாவையும் திருமணம் செய்து கொண்டார். அந்தப் படத்தில் நடிகை மஞ்சுளா விஜயகுமாரின் ஜோடியாக நடித்தார். படப்பிடிப்பு இடைவேளையில் அவர்கள் பொதுவான விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தபோதுதான் எதிர்பாராமல் நிகழ்ந்தது அந்த கல்யாணத் திருப்பம்.

    அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்.

    ``தயாரிப்பாளர் ராஜ்கண்ணுவின் சகோதரர்தான் ``உன்னிடம் மயங்குகிறேன்'' படத்தின் தயாரிப்பாளர். இவர் ஏற்கனவே ``ஆசை 60 நாள்'' படத்தை தயாரித்தவர். ``உன்னிடம் மயங்குகிறேன்'' படத்தின் கதாநாயகியாக மஞ்சுளாவை `புக்' செய்திருந்தார். நான் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தேன்.

    மஞ்சுளா அப்போது தெலுங்கிலும் பிரபலமாக இருந்தார். தெலுங்கின் முன்னணி நடிகர்கள் நாகேஸ்வரராவ், என்.டி.ராமராவ், சோபன்பாபு என மாற்றி மாற்றி நடித்துக் கொண்டிருந்தார். தமிழில் இந்தப் படத்தில் நடித்தபோது `லஞ்ச் பிரேக்'கில், சின்னச்சின்ன இடைவேளைகளில் ஏதாவது பேசிக்கொண்டிருப்போம். பேச்சு பொதுவாக இருக்கும். பல நேரங்களில் சுவராசியமாக எங்கள் உரையாடல் போய்க் கொண்டிருக்கும்.

    இப்படித்தான் ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென மஞ்சுளாவிடம், ``மஞ்சு! உங்களை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நீங்க என்ன சொல்கிறீங்க?'' என்று கேட்டு விட்டேன்.

    எதிர்பாராத அந்தக் கேள்வியில், மஞ்சுளாவும் திடுக்கிட்டுப் போனது அவரது முகபாவத்தில் தெரிந்தது.

    பொதுவாகவே, உள்மனதின் ஆழத்தில் நம்மையும் அறியாமல் சில விஷயங்கள் புதையுண்டு போயிருக்கும். மஞ்சுளாவிடம் பேசிப்பழக ஆரம்பித்த இந்த சில நாட்களில் அவரைப் பற்றி எண்ணங்கள் காதலாக மாறியிருந்தன.

    அதுதான் சட்டென வார்த்தைகளில் வெளிப்பட்டு விட்டது.

    என் கேள்விக்கு பதிலை மஞ்சுளாவின் அதிர்ச்சி முகமே எனக்கு சொல்லிவிட்டது. அவர் பதிலாகக் கூட எதுவும் சொல்லவில்லை.

    மறுநாள் எனக்கு மதியம் 2 மணிக்குத்தான் படப்பிடிப்பு. செட்டுக்கு வந்தபோது அங்கே மஞ்சுளா ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார். காட்சியை முடித்து விட்டு வந்தவரிடம் ``நேற்று நான் சொன்னதை யோசித்தீர்களா? பதில் ஒன்றும் சொல்ல வில்லையே'' என்றேன் மறுபடியும்.

    இப்போது மஞ்சுளாவின் முகம் எனக்கு பதில் சொல்லத் தயங்கும் `தர்மசங்கடமான' நிலையை உணர்த்தியது. மெதுவாக என்னைப் பார்த்தவர், ``யோசித்து சொல்கிறேன்''  என்றார். பிறகு அவரே, ``இந்த விஷயத்தில் நானாக எந்த முடிவும் எடுக்க முடியாது. அப்பா- அம்மாவிடமும் கலந்து பேச வேண்டும்'' என்றார்.

    அடுத்தடுத்து வந்த இரண்டொரு நாட்களில் மஞ்சுளாவின் பெற்றோரை சந்தித்தேன். அவர்களோ, ``எங்கள் பெண் விருப்பம் எதுவோ, அதுவே எங்கள் விருப்பமும். உங்கள் விருப்பம் பற்றி மஞ்சுளா எங்களிடம் சொன்னாள். மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசியது எங்களுக்கும் பிடித்திருக்கிறது. எனவே திருமண விஷயத்தில் எங்களுக்கும் சம்மதமே'' என்றனர்.

    திருமணத்தை எளிமையாக நடத்தினோம். திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை படிப்படியாக குறைத்துக் கொண்டார் மஞ்சுளா.

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

    படங்களில் நடிப்பது தொடர்ந்தாலும், ஒரே மாதிரியான கதைகள் விஜயகுமாரை சற்று யோசிக்க வைத்தது. அதனால் வித்தியாசமான கதைகளைத் தேட ஆரம்பித்தார்.

    இந்த சமயத்தில் வில்லனாக நடிக்கவும் அழைப்புக்கள் வந்தன. கதாநாயகனாக ரஜினி நடிப்பில் முன்னணியில் இருந்த நேரத்தில் அவரது படங்களில் கூட வில்லனாக? நடித்தார், விஜயகுமார்.

    தயாரிப்பாளரும் நடிகருமான கே.பாலாஜியின் ``சவால்'', ``தியாகி'' போன்ற படங்களிலும் வில்லனாக நடிப்பதைத் தொடர்ந்தார்.

    இப்படி வில்லன் நடிப்பில் பிஸியாக இருந்த நேரத்தில் மதுரையில் நடந்த ஒரு விழாவுக்கு விஜயகுமார் போனார். அப்போது சில ரசிகர்கள் அவரிடம், ``ஹீரோவாக நடித்து எங்களை சந்தோஷப்படுத்திய நீங்கள், இப்போது வில்லனாக நடிப்பது எங்களுக்கு வேதனை தருகிறது'' என்று சொல்ல, ரசிகர்களின் ஒட்டுமொத்த உணர்வாக அதை எடுத்துக் கொண்டு நடிப்பதையே நிறுத்தி விட்டார், விஜயகுமார்.

    மூன்றாண்டுகள் இந்த நிலை நீடித்தது. மறுபடியும் விஜயகுமார் நடிக்க ஆரம்பித்தது குணசித்ர வேடங்களில்.

    அதற்கான வாய்ப்பு, `ஜீ.வி.' பட நிறுவனம் மூலம் வந்தது.
    சமீபத்தில் தன் படத்தில் நடித்த நடிகை நிரஞ்சனியை திருமணம் செய்துக் கொண்ட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ஹனிமூனுக்கு மாலத்தீவு சென்றுள்ளார்.
    பிரபல இயக்குனர் அகத்தியனின் இளைய மகள் நிரஞ்சனி. இவர் கடந்தாண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் அவர் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். 

    நடிகை நிரஞ்சனியும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியும் காதலித்து வந்தனர். அவர்களது காதலுக்கு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததால், இருவரும் பிப்ரவரி 25ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

    நிரஞ்சனி

    இந்நிலையில், இவர்கள் இருவரும் ஹனிமூனுக்காக மாலத்தீவு சென்றிருக்கிறார்கள். மாலத்தீவில் இருக்கும் புகைப்படத்தை நடிகை நிரஞ்சனி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
    தமிழ் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரனாவத், பெரிய ஹீரோக்கள் பற்றி சர்ச்சை கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
    இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில், கங்கனா ரனாவத் நடிப்பில் தலைவி படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தற்போது தலைவி படம் குறித்து பதிவிட்டுள்ள கங்கனா “என்னைத் திரைத்துறையிலிருந்து வெளியேற்ற எல்லாவற்றையும் செய்தார்கள். கும்பல் சேர்த்தார்கள், என்னைத் துன்புறுத்தினார்கள். அந்த பாலிவுட் ஆளுமைகளான கரண் ஜோஹர் மற்றும் ஆதியா சோப்ரா ஆகியோர் தற்போது தலைமறைவாகிவிட்டனர்.

    கங்கனா ரனாவத்

    பெரிய ஹீரோக்கள் அனைவரும் ஒளிந்துவிட்டனர். ஆனால் கங்கனா ரனாவத் தனது 100 கோடி பட்ஜெட் படத்துடன் பாலிவுட் வரலாற்றைக் காப்பாற்றுவதற்காக வருகிறார். வெளியிலிருந்து வந்த பெண் பாலிவுட்டின் இரட்சகராக மாறி அதைக் காப்பாற்றினார் என்று பொன்னெழுத்துகளில் பொறியுங்கள். வாழ்க்கை நம்மை பல வழிகளில் ஆச்சரியப்படுத்தும் என்பதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.
    சக்தி சினி புரொடக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் டாக்டர். முருகானந்தம் மற்றும் சண்முகப்பிரியா தயாரிக்கும் அனுக்கிரகன் படத்தின் முன்னோட்டம்.
    அனுக்கிரகன் என்றால் அருள் அல்லது ஆசீர்வாதம் எனப் பொருள் உண்டு. இறைவனின் ஆசீர்வாதமாகவே மாறிய ஒரு மகனைப் பற்றிய கதைதான் இது. திரைக்கதையில் ஒரு புதுமை செய்து ஹாலிவுட் தரத்தில் உருவாக்கியுள்ள படம் தான் 'அனுக்கிரகன்'.

    இப்படத்தை சுந்தர் கிரிஷ் இயக்கி இருக்கிறார். முரளி ராதாகிருஷ்ணன், அஜய் கிருஷ்ணா, ஸ்ருதி ராமகிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளார். 'ரெக்க' படத்தில் 'கண்ணம்மா கண்ணம்மா பாடலில் வருபவரும் 'மாரி 'படத்தில் தனுஷின் மகனாக நடித்தவருமான ராகவனும் இதில் நடித்துள்ளார்.

    இப்படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் சக்தி சினி புரொடக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் டாக்டர். முருகானந்தம் மற்றும் சண்முகப்பிரியா தயாரிக்கிறார்கள். வினோத் காந்தி ஒளிப்பதிவு செய்ய, ரெஹான் இசையமைத்துள்ளார்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதால், அங்கு இருப்பவர்களை பலரையும் அச்சுறுத்தி வருகிறது.
    இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. பொது நிகழ்வுகளில் பங்கேற்கும் பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். 

    அவ்வகையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்சய் குமாருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் கோவிந்தாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கோவிந்தா

    சில தினங்களுக்கு முன்பு பாலிவுட்டின் முன்னணி நடிகர்களாக இருக்கும் அமீர்கான், மாதவன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×