என் மலர்
சினிமா செய்திகள்
கலகலப்பு படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் இணைந்து நடித்த பிரபல நடிகர்கள் தற்போது மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர்.
ஜெயம் கொண்டான் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆர்.கண்ணன். இதையடுத்து சேட்டை, கண்டேன் காதலை, இவன் தந்திரன், பூமரேங் போன்ற படங்களை இயக்கிய இவர், அடுத்ததாக அதர்வாவின் தள்ளிப்போகாதே, நகுலின் எரியும் கண்ணாடி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.

இயக்குனர் ஆர்.கண்ணன்
இந்நிலையில், அவர் இயக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அப்படத்தில் மிர்ச்சி சிவா மற்றும் யோகிபாபு இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. யோகிபாபுவும், சிவாவும் ஏற்கனவே கலகலப்பு, கலகலப்பு 2, சுமோ ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன், அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
காக்க காக்க, துப்பாக்கி, தெறி, அசுரன், கர்ணன் போன்ற பல்வேறு வெற்றி படங்களை தயாரித்தவர் கலைப்புலி எஸ் தாணு. இவர் தற்போது அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பாவை, தயாரிப்பாளர் சுரேஷ் பாபுடன் இணைந்து தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதேபோல் தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள ‘நானே வருவேன்’ படத்தையும் தாணு தயாரிக்கிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

அல்லு அர்ஜுன்
இந்நிலையில், தயாரிப்பாளர் தாணு அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை கோலிவுட்டின் முன்னணி இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளாராம். அவர் யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையை சேர்ந்தவரான நடிகை ஃபிரீடா பின்டோ, தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.
ஏ.ஆர்.ரகுமானுக்கு 2 ஆஸ்கர் விருதுகளை பெற்றுத் தந்த ஸ்லம்டாக் மில்லியனர் படம் மூலம், நடிகையாகி பிரபலமானவர் ஃபிரீடா பின்டோ. மும்பையை சேர்ந்த இவர் தொடர்ந்து ஹாலிவுட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். நடிகை ஃபிரீடா பின்டோ, புகைப்படக் கலைஞர் கோரி ட்ரான் என்பவரை காதலித்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம், இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

கோரி ட்ரான், ஃபிரீடா பின்டோ
ஆனால் அவர்கள் இருவரும் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில், தனது காதலர் கோரியின் பிறந்தநாள் அன்று இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் நடிகை ஃபிரீடா. தனக்கு விரைவில் குழந்தை பிறக்கவிருப்பதாக குறிப்பிட்டு, புகைப்படம் ஒன்றையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஃபிரீடா. இதைப் பார்த்த ரசிகர்கள், திருமணத்துக்கு முன்பே கர்ப்பமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நெல்சன் - விஜய் கூட்டணியில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. கடந்த ஏப்ரல் மாதம் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், 2-வது கட்ட படப்பிடிப்பை மே 3-ம் தேதி சென்னையில் தொடங்கத் திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால், கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தடைபட்டது.
தற்போது கொரோனா பரவல் குறைந்ததால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பீஸ்ட் படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. தனியார் ஸ்டூடியோ ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில், விஜய்- பூஜா ஹெக்டே நடிக்கும் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகின்றன.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம் காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் தயாராகி வருகிறது.
மீசையை முறுக்கு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி அடுத்ததாக ‘சிவகுமாரின் சபதம்’ படத்தை இயக்கி உள்ளார்.
பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்ஷன் உள்பட பல படங்களுக்கு இசைமைத்துள்ளார்.
மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். இந்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
இதையடுத்து ‘சிவகுமாரின் சபதம்’ படத்தை இயக்கி முடித்துள்ளார் ஹிப்ஹாப் ஆதி. இதிலும் அவரே ஹீரோவாக நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிவகுமாரின் சபதம் படக்குழு வெளியிட்ட போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை ஹிப்ஹாப் ஆதி வெளியிட்டுள்ளார். அதன்படி, இப்படத்தில் இடம்பெறும் ‘சிவகுமார் பொண்டாட்டி’ எனும் பாடல் நாளை (ஜூலை 2) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கும் அர்ஜுன், விரைவில் தொகுப்பாளராக களமிறங்க உள்ளாராம்.
சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான ‘சர்வைவர்’ நிகழ்ச்சி விரைவில் தமிழில் தொடங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியின் விதிப்படி, ஆளில்லாத தனித்தீவில் போட்டியாளர்களை தங்க வைத்து, அவர்களுக்கு விதவிதமான டாஸ்க்குகள் கொடுக்கப்படும். அவை அனைத்தையும் வெற்றிகரமாக கடந்து இறுதிவரை தாக்குப்பிடிக்கும் போட்டியாளரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இதில் வெற்றி பெறுபவருக்கு பெரும் தொகை பரிசாக வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆக்ஷன் கிங் அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது சாகச நிகழ்ச்சி என்பதால், அவர் இதற்கு பொருத்தமாக இருப்பார் எனக்கருதி அவரை ஒப்பந்தம் செய்ய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இது உறுதியானால் அவர் தொகுத்து வழங்கும் முதல் நிகழ்ச்சியாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் தனுஷ் நடிக்கும் ‘டி 43’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது.
‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்றிருந்த நடிகர் தனுஷ், 4 மாதங்கள் அங்கு தங்கியிருந்து அப்படத்தில் நடித்து முடித்தார். இதையடுத்து அமெரிக்காவில் சில நாட்கள் ஓய்வெடுத்த நடிகர் தனுஷ், தற்போது இந்தியா திரும்பி உள்ளார்.
அமெரிக்காவில் இருந்து நேரடியாக ஐதராபாத் வந்தடைந்த அவர், கார்த்திக் நரேன் இயக்கும் ‘டி 43’ படத்தின் படப்பிடிப்பில் விரைவில் பங்கேற்க உள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

ஐதராபாத் விமான நிலையத்தில் நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் ‘டி 43’ படத்தில் நடித்து முடித்த பின் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வலிமை படத்தின் அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு, டபுள் டிரீட் கொடுக்க வலிமை படக்குழு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
அஜித் - எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. இதனை விரைவில் படமாக்க உள்ளனர்.

அஜித்
இந்நிலையில், வலிமை படத்தின் அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு, டபுள் டிரீட் கொடுக்க வலிமை படக்குழு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதன்படி வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக்குடன் அதன் மோஷன் போஸ்டரையும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இவை இரண்டையும் இந்த மாதத்தில் வெளியிட உள்ளார்களாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் கமல், அடுத்தடுத்து 6 படங்களில் நடிக்க தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘விஸ்வரூபம் 2’. இப்படம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது. அதன்பிறகு அவர் அரசியலில் கவனம் செலுத்தியதால் படங்கள் வரவில்லை. தற்போது அவர் அடுத்தடுத்து 6 படங்களில் நடிக்க தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கமல்ஹாசன் ஏற்கனவே நடித்து வந்த ‘இந்தியன் 2’ படம் கோர்ட்டு வழக்கில் சிக்கி உள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க இருக்கிறது.
மலையாளத்தில் வெற்றி பெற்ற திரிஷயம் 2-ம் பாகத்தை தமிழில் பாபநாசம் 2 என்ற பெயரில் ரீமேக் செய்து நடிக்கவும் கமல்ஹாசன் திட்டமிட்டு உள்ளார். இதில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க நதியாவிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.

அதேபோல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் கமல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது துப்பாக்கி படத்தின் 2-ம் பாகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் வெற்றிமாறன் இயக்கத்திலும் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகவும், இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடப்பதாகவும் புதிய தகவல் பரவி வருகிறது.
இதுதவிர தலைவன் இருக்கின்றான் படத்தையும் கமல் இயக்கி நடிக்க திட்டமிட்டு வருகிறாராம். விரைவில் இந்த படங்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மம்முட்டி, அடுத்ததாக வில்லன் வேடத்தில் நடிக்க உள்ளாராம்.
கதாநாயகர்கள் பலர் வில்லன் வேடங்களில் நடிக்கின்றனர். விஜய்சேதுபதி விக்ரம் வேதா, மாஸ்டர் படங்களில் வில்லனாக வந்தார். மணிரத்னத்தின் கடல், விஷாலின் இரும்புத்திரை படங்களில் அர்ஜுன் வில்லன் வேடம் ஏற்றார். தனுசின் அனேகன் படத்தில் கார்த்திக்கும், அஜித்குமாரின் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்யும், ஜெயம் ரவியின் தனி ஒருவன் படத்தில் அரவிந்தசாமியும் வில்லனாக நடித்துள்ளனர்.

நாகார்ஜுனா, அகில்
இந்நிலையில் மலையாள பட உலகின் முன்னணி கதாநாயகனான மம்முட்டிக்கும் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. தெலுங்கில் நாகார்ஜுனாவின் மகன் அகில் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க அவரிடம் பேசி வருகிறார்கள்.
ஏற்கனவே மறைந்த ஆந்திர முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டி வாழ்க்கை கதையான ‘யாத்ரா’ படத்தில் ராஜசேகர ரெட்டியாக மம்முட்டி நடித்து தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். எனவே தற்போது வில்லன் வேடத்துக்கு அவரை அணுகி உள்ளனர்.
முதல்வன் படப்பிடிப்பின்போது, திடீரென்று கலவரம் மூண்டது. சரமசப் பேச்சு நடத்தி வெற்றி கண்டார், விஜயகுமார்.
டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய முதல் படத்தில் விஜயகுமார்தான் ஹீரோ. முதல் படத்தில் நடித்ததில் இருந்தே எஸ்.ஏ.சந்திரசேகருக்கும், விஜயகுமாருக்குமான நட்பு நீடித்து வருகிறது.
எஸ்.ஏ.சந்திரசேகரின் படங்களில், விஜயகுமாரால் மறக்க முடியாத படம் "செந்தூரப்பாண்டி.'' இந்தப்படத்தில் விஜயகாந்த் அண்ணனாகவும், விஜய் தம்பியாகவும் நடித்திருந்தார்கள். இவர்களின் அப்பாவாக விஜயகுமார் நடித்தார். இந்தப் படத்தின் வெற்றி விழாவில் விஜயகாந்த் -விஜய் ரசிகர்களிடையே ஏற்பட்ட பிரச்சினையையும் தீர்த்து வைத்தார்.
எஸ்.ஏ. சந்திரசேகரின் படங்களில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம் குறித்து விஜயகுமார் கூறியதாவது:-
"டைரக்டர் வி.சி.குகநாதனிடம் அசோசியேட் இயக்குனராக இருந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அவரிடம் நடிப்பு ஆர்வமும் இருந்தது. அதனால் குகநாதன் இயக்கிய "ஒளிமயமான எதிர்காலம்'' படத்தில் ஒரு சின்ன கேரக்டரிலும் நடித்தார்.
டைரக்டராக வேண்டும் என்று முடிவு செய்தபோது, முதல் படத்தை சொந்தமாகவே தயாரித்து இயக்கினார். இதற்காக என்னை சந்தித்தவர், "அவள் ஒரு பச்சைக்குழந்தை'' என்றொரு படம் இயக்கி தயாரிக்கிறேன். நீங்கள் ஹீரோவாக நடிக்க வேண்டும்'' என்று கேட்டார்.
புது இயக்குனர்களை ஊக்குவிப்பது என்பது எப்போதுமே என் இயல்பாக இருந்தது. எனவே, `நிச்சயம் நடிக்கிறேன்' என்றேன். எனக்கு ஜோடியாக பவானி என்றொரு புதுமுகம் நடித்தார்.
முதல் படத்தையே சரியான பட்ஜெட் போட்டு அந்த பட்ஜெட்டுக்குள் முடித்தார், எஸ்.ஏ.சந்திரசேகர். படம் ரிலீசானபோது டைரக்டராக மட்டுமின்றி ஒரு தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து விஜயகாந்தை வைத்து சில படங்களை இயக்கியவர், மகன் விஜய்யை "நாளைய தீர்ப்பு'' என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார், தொடர்ந்து ரசிகன், தேவா என்று விஜய்க்கு ஏற்ற கதையை உருவாக்கி தயாரித்து இயக்கினார்.
அவர் இயக்கிய "செந்தூரப்பாண்டி'' படத்தில் விஜயகாந்த் அண்ணன். விஜய் தம்பி. அவர்களின் அப்பாவாக நான் நடித்தேன். இந்தப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நான் பிணமாக நடித்த அனுபவம் மறக்க முடியாது. செத்துப்போகிற மாதிரி நடிக்க வேண்டும் என்று டைரக்டர் சொன்னதும், கண்களை திறந்தபடி உயிர் விட்டது போல் நடித்தேன்.
சிலருக்கு உயிர் பிரியும்போது, கண் திறந்தபடி இருக்கும். அதை மனதில் வைத்து, கண்ணை திறந்தபடி உயிர் போனதாக அந்த கேரக்டரில் நடித்தேன். ஆனால் அந்தக் காட்சியில் அடுத்தடுத்து நடக்கப்போகிற விஷயங்கள் எனக்குத் தெரியாது. பிணத்துக்கு எண்ணை தேய்த்து குளிப்பாட்டினார்கள். எண்ணைப் பிசுக்கு போக, அரப்பு போட்டு குளிக்க வைத்தார்கள். கண்ணை திறந்தபடி இருந்ததால் கண்ணில் எண்ணையும் அரப்புமாக விழுந்து, மகா எரிச்சல். என்றாலும் கேரக்டருக்காக தாங்கிக் கொண்டேன்.
இந்தப் படத்தின் நூறாவது நாள் விழாவில்தான் ரசிகர்களை சமாளிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
சென்னை டெலிவிஷன் நிலையத்துக்கு அருகில் உள்ள அண்ணா அரங்கில் விழா நடந்தது. விஜயகாந்த், விஜய் என படத்தில் நடித்த அத்தனை நட்சத்திரங்களும் வந்திருந்தார்கள்.
விழாவில் விஜய் பேச ஆரம்பித்தபோது, ரசிகர்கள் பக்கமிருந்து பலத்த கூக்குரல்கள். விஜய் பேச்சை தொடர முடியவில்லை. விழாவுக்கு வந்திருந்த இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களும் கூச்சல் போட தொடங்கினார்கள். இதை அப்படியே விட்டால் விபரீதமாகி விடும் என்று தெரிந்து, உடனே நான் எழுந்து `மைக்'கை பிடித்தேன். "முதலில் பேச விடுங்கள்.
ஒரு ஹீரோ பேசும்போது உங்களிடம் இருந்து உற்சாகமான கரகோஷம்தான் வரவேண்டும். அதற்குப்பதிலாக கூச்சல் போடுவது நாகரீகமல்ல. நீங்கள் உங்கள் அபிமான ஹீரோவை ஆதரிக்கும் விதத்தில் இவரை எதிர்ப்பதாகவே இது தெரியும். விஜயகாந்த் சார் இந்த விழாவுக்கு வந்திருக்கிறார். நீங்கள் விஜய் பேசும்போது எழுப்பும் கூக்குரல், விஜயகாந்த் சாரை கஷ்டப்படுத்துவதாக அமையும். கலைஞர்களுக்குள்ளான ஒற்றுமையை உங்களைப்போன்ற ரசிகர்களின் செயல் மாறுபடுத்தி விடக்கூடாது என்று பேசினேன்.
ரசிகர்கள் புரிந்து கொண்டார்கள். அதற்குப் பிறகு அமைதி என்றால் அமைதி. அப்படி ஒரு அமைதி. முழு விழாவும் உற்சாகமாய் நடந்து முடிந்தது. விழா முடிவில் நடிகர் விஜயகாந்தும், விஜய்யின் அப்பா சந்திரசேகரும் எனக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.''
இப்படிச் சொன்ன விஜயகுமார், இதே மாதிரியான ஒரு சம்பவம் ஷங்கர் இயக்கிய "முதல்வன்'' படத்தின் படப்பிடிப்பு தளத்திலும் நடந்திருப்பதாக தெரிவித்தார்.
அதுபற்றி அவர் கூறியதாவது:-
"டைரக்டர் ஷங்கர் பிரமாண்டத்துக்கு பெயர் போனவர். அவரது இயக்கத்தில் "முதல்வன்'' என்ற ஒரேயொரு படத்தில் மட்டுமே நடித்திருக்கிறேன்.
இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு குற்றாலம் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் நடந்தது. அவுட்டோர் படப்பிடிப்பு என்பதால் சுற்றுவட்டார கிராமமே கிளம்பி வந்திருந்தது. இந்த அதிகபட்ச கூட்டம் படப்பிடிப்புக்கு இடைïறாக இருக்கக்கூடாது என்பதற்காக போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினார்கள்.
ஆனால், திரண்டிருந்த கூட்டம் போலீசுக்கு கட்டுப்படுவதாக இல்லாததால் போலீசார் லேசான தடியடி நடத்த வேண்டிய சூழ்நிலை. இதில் சிதறி ஓடிய கூட்டத்தில் கீழே விழுந்த ஒருவரின் கை உடைந்து விட்டது. இந்த விஷயம் `காட்டுத்தீ' போல் பரவி, பக்கத்து கிராமங்களில் இருந்தும் மக்கள் ஆவேசமாக திரண்டு வந்துவிட்டார்கள்.
ஆனால், இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னதாக மாலை 5 மணிக்கு டைரக்டர் ஷங்கர் சென்னைக்கு கிளம்பி விட்டார். அன்றைய காட்சியுடன் அவுட்டோர் படப்பிடிப்பு முடிவடைவதால் எடுக்கவேண்டிய மீதிக்காட்சிகளை தனது அசோசியேட் டைரக்டர் மாதேஷிடம் ஒப்படைத்து விட்டு கிளம்பி விட்டார்.
இந்த நேரத்தில்தான் அடிதடி, கை முறிவு என பிரச்சினை விஸ்வரூபமெடுத்து விட்டது. கூட்டத்தில் இருந்த 4 பேர் ரொம்ப ஆக்ரோஷமாக பேசி, "எங்களுக்கு நஷ்டஈடு தராவிட்டால் கேமராவை பிடுங்குவோம். படப்பிடிப்பை நடத்த விடமாட்டோம்'' என்று வரிந்து கட்டுகிறார்கள்.
இந்த மாதிரி இடங்களில் நாமும் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது சொல்லப்போனால் நிலைமை இன்னும் விபரீதமாகி விடும். அதனால் நான் முன்வந்து அந்த 4 பேரிடமும் பேசினேன். "அடிபட்டவருக்கு உரிய சிகிச்சை, நஷ்டஈடு எல்லாம் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்'' என்றேன். மொத்தக் கூட்டமும் என் வார்த்தையை நம்பி அமைதியானது.
ஆனால் இந்த நால்வர் அணி மட்டும் நான் சொன்னதை கேட்பதாக தெரியவில்லை. இதனால் "வாங்க! பேசலாம்'' என்று சொல்லி அந்த 4 பேரையும் நாங்கள் படப்பிடிப்புக்காக தயார் செய்திருந்த `டெண்ட்'டுக்கு அழைத்து வந்தேன். அதே நேரத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணனை அழைத்து, "நான் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் நீங்கள் சண்டைக்காட்சியை எடுத்து முடித்து விடுங்கள்'' என்று சொல்லிவிட்டேன்.
மறுபடி படப்பிடிப்பு தொடங்கியது. கும்பலாக நின்ற பொதுமக்களுக்கு தெரியும். 4 பேரிடமும் நான் தனியாக பேசிக்கொண்டிருந்ததால், அவர்கள் அனுமதித்தே படப்பிடிப்பு நடப்பதாக எண்ணி அமைதியாக இருந்தார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் நால்வர் அணியிடம் நான் நடந்த சம்பவத்துக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் பேசி முடித்தேன். கடைசியில் `நஷ்டஈட்டுக்கு நானாச்சு' என்பதை ஏற்று கலைந்து சென்றார்கள்.
எல்லாம் முடிந்து சென்னை வந்தபோது டைரக்டர் ஷங்கர் என்னிடம் போனில் தொடர்பு கொண்டார். "சார்! நான் அங்கில்லாத அன்றைய சூழலில் பிரச்சினையை மிக அருமையாக கையாண்டு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க உதவியிருக்கிறீர்கள். உங்களைப் பற்றி மாதேஷ் ரொம்பவே பெருமையாக என்னிடம் சொன்னார்'' என்று சொல்லி நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.
பதிலுக்கு நான் ஷங்கரிடம், "நானும் கிராமத்தில் இருந்து வந்தவன்தானே. அதனால்தான் அந்த மக்களின் உணர்வுகளை எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது'' என்றேன்.
ஒரு நடிகரை எப்படி கணிக்கிறார் என்பது சுரேஷ் கிருஷ்ணா விஷயத்தில் ஆச்சரியமாக இருக்கும். இவரது இயக்கத்தில் "பாட்ஷா'', "சங்கமம்'', "ஆஹா'' போன்ற படங்களில் நடித்திருக்கிறேன். `ஆஹா' படத்தில் ஒரு காட்சியை என் மீது நம்பிக்கை வைத்து ஒரே ஷாட்டில் எடுத்தார். இதற்கென ஆயிரம் அடி பிலிமை பயன்படுத்தினார்.
மகள் திருமணத்தின்போது மூத்த மகன் இறந்து விட்டதாக இளைய மகன் என்னிடம் சொல்கிற அந்த காட்சி, படத்துக்கே மகுடமாக அமைந்தது. இந்தப் படத்தை தெலுங்கில் எடுத்தபோது, தெலுங்கிலும் என்னை அதே கேரக்டரில் நடிக்க வைத்தார்.
அர்ஜூனை நடிகராக மட்டுமே பலருக்கு தெரியும். அவர் சிறந்த இயக்குனர், தயாரிப்பாளர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த கதாசிரியர், சிறந்த ஸ்டண்ட் மாஸ்டரும்கூட. தமிழ்ப் படங்களில் வசனங்களை எப்படிச் சொன்னால் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்பதை அவர் சொல்லித் தருவது தனியழகு. இந்த இடத்தில் இந்த டயலாக்குக்கு ரசிகர்களின் கரகோஷம் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து சொல்லி விடுவார். அவர் சொன்ன அதே காட்சிக்கு ரசிகர்கள் கை தட்டுவார்கள்.
டைரக்டராக ஆசைப்பட்டு நடிகரானவர் பார்த்திபன். நடிப்பிலும், டைரக்ஷனிலும் தனி முத்திரை பதித்தவர். ஒரு காட்சியை இவர் படமாக்குவதை பார்த்தாலே இவரது திறமையை தெரிந்து கொண்டுவிடமுடியும்.
இளைய தலைமுறையில் என்னைப் பெரிதும் கவர்ந்த இன்னொருவர் லிங்குசாமி. இவர் அறிமுகமான "ஆனந்தம்'' படத்தில் எனக்கு சின்ன கேரக்டர். ஆனாலும் படத்தில் அதையும் பேசப்படும் கேரக்டராக உருவாக்கியிருந்தார். காட்சிகள் இயற்கையாக வரவேண்டும் என்பதற்காக நிறையவே மெனக்கெடுவார். இவர் இயக்கிய `ஜி' படத்திலும், தயாரித்த `தீபாவளி' படத்திலும்கூட எனக்கு நல்ல கேரக்டர். தமிழ் சினிமாவில் இவருக்கும் ஒரு உன்னத இடம் இருக்கிறது.''
இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கத்தில் நடித்து வரும் விஷால், படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவருடைய 31வது படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி வருகிறார். இவர் எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும்படத்தை இயக்கி பல விருதுகளை பெற்றார்.
இதன் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பின் இடைவேளையின்போது நடிகர் விஷால் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட படக்குழுவினர் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.






