என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, கைதி படத்தில் நடித்து பிரபலமான நரேனின் பிறந்தநாளை முன்னிட்டு கார்த்தி அவருக்கு சிறப்பு பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டவர் நரேன். ‘சித்திரம் பேசுதடி’, அஞ்சாதே’, போன்ற படங்களில் நடித்த நரேனின் நடிப்பு இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. நரேன் தற்போது பிரபல மலையாள இயக்குனர் சுகீத் இயக்கத்தில் ‘குரல்’ படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் பல ஹிட் கொடுத்த இயக்குனர் சுகீத் இயக்கும் முதல் தமிழ் படம் இது.

    இதில் நாயகியாக ஷ்ர்தா சிவதாஸ் நடிக்கிறார். இவர் ‘தில்லுக்கு துட்டு-2’ படத்தில் நடித்தவர். முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட், கனிகா உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஷெரிஸி சீன் (Sherizze Sean) நடிக்கிறார். 

    குரல் படத்தின் பர்ஸ்ட் லுக்
    குரல் படத்தின் பர்ஸ்ட் லுக்

    இப்படத்தின் பட வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் நரேன் பிறந்த நாளான இன்று நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘குரல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார். இந்த பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    சேலஞ் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை ரஷ்ய படக்குழுவினர் விண்வெளியில் நடத்தி இருக்கிறார்கள்.
    ஹாலிவுட்டில் விண்வெளியை மையமாக வைத்து கிராவிட்டி, இன்டர்ஸ்டெல்லர் போன்ற பல படங்கள் வெளிவந்திருக்கின்றன. முதன் முறையாக விண்வெளிக்கே சென்று ஒரு படத்தை எடுத்திருக்கிறார்கள் ரஷ்ய படக்குழுவினர். இந்தப் படத்தை கிலிம் ஷிபென்கோ இயக்குகிறார்.

    கதைப்படி ஆய்வுக்காக விண்வெளிக்குச் செல்லும் ஆராய்ச்சியாளர்களில் ஒருவருக்கு இதயப் பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. அவரை காப்பாற்ற பூமியிலிருந்து ஒரு மருத்துவர் செல்கிறார். அங்கு அவர் எதிர்கொள்ளும் சவால்கள் தான் படத்தின் கதை.

    படக்குழுவினர்
    படக்குழுவினர்

    சேலஞ் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பு தீவிர பயிற்சியும், பரிசோதனையும் படக்குழுவினருக்கு நடத்தப்பட்டிருக்கிறது. சோயஸ் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குச் சென்று அங்கு மூன்று மாதங்களுக்கு மேல் தங்கி படம் எடுத்து வருகிறார்கள்.

    இது பற்றி இயக்குனர் கூறும்போது, “விண்வெளி நம் வாழ்க்கையை மாற்றும். கடந்த மூன்று மாதங்களாக அற்புதமான உலகில் இருக்கிறோம். பூமியில் படம் எடுப்பதை விடக் குறைவான நேரமே இருந்தது” என்று தெரிவித்திருக்கிறார்.
    நடிகை சமந்தா, காதல் திருமணம் செய்த நடிகர் நாக சைதன்யாவை பிரிவதற்கான பல காரணங்கள் தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது.
    காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்து உள்ளனர். இவர்கள் விவாகரத்துக்கு பல காரணங்கள் இருப்பதாக தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கின்றனர்.

    குழந்தை பெற்றுக்கொள்ள சமந்தாவை நாகசைதன்யா குடும்பத்தினர் வற்புறுத்தினர். அவரோ அதிக படங்களில் நடிப்பதால் ஏற்கவில்லை. இது விவாகரத்துக்கு முக்கிய காரணம் என்கின்றனர். சமந்தா கவர்ச்சியாகவும், படுக்கை அறை காட்சிகளில் நெருக்கமாகவும் நடிப்பது நாகசைதன்யா குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. இதனால் சமந்தாவின் கதை தேர்விலும், அவர் யாருடன் நடிக்க வேண்டும் என்பதிலும் கணவர் குடும்பத்தினர் தலையிட்டு உள்ளனர். இது சமந்தாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாம்.

    சமந்தா
    சமந்தா - நாக சைதன்யா

    சமந்தா விருந்து நிகழ்ச்சிகளுக்கு செல்வதும், ஆடை வடிவமைப்பாளர் ஒருவரும், சமந்தாவும் நண்பர்களாக பழகியதும் நாகசைதன்யாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறுகின்றனர். நாகசைதன்யா தன்னுடன் நடித்த 2 நடிகைகளுடன் நெருக்கமாக பழகியதாவும், அந்த நடிகைகளிடம் பேசக்கூடாது என்று சமந்தா கூறியதை அவர் ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. சமந்தா தன்னை விட அதிக படங்களில் நடித்து வெற்றிகரமான நடிகையாக வளர்ந்தது, நாகசைதன்யாவுக்கு பொறாமையை ஏற்படுத்தியதாகவும், இதுவும் விவாகரத்துக்கு காரணம் என்றும் கூறுகின்றனர்.
    சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் டாக்டர் படம், தெலுங்கில் ‘வருண் டாக்டர்’ என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் கைவசம் டாக்டர், அயலான், டான் போன்ற படங்கள் உள்ளன. இதில், டாக்டர் படம் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. வருகிற அக்டோபர் 9-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. அன்றைய தினமே தெலுங்கிலும் இப்படம் ‘வருண் டாக்டர்’ என்ற பெயரில் ரிலீசாகிறது.

    சிவகார்த்திகேயன்

    இதற்கான புரமோஷன் நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இதில் பேசிய சிவகார்த்திகேயன், விரைவில் தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதாகவும், இதற்காக தெலுங்கு கற்று வருவதாக தெரிவித்துள்ளார். அந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
    வெற்றி துரைசாமி இயக்கத்தில் விதார்த், ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘என்றாவது ஒரு நாள்’ படத்தின் முன்னோட்டம்.
    உண்மை சம்பவங்களின் தொகுப்பாக ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்துக்கு, ‘என்றாவது ஒரு நாள்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, இந்த படத்தின் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார். 

    தனது முதல் படம் பற்றி அவர் கூறியதாவது: “உண்மை சம்பவத்தை கருவாக வைத்து வரும் கதைகள், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. நிஜ சம்பவங்களை திரைக்கதை என்னும் மாலையாக அழகாக கோர்த்து பல்வேறு இயக்குனர்கள் கதைகளை சொல்லும் விதம் அதிகமாகி வருகிறது.

    நாளிதழில் வரும் செய்திகளை படித்து விட்டு எளிதில் கடந்து விடுவோம். அப்படி நாம் கடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில், ‘என்றாவது ஒருநாள்’ படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. 

    விதார்த், ரம்யா நம்பீசன்
    விதார்த், ரம்யா நம்பீசன்

    கால்நடை வளர்ப்பு மற்றும் உலகமயமாக்கல் கொண்டு வந்த இடம் பெயர்வு பற்றிய கதை, இது. குடிநீர் பஞ்சம், குழந்தை தொழிலாளர்கள், நல்ல எதிர்காலத்துக்காக காத்திருக்கும் மக்களின் சவால்களை எல்லாம் காட்சிகளாக்கி, மக்களை சிந்திக்க தூண்டும் வகையில் திரைக்கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது. எளிய மக்களும், கால்நடைகளுடனான அவர்களின் உறவும் கதையில் முக்கிய பகுதியாக வைக்கப்பட்டுள்ளது.

    நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கும் விதார்த், வித்தியாசமான கதைகளில் மட்டுமே நடிக்கும் ரம்யா நம்பீசன், ‘சேதுபதி’ படத்தில் நடித்த ராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தி தியேட்டர் பீப்பிள் என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது. என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார். அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார்”. இவ்வாறு வெற்றி துரைசாமி கூறினார்.
    நடிகை காஜல் அகர்வால் தெலுங்கில் கோஸ்ட் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு தமிழ் பட வாய்ப்பை இழந்துள்ளார்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த வருடம் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வந்த காஜல் அகர்வால், தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவரை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்கள் தற்போது வேறு நடிகைகளை தேடி வருகின்றனர். 

    ஏற்கனவே தெலுங்கில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்க இருந்த கோஸ்ட் படத்தில் இருந்து காஜல் அகர்வால் நீக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு தமிழ் பட வாய்ப்பை அவர் இழந்துள்ளார்.

    ஹன்சிகா
    ஹன்சிகா

    தமிழில் ராஜா சரவணன் இயக்கத்தில் உருவாகும் ‘ரவுடி பேபி’ படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் காஜல் அகர்வாலை தான் ஒப்பந்தம் செய்திருந்தனர். தற்போது அந்த வாய்ப்பு ஹன்சிகா வசம் சென்றுள்ளது. இப்படத்தில் சார்பட்டா பரம்பரை படத்தின் வில்லன் ஜான் கோகைனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தில் அஜித்துடன் யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி உள்ள இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் இயக்குனர் எச்.வினோத் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். 

    ஹூமா குரேஷி, அஜித்
    ஹூமா குரேஷி, அஜித்

    அவர் கூறியதாவது: “கொரோனா ஊரடங்கு காரணமாக கதையில் நிறைய மாற்றங்களை செய்தோம். எனவே அஜித்துக்கும் ஹூமா குரேஷிக்கும் படத்தில் காதல் காட்சிகள் கிடையாது. அவர்கள் இருவரும் படத்தில் நண்பர்கள், அவ்வளவுதான்” என்று கூறியிருக்கிறார். 
    நெல்சன் - விஜய் கூட்டணியில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
    கோலமாவு கோகிலா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் இயக்கிய படம் டாக்டர். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதேபோல் தெலுங்கிலும் வருண் டாக்டர் என்ற பெயரில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், இயக்குனர் நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

    விஜய், நெல்சன்
    விஜய், நெல்சன்

    அப்போது இயக்குனர் நெல்சனிடம், ரசிகர் ஒருவர் பீஸ்ட் படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என கேட்டார். இதற்கு பதிலளித்த நெல்சன், டாக்டர் படம் ரிலீசானதும், பீஸ்ட் படத்தின் அப்டேட் வெளியாகும் என கூறினார். அது என்ன அப்டேட் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. பீஸ்ட் படத்தையும் நெல்சன் தான் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
    பாகுபலி பட நாயகன் பிரபாஸ் நடிக்க உள்ள 25-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    ‘பாகுபலி’ திரைப்படங்கள் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து ‘சாஹோ’வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான ‘சாஹோ’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலை வாரிக்குவித்தது. இதையடுத்து அவருக்கு பிரம்மாண்ட பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது ‘ராதே ஷ்யாம்’,  ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    ஸ்பிரிட்   படத்தின் போஸ்டர்
    ஸ்பிரிட்   படத்தின் போஸ்டர்

    இந்நிலையில், பிரபாஸ் நடிக்கும் 25-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘ஸ்பிரிட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ளார். இவர் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கியவர் ஆவார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்பட 8 மொழிகளில் தயாராக உள்ளது. இப்படத்தை பூஷன் குமார் தயாரிக்க உள்ளார்.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள மாநாடு திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
    சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

    மாநாடு படத்தின் போஸ்டர்
    மாநாடு படத்தின் போஸ்டர்

    மாநாடு படத்தின் டிரெய்லர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த டிரெய்லர், தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதன்படி இப்படத்தின் டிரெய்லர் யூடியூபில் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்று உள்ளது. சிம்பு நடித்த படத்தின் டிரெய்லர் ஒன்று 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெறுவது இதுவே முதன்முறை. இதனை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
    போதைப்பொருள் பயன்படுத்தியதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நடிகை சஞ்சனா கல்ராணி, ஜாமீனில் வெளியே வந்தார்,
    கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சஞ்சனா கல்ராணி. இவர் கடந்த ஆண்டு போதைப்பொருட்கள் வழக்கில் சிக்கினார். அதில் நடிகை சஞ்சனா போதைப்பொருட்கள் பயன்படுத்தி இருப்பது தடய அறிவியல் ஆய்வில் தெரியவந்துள்ளது. தற்போது ஜாமீனில் வெளியே இருந்து வருகிறார்.

    இந்த நிலையில், பெங்களூரு இந்திராநகரில் இருந்து நேற்று முன்தினம் காலையில் வாடகை காரில் ராஜராஜேசுவரி நகரில் நடந்த சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகை சஞ்சனா சென்றார். அப்போது காரில் ஏ.சி. போடும் விவகாரம் தொடா்பாக சஞ்சனாவுக்கும், டிரைவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் டிரைவர் சூசை மணியை சஞ்சனா தகாத வார்த்தையில் திட்டியதாக தெரிகிறது. 

    இந்த சம்பவம் தொடர்பாக ராஜராஜேசுவரி நகர் போலீஸ் நிலையத்தில் நடிகை சஞ்சனா மீது டிரைவர் சூசை மணி புகார் அளித்துள்ளார். அந்த புகாரை போலீசார் பெற்றுக் கொண்டுள்ளனர். அத்துடன் சஞ்சனா தகாத வார்த்தையில் திட்டுவது தொடர்பான வீடியோ ஆதாரங்களையும் போலீசாரிடம் சூசைமணி வழங்கி உள்ளார். அதன்பேரில், ராஜராஜேசுவரி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக நடிகை சஞ்சனா நேற்று விளக்கம் அளித்துள்ளார். 

    இதுகுறித்து நடிகை சஞ்சனா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது; நான் தவறு செய்யவில்லை. இந்திராநகரில் இருந்து ராஜராஜேசுவரி நகருக்கு நான் வாடகை காரில் சென்றேன். என்னிடம் சொந்தமாக கார் இல்லை. ஏற்கனவே இருந்த காரை கணவர் பயன்படுத்துகிறார். சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. என்னிடம் பணமும் இல்லை. அதனால் தான் வாடகை காரில் சென்றேன். 

    சஞ்சனா கல்ராணி
    சஞ்சனா கல்ராணி

    ஒரு சினிமா படப்பிடிப்பு நடந்த ராஜராஜேசுவரி நகருக்கு செல்ல வேண்டும் என்று டிரைவரிடம் கூறினேன். ராஜராஜேசுவரி நகருக்கு செல்வதற்கு பதிலாக கெங்கேரி நோக்கி கார் சென்றது. கார் வேறு பாதையில் சென்றதால், என்னை கடத்தி செல்வதாக உணர்ந்தேன். அதுபற்றி மட்டுமே டிரைவரிடம் கேட்டு தகராறு செய்தேன். அவரை தகாத வார்த்தையில் திட்டவில்லை. இந்த விவகாரத்தில் நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. என் மீது டிரைவர் போலீசில் புகார் அளித்துள்ளார். எனது தரப்பு நியாயம் பற்றி போலீசாரிடம் தெரிவிப்பேன்.

    நான் மேக்கப் போடாத காரணத்தால், என்னை யாரும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. மேக்கப் போடாமல் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருவேன். டிரைவருக்கும் நான் யார்? என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கார் டிரைவர் தவறான பாதையில் சென்றது பற்றி கேட்டதால் தான் என் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். நான் ஒரு நடிகை என்பதால், இந்த விவகாரம் பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு நடிகை சஞ்சனா கூறினார்.

    இந்த சம்பவம் குறித்து நடிகை சஞ்சனாவிடமும், கார் டிரைவரிடமும் போலீசார் விசாரித்து தகவல்களை பெற்று உள்ளனர். மேலும் 2 பேரையும் சமாதானப்படுத்தி போலீசார் அனுப்பி வைத்து உள்ளனர். இதற்கிடையில், கார் டிரைவருடன் நடந்த மோதல் விவகாரத்தில் சமூக வலைதளங்களில் நடிகை சஞ்சனா காரில் கடத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், தற்போது டாக்டர், டான், அயலான் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்த படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. கடந்த 2013-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அப்படத்தின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.  இதனிடையே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக தகவல் பரவி வந்தது. 

    சிவகார்த்திகேயன்

    இதற்கு பதில் அளித்து நடிகர் சிவகார்த்திகேயன் கூறும்போது, ‘‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கலாமா என்று பேச்சுவார்த்தை நடந்தது. என்னை பொறுத்தவரை அந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஜாலியாக எடுக்கப்பட்ட படம். அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடியாது. ரெமோ படத்தில் வரும் நர்ஸ் கதாபாத்திரத்தை வைத்து வேண்டுமானால் இன்னொரு படம் எடுக்கலாம்” என்றார்.
    ×