என் மலர்
சினிமா செய்திகள்
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி பலருடைய கவனத்தை ஈர்த்த ஜெய் பீம் திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். இந்தியாவில் 2021-ம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட டாப் 10 திரைப்படங்கள் பட்டியலை கூகுள் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சூர்யா நடித்த ஜெய்பீம் முதல் இடம் பிடித்துள்ளது.

இந்தி படங்களான ஷேர்ஷா இரண்டாவது இடத்திலும், ராதே 3-வது இடத்திலும், பெல் பாட்டம் 4-வது இடத்திலும், எட்டேர்னல்ஸ் 5-வது இடத்திலும், விஜய்யின் மாஸ்டர் 6-வது இடத்திலும், சூர்யவன்சி 7-வது இடத்திலும், மற்றும் காட்சில்லா காங் 8-வது இடத்திலும், திரிஷ்யம் 2-ம் பாகம் 9-வது இடத்திலும், புஜ் : த பிரைட் ஆப் இந்தியா 10-வது இடத்திலும் உள்ளன.

ஜெய்பீம் போலீஸ் சித்ரவதையில் கொல்லப்பட்ட ராஜாக்கண்ணுவின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் படமாக வந்தது. இந்த படத்தை ஞானவேல் இயக்கி இருந்தார். இதில் சூர்யா வழக்கறிஞராக நடித்து இருந்தார். படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதாக பா.ம.க, பா.ஜனதா கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல இந்தி பட நடிகை கத்ரினா கைப்புக்கும், விக்கி கவுசலுக்கும் ராஜஸ்தானில் திருமணம் நடைபெற்றுள்ளது.
பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப்பும், நடிகர் விக்கி கவுசலும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் ராஜஸ்தானில் உள்ள பழமையான கோட்டையில் நேற்று நடந்தது. திருமணத்துக்கு 120 பேர் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். இந்தி நடிகர்-நடிகைகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இந்த திருமணம் பல கோடி ரூபாய் செலவில் ஆடம்பரமாக நடந்துள்ளது. சொகுசு விடுதியில் மணமக்கள் தங்கிய அறையின் ஒருநாள் வாடகை ரூ.7 லட்சம் ஆகும். திருமணத்துக்கு செல்போன் கேமராக்கள் கொண்டுவர தடை விதித்து இருந்தனர். திருமண வீடியோவை ஓ.டி.டி. தளத்துக்கு ரூ.80 கோடிக்கு விற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கத்ரினா கைப்- விக்கி கவுசல்
கத்ரினா திருமணம் ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தியது. திருமண நிகழ்ச்சிக்காக கோவிலுக்கு செல்லும் பாதையை மூடிவிட்டதாக கத்ரினா மற்றும் விக்கி கவுசல் மீது சட்ட ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கத்ரினாவும், விக்கி கவுசலும் திருமணம் முடிந்த கையோடு குடியேற மும்பை ஜூஹூ கடற்கரை பகுதியில் உள்ள 8 மாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர். வீட்டின் மாத வாடகை ரூ.8 லட்சம் ஆகும். இந்த வீட்டில் 5 வருடம் தங்குவதற்காக முன்பணமாக ரூ.1.75 கோடி கொடுத்துள்ளனர்.
விவாகரத்தினால் மனம் உடைந்து இறந்து விடுவேனோ என்று பயந்தேன் என்று நடிகை சமந்தா அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.
நடிகை சமந்தா கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்து மீண்டும் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். அவரது விவாகரத்து முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் பல்வேறு தகவல்கள் பரவின. சமந்தா மீதும் பழி சுமத்தப்பட்டன.
இதனை மறுத்த சமந்தா தனக்கு எதிராக அவதூறு பரப்புவதாக கோர்ட்டுக்கும் சென்றார். இந்தநிலையில் விவாகரத்தினால் மனம் உடைந்து இறந்து விடுவேனோ என்று பயந்தேன் என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.

இதுகுறித்து சமந்தா அளித்துள்ள பேட்டியில், ‘‘மனதளவில் நான் மிகவும் பலவீனமானவள். விவாகரத்து செய்து பிரிவதால் மனம் உடைந்து இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால் நான் இவ்வளவு வலிமையானவளாக இருப்பேன் என்று நினைக்கவில்லை. நான் வலிமையானவள் என்பதில் பெருமைப்படுகிறேன். சொந்த வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மூலம் எனது வலிமை எனக்கு தெரிந்துள்ளது. நான் இன்னும் எனது வாழ்க்கையை வாழவேண்டும்” என்றார்.
முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இருவரும் 6 வருடங்களுக்குப் பிறகு நேருக்கு நேர் மோத இருக்கிறார்கள்.
கொரோனாவால் முடங்கிய பெரிய நடிகர்கள் படங்களின் படப்பிடிப்புகள் வேகவேகமாக முடிந்து தற்போது அடுத்தடுத்து திரைக்கு வந்த வண்ணம் உள்ளன. இந்தநிலையில் விஜய்சேதுபதி நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல், சிவகார்த்திகேயனின் `டான்' ஆகிய 2 படங்களையும் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
ஏற்கனவே 2016-ல் விஜய்சேதுபதியின் றெக்க, சிவகார்த்திகேயனின் `ரெமோ' ஆகிய 2 படங்களும் ஒரே நாளில் மோதின. 6 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் இருவர் படங்களும் மோத வருகின்றன. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த `டாக்டர்' படம் எந்த பெரிய படங்களும் போட்டிக்கு வராத நிலையில் தனித்து வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படம் ரூ.100 கோடி வரை வசூல் பார்த்ததாக கூறப்பட்டது.

விஜய்சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். இதில் நாயகிகளாக நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். `டான்' படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ளார். நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.
தமிழில் மைனா படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை அமலாபால், சக நடிகைகளுக்கு சிபாரிசு செய்து தன் படங்களில் நடிக்க வைத்துள்ளார்.
முன்னணி நடிகையாக இருக்கும் அமலா பால் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆரம்பித்தது முதல், தீவிர கதை தேடுதலில் இறங்கியிருக்கிறார். அதோடு கதை பிடித்திருந்தால் அவரே தயாரிப்பிலும் ஈடுபடத் தயங்குவதில்லை. தற்போது கடாவர் என்ற படத்தில் நடித்து வருகிறார். அனூப்.எஸ் என்பவர் சொன்ன கதை பிடித்திருந்ததால், படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அதுல்யா ரவி, ரித்விகா இருவரையும் நடிக்க வைக்க இயக்குநரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். சக நடிகைகள் மீது அமலா பால் வைத்திருக்கும் இந்த நட்புதான் இந்த சிபாரிசுக்குக் காரணம் என்கிறார்கள்.
ராஜமவுலி இயக்கத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.
டிவிவி தனய்யா தயாரிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் 7-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தேங்காய் சீனிவாசனின் பேரன் யோகி, சரண் ராஜின் மகன் தேஜா சரண்ராஜ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சிவி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சிவி. ஒருவரின் கழுத்து மேல் பேய் உட்கார்ந்து பழிவாங்கும் கதை பலருடைய கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் 2 ஆம் பாகம் உருவாகி வருகிறது.
துளசி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் அதிக பொருட் செலவில் சிவி (பாகம்-2) என்ற திரைப்படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்து உள்ளார்கள். இதுவரை தமிழ் திரையுலகில் சொல்லப்படாத வகையில் மாறுபட்ட கோணத்தில் ஆங்கில படத்திற்கு நிகராக படமாக்கியுள்ளார்கள்.
விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கின்ற மாணவ, மாணவிகள், பல வருடங்களாக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒரு மருத்துவமனைக்கு ஆய்வு செய்ய செல்கிறார்கள்.
காணாமல் போன மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் அளிக்க, போலீசார் சில விசாரணைக்கு பிறகு மாணவ மாணவிகள் சென்ற மருத்துவ மனைக்கு தேடிச் செல்கிறார்கள். அங்கு சில வீடியோ ஆதாரம் மற்றும் செல்போன் ஆதாரங்களை கைப்பற்றுகின்றனர். அதை ஆய்வு செய்த போலீசார், அதில் பல ரத்தம் உறைய வைக்கும் சில சம்பவங்களை கண்டு அதிர்ச்சி அடைகின்றனர். இதன் பின்னணியில் விறுவிறுப்பு குறையாமல் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

சிவி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
இப்படத்தில் தேங்காய் சீனிவாசன் அவர்களின் பேரன் யோகி, சரண் ராஜ் அவர்களின் மகன் தேஜா சரண்ராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மேலும் சுவாதிஷா, சந்தோஷ், கிறிஸ்டின், தாடி பாலாஜி, சாம்ஸ், கோதண்டம், காயத்திரி, குமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.
முக்கோண தொடர்பியல் விதி எனும் கருவை வைத்து, கதை, திரைக்கதை அமைத்து பலருடைய கவனத்தை ஈர்த்த பாபு தமிழ் தற்போது புது படத்தை இயக்கி இருக்கிறார்.
வெற்றி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் ஜீவி. இந்த திரைப்படத்தில் முக்கோண தொடர்பியல் விதி எனும் கருவை வைத்து, கதை, திரைக்கதை அமைத்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை குவித்தவர் பாபுதமிழ்.
இவர் தற்போது ‘க்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். ஒரு கால்பந்து விளையாட்டு வீரனுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களும் அதனையொட்டி நடக்கும் ஃபேண்டஸி தருணங்களையும் மையமாக வைத்து இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் பாபுதமிழ்.
இப்படம் குறித்து இயக்குனர் பாபுதமிழ் கூறும்போது, ‘ஊர் பக்கம் பலர் க் வைத்து பேசுவார்கள். அதாவது பொடி வைத்து பேசுவதைத் தான் க் என்பார்கள். இந்த படத்தில் யார் என்ன பொடி வைத்து பேசுகிறார்கள் என்பதை சைக்காலஜி ஃபேண்டஸி வகையில் உருவாக்கி இருக்கிறேன்.

இயக்குனர் பாபுதமிழ்
இந்த படத்தில் யோகேஷ் மற்றும் அனிகா முதன்மை பாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். மேலும் குரு சோமசுந்தரம், ஆடுகளம் நரேன், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்துள்ளார். தர்மராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் மற்றும் பிரபு இணைந்து க் படத்தை வழங்குகிறார்கள். இப்படம் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியாக உலகமெங்கும் திரையரங்குளில் வெளியாகிறது.
முன்னணி நடிகர் விஷால் நடித்து இயக்க இருக்கும் துப்பறிவாளன் 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
விஷால் ஏற்கனவே பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி செல்லமே படம் மூலம் கதாநாயகன் ஆனார். அந்த படத்தின் வெற்றியால் நடிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தினார். இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜனவரி) முதல் டைரக்டர் அவதாரம் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் 2017-ல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் அதன் 2-ம் பாகமும் இதே கூட்டணியில் உருவானது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்தபோது மிஷ்கினுக்கும், விஷாலுக்கும் மோதல் ஏற்பட்டதால் படத்தை இயக்க முடியாது என்று மறுத்து மிஷ்கின் வெளியேறிவிட்டார். இதையடுத்து துப்பறிவாளன் 2-ம் பாகத்தை நானே இயக்குவேன் என்று விஷால் அறிவித்தார்.

துப்பறிவாளன் 2 படத்தின் போஸ்டர்
ஆனாலும் பட வேலைகளை தொடங்காமல் வேறு படங்களில் அவர் நடித்து வந்ததால் துப்பறிவாளன்-2 படத்தை கிடப்பில் போட்டு விட்டதாக பேச்சு கிளம்பியது. இந்த நிலையில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பை ஜனவரி மாதம் லண்டனில் தொடங்க இருப்பதாகவும், 3 மாதங்களில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் விஷால் அறிவித்துள்ளார். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்க உள்ளார். விஷால் இயக்கும் முதல் படம் என்பதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
விஜயகாந்த் நடிப்பில் வெளியான மாநகர காவல் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் சாலையோரமாக உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
விஜயகாந்த் நடித்த மாநகர காவல், பிரபு நடித்த வெற்றி மேல் வெற்றி போன்ற படங்களை இயக்கியவர் தியாகராஜன். மாநகராக காவல் படம் ஏவி.எம். நிறுவனம் தயாரித்த 150-வது படமாகும்.
அருப்புக்கோட்டையைச் சேர்ந்த இவர் டி.எப்.டி. படித்து முடித்து முதல் படமாக மாநகர காவல் என்ற படத்தை எடுத்தார். இந்திராகாந்தி கொலையை மையமாக வைத்து வந்த இந்தப்படம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு பிரபு நடித்த பாக்சிங் சண்டையை மையமாக வைத்து வெற்றி மேல் வெற்றி என்ற படத்தை எடுத்தார்.
இவர் திருமணம் முடிந்து மகன், மகள் இருவருடனும் ஏ.வி.எம். காலனியில் வசித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் தலையில் பலத்த அடிபட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். அதன் பிறகு சிகிச்சைக்கு போதுமான பண வசதி இல்லாமல் கஷ்டத்தில் இருந்தார்.

விஜயகாந்த் - தியாகராஜன்
இன்று காலை ஏ.வி.எம். ஸ்டுடியோ எதிரிலேயே சாலையோரமாக உயிரிழந்த நிலையில் அவர் உடலைக் கண்டு ஆம்புலன்சுக்கு சிலர் போன் செய்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தியாகராஜன் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகராக வலம் வரும் பிரபாஸ், ஆந்திர வெள்ள நிவாரணத்திற்கு உதவுவதாக அறிவித்து இருக்கிறார்.
‘பாகுபலி' படம் மூலம் பிரபலமான பிரபாஸ் அதிக சம்பளம் பெறும் நடிகராக மாறி இருக்கிறார். இவர் நடிக்கும் படங்களை தெலுங்கில் மட்டுமின்றி பிற மொழிகளிலும் வெளியிட்டு லாபம் பார்க்கிறார்கள்.
தற்போது ‘ராதேஷ்யாம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். ராமாயண கதையான ஆதிபுருஷ் மற்றும் சலார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ‘ஆதிபுருஷ்' படத்தில் ராமராக நடிக்க பிரபாசுக்கு ரூ.150 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வேறு இந்திய நடிகர்கள் யாரும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக பெற்றது இல்லை. இந்த நிலையில் ஆந்திராவில் பெய்த கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக ஆந்திர முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்குவதாக பிரபாஸ் அறிவித்து உள்ளார்.

ஏற்கனவே தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் தலா ரூ.25 லட்சம் வெள்ள நிவாரண நிதி வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபுதேவா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், தற்போது திடீரென ரிலீஸில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரபுதேவாவை திரைகளில் பார்த்து நீண்ட காலமாகிவிட்ட வருத்தம் அவரது ரசிகர்களுக்கு உள்ளது. கடைசியாக தமிழில் நடித்த தேவி-2 படம் 2019-ல் வெளியானது. பல வருடங்களாக திரைக்கு வராமல் முடங்கி இருந்த பொன்மாணிக்கவேல் படம் தியேட்டரில் ரிலீசாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், சமீபத்தில் ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்டுவிட்டனர்.
இந்த நிலையில் பிரபுதேவா நடித்துள்ள தேள் படம் இந்த வாரம் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். ரசிகர்களும் தியேட்டரில் தேள் படத்தை பார்க்கும் ஆவலோடு இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் தேள் படம் ரிலீசை தள்ளிவைத்து விட்டனர்.

இதுகுறித்து பட நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘எதிர்பாராத காரணத்தினால் ‘தேள்’ திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுகிறது. புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும். அனைவரின் ஒத்துழைப்புக்கு நன்றி. விரைவில் சந்திப்போம்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இது பிரபுதேவா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.






