என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்ஸ் - Archive

    பியாஜியோ நிறுவனத்தின் புதிய அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் விற்பனையகம் வரத்துவங்கி உள்ளது.


    பியாஜியோ நிறுவனம் 2020 எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் ஸ்கூட்டரை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், புதிய ஸ்கூட்டர் விற்பனையகம் வரத்துவங்கி உள்ளது.

    அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மேக்சி ஸ்கூட்டர் இந்திய சந்தையில் சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் 125 மாடலுக்கு போட்டியாக அமைகிறது. இந்த ஸ்கூட்டர் முன்புறம் ஆர்எஸ்660 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் எல்இடி ஹெட்லேம்ப், கூர்மையான கோடுகளை கொண்டிருக்கிறது.

    புதிய அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் வைட், புளூ, பிளாக் மற்றும் ரெட் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டர் 160சிசி, 3 வால்வு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் முந்தைய எஸ்ஆர் 160 மாடல் வழங்கும் செயல்திறனை வழங்குகிறது.

    இந்தியாவில் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் விலை ரூ. 1.25 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய எஸ்ஆர் 160 மாடலை விட விலை அதிகம் ஆகும். 

    ரெனால்ட் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலை ஜனவரி முதல் உயர்த்தப்பட இருப்பதாக அறிவித்து இருக்கிறது.


    ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை ஜனவரி 1, 2021 முதல் உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. ரெனால்ட் மாடல்கள் விலை அதிகபட்சம் ரூ. 28 ஆயிரம் வரை அதிகமாகிறது. 

    விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்ட்டிற்கு ஏற்ப வேறுபடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ஸ்டீல், அலுமினியம், பிளாஸ்டிக் மற்றும் இதர பொருட்களின் விலை உயர்வு காரணமாக கார் விலை உயர்த்தப்படுவதாக ரெனால்ட் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. 

    ரெனால்ட் நிறுவனத்திற்கு இந்தியா மிகப்பெரும் சந்தை ஆகும். ரெனால்ட் க்விட், டிரைபர் மற்றும் டஸ்டர் என அனைத்து மாடல்களும் சர்வதேச சந்தையில் அதிக பிரபலமாக இருக்கின்றன. 

    இந்திய சந்தையில் டிசம்பர் மாதத்தில் எஸ்யுவி மாடல்களுக்கு ரூ. 3.06 லட்சம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


    ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் டிசம்பர் மாத விற்பனையை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளை அறிவித்து இருக்கின்றன. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், லாயல்டி தள்ளுபடி மற்றும் கார்ப்பரேட் சலுகை வடிவில் வழங்கப்படுகின்றன.

    அந்த வகையில் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மாடல் ரூ. 2.20 லட்சம் வரையிலான சலுகையில் கிடைக்கிறது. மஹிந்திரா எக்ஸ்யுவி300 மாடல் ரூ. 46,500 மதிப்பிலான சலுகைகளுடன் விற்பனை  செய்யப்படுகிறது. மஹிந்திரா பொலிரோ மாடல் ரூ. 25,500 மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மாடல் ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள சலுகைகளுடன் கிடைக்கிறது. ரெனால்ட் டஸ்டர் மாடல் ரூ. 80 ஆயிரம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது. எம்ஜி ஹெக்டார் மாடல் ரூ. 65 ஆயிரம் சலுகையில் விற்பனை செய்யப்படுகிறது.

    டாடா நெக்சான் மாடல் ரூ. 20 ஆயிரம், ஹேரியர் மாடல் ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள சலுகைகளுடனும், டொயோட்டா அர்பன் குரூயிசர் மாடல் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள சலுகையில் கிடைக்கிறது.
    எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஹெக்டார் பிளஸ் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது ஹெக்டார் பிளஸ் எஸ்யுவி மாடல் ஜனவரி 2021 வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது. மேலும் எம்ஜி மோட்டார் வாகனங்கள் விலையும் ஜனவரி மாதம் முதல் உயர்த்தப்பட இருப்பதாக அறிவித்து இருக்கிறது.

    எம்ஜி ஹெக்டார், இசட்எஸ் இவி மற்றும் பிளாக்ஷிப் குளோஸ்டர் எஸ்யுவி மாடல்கள் விலை ஜனவரி 1, 2021 முதல் மூன்று சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. மற்ற நிறுவனங்களை போன்றே எம்ஜி மோட்டார் நிறுவனமும் செலவீனங்கள் அதிகரித்து இருப்பதை விலை உயர்வுக்கு காரணமாக தெரிவித்து உள்ளது.

    ஹெக்டார் பிளஸ் எஸ்யுவி மாடல் அந்நிறுவனத்தின் ஹெக்டார் பிராண்டிங்கில் புதிதாக இணைய இருக்கிறது. தற்சமயம் எம்ஜி ஹெக்டார் மாடல் ஐந்து மற்றும் ஆறு பேர் பயணிக்கக்கூடிய வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய 6 பேர் பயணிக்கக்கூடிய ஹெக்டார் பிளஸ் மாடலில் இரண்டாம் அடுக்கு இருக்கைகள் தனித்தனியே பொருத்தப்படுகின்றன.

    இருக்கை மாற்றம் தவிர புதிய ஹெக்டார் பிளஸ் மாடலில் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படாது என்றே தெரிகிறது. இத்துடன் எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் ஏழு பேர் பயணிக்கும் வேரியண்ட்டும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான கார் மாடல் பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பல்வேறு புதிய கார் மாடல்கள் கடந்த ஆண்டுகளில் அறிமுகமாகி இருக்கின்றன. இதில் அனைத்து மாடல்களையும் நினைவில் கொள்ள முடியாது என்றாலும், சில மாடல்கள் தொடர்ந்து அதிக யூனிட்கள் விற்பனையாகி வருகின்றன.

    அந்த வகையில் இன்றும் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஸ்விப்ட் மாடல் முதலிடம் பிடித்து இருக்கிறது. 2005 ஆம் ஆண்டு முதல் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்கள் பட்டியலில் ஸ்விப்ட் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.

    இந்த ஆண்டு ஜூன் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 15,798 ஸ்விப்ட் யூனிட்களை மாருதி சுசுகி விற்பனை செய்து இருக்கிறது. மேலும் கடந்த ஆறு மாதங்களில் அதிகம் விற்பனையாகும் பத்து கார்களில் ஏழு மாடல்கள் மாருதி சுசுகி நிறுவனத்தை சேர்ந்தவை ஆகும்.

    விற்பனை துவங்கிய சில மணி நேரங்களில் விற்றுத்தீர்ந்த மோட்டார்சைக்கிள் பற்றிய விவரங்களை பார்ப்போம்.


    எம்வி அகுஸ்டா நிறுவனத்தின் லிமிடெட் எடிஷன் சூப்பர்வெலோஸ் அல்பைன் எடிஷன் மாடல் விற்றுத்தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டது. சூப்பர்வெலோஸ் 75-வது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் இந்த லிமிடெட் எடிஷன் உருவாக்கப்பட்டது. 

    உலகம் முழுக்க லிமிடெட் எடிஷன் மாடல் மொத்தத்தில் 75 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன. இவை அனைத்தும் விற்பனை துவங்கிய 75 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டன. இதேபோன்று அல்பைன் ஏ110 மாடலை தழுவி உருவாக்கப்பட்ட 110 லிமிடெட் எடிஷன் யூனிட்களும் அறிமுக நிகழ்வு முடிந்ததும் விற்றுத்தீர்ந்து விட்டன.

    `இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாங்கள் உருவாக்கிய திட்டங்களில் புதிய மாடல்களின் உற்பத்தி மற்றும் வெளியீடு மிக முக்கியமான அம்சம் ஆகும். சூப்பர்வெலோஸ் அல்பைன் இந்த திட்டம் வெற்றி பெற்றதற்கு சான்றாக அமைந்து இருக்கிறது.'

    `மற்றும் ஓர் உடனடி வெற்றி கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வெற்றியை திட்டத்தில் அங்கம் வகித்தோருடன் பகிர்ந்து கொள்வது சிறப்பான அனுபவம்' என எம்வி அகுஸ்டா சிஇஒ திமுர் சர்டரோவ் தெரிவித்தார். 

    கியா மோட்டார்ஸ் நிறுவனம் கனெக்டெட் கார் விற்பனையில் புதிய மைல்கல் கடந்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஒரு லட்சம் கனெக்டெட் கார்களை விற்பனை  செய்து இருப்பதாக அறிவித்து உள்ளது. கனெக்டெட் கார்கள் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் யுவிஒ கனெக்டெட் தொழில்நுட்பம் கொண்ட மாடல்கள் ஆகும்.

    இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் 55 சதவீத மாடல்களில் யுவிஒ கனெக்டெட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருப்பதாக கியா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த தொழில்நுட்பம் கொண்ட கியா செல்டோஸ் ஜிடிஎக்ஸ் பிளஸ் டிசிடி வேரியண்ட் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. 

    இது ஒட்டுமொத்த கனெக்டெட் கார்கள் விற்பனையில் 15 சதவீதம் ஆகும். இந்தியாவில் விற்பனையாகும் இரண்டில் ஒரு கியா கார் கனெக்டெட் மாடல் என்றும் கியா மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் விரைவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் வெளியிட புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் மாருதி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

    புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் `YTB' எனும் குறியீட்டு பெயரில் உருவாகி வருவதாக தெரிகிறது. இது பலேனோ மாடல் உருவான பிளாட்பார்மிலேயே உருவாக்கப்படுகிறது. மாருதி பலேனோ மாடல் நெக்சா விற்பனையகம் மூலம் விற்பனை  செய்யப்படுகிறது.

    அந்த வகையில் புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் மாருதி சுசுகி அரினா நெட்வொர்க் மூலம் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. எனினும், இதன் விலை பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

    ஜீப் நிறுவனத்தின் புதிய காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


    ஜீப் நிறுவனம் தனது காம்பஸ் பேஸ்லிப்ட் எஸ்யுவி மாடலை இந்தியாவில் ஜனவரி 23 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மும்பை மற்றும் பெங்களூரில் உள்ள விற்பனையாளர்கள் புதிய மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

    புதிய ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட் மாடல் 2021 குவான்சோ சர்வதேச மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த மாடல் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி முன்புறம் புதுவித எல்இடி ஹெட்லேம்ப் யூனிட்கள், ட்வீக் செய்யப்பட்ட கிரில் வழங்கப்பட்டு இருக்கிறது.

     ஜீப் காம்பஸ் பேஸ்லிப்ட்

    இத்துடன் மேம்பட்ட பம்ப்பர்கள், பாக் லேம்ப், முற்றிலும் புது வடிவமைப்பு கொண்ட ஏர் இன்டேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. காரின் பக்கவாட்டுகளில் பெரும் மாற்றங்கள் இன்றி முந்தைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது. இது புதிய அலாய் வீல்கள், ட்வீக் செய்யப்பட்ட டெயில் லைட்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    2021 பேஸ்லிப்ட் எஸ்யுவி மாடல் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் மற்றும் 2.0 லிட்டர் டீசல் யூனிட் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. தற்சமயம் விற்பனையாகும் மாடலிலும் இதே என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    இந்த என்ஜின்கள் முறையே 163 பிஹெச்பி பவர், 250 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் 173 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. 

    இத்துடன் பெட்ரோல் என்ஜினுக்கு 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேடிக் யூனிட், டீசல் என்ஜின் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் யூனிட் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது வாகனங்களுக்கு ஜனவரி முதல் புதிய விலை நிர்ணயம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஜனவரி 2021 முதல் தனது வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. அதன்படி ஹீரோ நிறுவன மாடல்கள் விலை ரூ. 1500 வரை உயர்த்தப்பட இருக்கிறது.

    உதிரிபாகங்கள் மற்றும் இதர கட்டணங்களுக்கான செலவீனங்கள் அதிகரித்து இருப்பதால் விலை உயர்வு அறிவிக்கப்பட இருப்பதாக ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பு மூலம் விலை உயர்வை அறிவிக்கும் முதல் இருசக்கர வாகன உற்பத்தியாளராக ஹீரோ மோட்டோகார்ப் இருக்கிறது.

    விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்ட்டிற்கு ஏற்ப வேறுபடும். மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களின் புதிய விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு ஜனவரி 1, 2020 முதல் அமலுக்கு வருகிறது.

    இந்தியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் சுங்கச்சாவடிகளே இருக்காது என மத்திய மந்திரி அறிவித்து இருக்கிறார்.


    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி நாட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுங்கச்சாவடிகளே இருக்காது என அறிவித்து இருக்கிறார். தற்சமயம் பயன்பாட்டில் இருக்கும் சுங்கச்சாவடிகளுக்கு மாற்றாக ஜிபிஎஸ் முறையிலான கட்டண சேவை அறிமுகம் செய்யப்படுகிறது.

    புதிய ஜிபிஎஸ் சிஸ்டம் மூலம் நெடுஞ்சாலையில் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இன்றி வேகமாக செல்ல முடியும். முற்றிலும் புதிய கட்டண முறைக்கு அரசு அனுமதி அளித்து இருக்கிறது. இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுக்க அமலாக்கப்படும் என மத்திய மந்திரி தெரிவித்தார்.

     நிதின் கட்கரி

    ஜிபிஎஸ் முறையிலான சுங்க கட்டண வசூலிக்கும் எந்திரம் ரஷ்ய அரசாங்கத்துடன் இணைந்து நிறுவப்பட இருக்கிறது. இந்த சிஸ்டம் வாகன உரிமையாளரின் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக பணத்தை எடுத்துக் கொள்ளும். 

    அனைத்து பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களில் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் கட்டாயம் வழங்கப்படுகிறது. எனினும், பழைய வாகனங்களில் இந்த வசதி வழங்கப்படவில்லை. இதனை சரி செய்யும் நோக்கில், அரசாங்கம் மாற்று முறைகளை அறிவிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

    ரெவோல்ட் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தனது வாகனங்களின் முன்பதிவை மீண்டும் துவங்கி உள்ளது.


    ரெவோல்ட் இன்டெலிகார்ப் நிறுவனம் தனது ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கான முன்பதிவை மீண்டும் இந்தியாவில் துவங்கி இருக்கிறது. தற்சமயம் இவை டெல்லி, பூனே, ஆமதாபாத், சென்னை, ஐதராபாத் மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் முன்பதிவு செய்யப்படுகிறது.

    மேற்குறிப்பிட்ட நகரங்களில் இரு மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கும் பல்வேறு பிளான்களின் அடிப்படையில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்திய சந்தையில் ரெவோல்ட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்து இருக்கிறது.

    அறிமுகமானது முதல் இரு மாடல்களும் முன்பதிவில் அசத்தின. இந்திய சந்தையில் ரெவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்கள் ஏபரல் 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டன. மை ரெவோல்ட் பிளான் சந்தா முறையில் ஆர்வி400 மாடல் மாதம் ரூ. 3999 துவக்க விலையில் வழங்கப்படுகிறது.

    ரெவோல்ட் ஆர்வி300 மாடல் மாதம் ரூ. 2999 எனும் துவக்க விலையில் வழங்கப்படுகிறது. இத்துடன் ஒருமுறை முன்பதிவு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இரு மாடல்களுக்கும் இந்த மாத கட்டணம் முறையே 38 மற்றும் 36 மாதங்களுக்கு செலுத்த வேண்டும்.

    ×