என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐ20 மாடல் கார் இந்திய முன்பதிவில் தொடர்ந்து அசத்தி வருகிறது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடேட் நிறுவனம் புதிய ஐ20 மாடல் காரை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. 6 ஏர்பேக், 7 ஸ்பீக்கர் அடங்கிய மியூசிக் சிஸ்டம், தொடுதிரையுடன் கூடிய மேப் வசதி உள்பட சொகுசு வசதிகளுடன் இந்த கார் விற்பனைக்கு வந்தது.
புதிய ரக ஹூண்டாய் ஐ20 கார் முதற்கட்டமாக 10 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. இதுதொடர்பாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடேட் நிறுவனத்தின் (விற்பனை, மார்க்கெட்டிங், சர்வீஸ்) இயக்குனர் தருண் கார்க் கூறியதாவது:-

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஐ20 மாடல் கார் 3 வகையான என்ஜின் வடிவமைப்பில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் பல்வேறு சொகுசு மற்றும் நவீன வசதிகள் கொண்ட இந்த கார், இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
குறிப்பாக இளம்வயதினரின் மனதை ஈர்த்துள்ளது. எனவே கார் அறிமுகம் செய்யப்பட்ட 40 நாட்களில், இதுவரையில் 30 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு கார் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா 6ஜி மாடல் இந்தியாவில் அசத்தல் சலுகையில் விற்பனை செய்யப்படுகிறது.
2020 ஆண்டு இறுதியை முன்னிட்டு ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரை வாங்குவோருக்கு அசத்தல் சலுகையை அறிவித்து இருக்கிறது. அதன்படி ஆக்டிவா 6ஜி வாங்குவோருக்கு ரூ. 5 ஆயிரம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
கேஷ்பேக் சலுகை வாடிக்கையாளர்கள் ஹோண்டா கூட்டு சேர்ந்த வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தி மாத தவணையை பெறும் போது வழங்கப்படுகிறது. இதன் மூலம் டாக்யூமென்டேஷன் முறை மற்றும் முன்பணம் செலுத்த வேண்டிய அவசியம் கிடையாது.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி இந்திய சந்தையில் அதிக பிரபலமான ஸ்கூட்டர் மாடல் ஆகும். இதன் பிஎஸ்6 வெர்ஷன் பல்வேறு ஹார்டுவேர் மாற்றங்களை பெற்று இருக்கிறது. அதன்படி முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த ஸ்கூட்டரில் பிஎஸ்6 ரக 110சிசி என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 7.68 பிஹெச்பி பவர், 8.79 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் வெளிப்புறம் பியூவல் பில்லர் கேப், என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் ஸ்விட்ச், சைலன்ட் ஸ்டார்ட்டர் போன்றவை வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா புது வேரியண்ட் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா ஏழு பேர் பயணிக்கும் வேரியண்ட் விவரங்கள் கடந்த வாரம் வெளியாகி இருந்தது. தற்சமயம் இந்த கார் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஸ்பை படங்களின் படி புதிய கிரெட்டா பின்புற ஆக்சில் தெளிவாக தெரிகிறது. புதிய கிரெட்டா வேரியண்ட்டில் நீண்ட ஒவர்ஹேங் மற்றும் பிரத்யேக ஸ்டைலிங் கொண்டிருக்கிறது. இத்துடன் ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லேம்ப்கள், மேம்பட்ட பின்புற பம்ப்பர் உள்ளிட்டவை காணப்படுகிறது.
ப்ரோடோடைப் மாடலில் முன்புறம் ஸ்டட் கிரில், முன்புறம் பார்க்கிங் சென்சார்கள், 5 சீட்டர் கிரெட்டாவில் உள்ளது போன்ற அலாய் வீல் டிசைன் வழங்கப்படுகிறது. இவைதவிர புது வேரியண்ட்டில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படாது என்றே கூறப்படுகிறது.
காரின் உள்புறம் கூடுதலாக மூன்றாம் அடுக்கு இருக்கைகள் வழங்கப்படுகிறது. இத்துடன் 360 டிகிரி சரவுண்ட் வியூ கேமரா, ஹெச்யுடி உள்ளிட்டவை வழங்கப்படலாம் என தெரிகிறது.
புதிய கிரெட்டா மாடலில் 138 பிஹெச்பி பவர் வழங்கும் 1.4 லிட்டர் டிஜிடிஐ டர்போ பெட்ரோல் யூனிட், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிசிடி யூனிட், 113 பிஹெச்பி வழங்கும் 1.5 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டீசல் மோட்டார், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படலாம்.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 650 ட்வின் மோட்டார்சைக்கிள் மாடல்களில் விரைவில் அசத்தல் அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 மாடல்களில் அலாய் வீல்களை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அப்டேட் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் வெளியாகி உள்ள தகவல்களின் படி ராயல் என்பீல்டு 650 ட்வின் மாடல்களுக்கான அலாய் வீல்கள் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதன் உறுதித்தன்மை சோதனை விரைவில் நிறைவு பெற இருக்கிறது. இது பிப்ரவரி 2021 வாக்கில் வழங்கப்படலாம் என தெரிகிறது.

அலாய் வீல்கள் வெளியானதும் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 வாடிக்கையாளர்கள் இதனை கூடுதல் அக்சஸரீயாக வாங்கிக் கொள்ளலாம். அலாய் வீல்கள் மட்டுமின்றி ராயல் என்பீல்டு நிறுவனம் டியூப்லெஸ் டையர்களையும் வழங்கலாம் என கூறப்படுகிறது.
அலாய் வீல்கள் தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் செய்யப்படாது என்றே தெரிகிறது. இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு 650சிசி மாடல்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இந்த வரவேற்புக்கு இவற்றின் விலை தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
டொயோட்டா நிறுவனத்தின் பார்ச்சூனர் டிஆர்டி மாடல் இந்திய விற்பனை நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டொயோட்டா நிறுவனம் தனது பார்ச்சூனர் டிஆர்டி மாடலின் இந்திய விற்பனையை நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட பார்ச்சூனர் டிஆர்டி மாடல் லிமிடெட் எடிஷன் எஸ்யுவி ஆகும். இது பல்வேறு காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் அப்டேட்களை கொண்டிருந்தது.
தற்சமயம் டொயோட்டா நிறுவனம் பார்ச்சூனர் டிஆர்டி மாடலை தனது வலைதளத்தில் இருந்து நீக்கி உள்ளது. அடுத்த ஆண்டு புதிய பார்ச்சூனர் பேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதால் டிஆர்டி லிமிடெட் எடிஷன் விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
பார்ச்சூனர் டிஆர்டி மாடலில் டூயல் டோன் ரூஃப், ரக்கட் சார்கோல் பிளாக் ஆர்18 அலாய் வீல்கள், 360 டிகிரி பானரோமிக் வியூ மாணிட்டர், ஆட்டோ ஃபோல்டு ஒஆர்விஎம், டூயல் டோன் டேஷ்போர்டு மற்றும் இலுமினேட் செய்யப்பட்ட ஸ்கஃபிள் பிளேட் வழங்கப்பட்டு இருக்கிறது.
லிமிடெட் எடிஷன் டொயோட்டா கார் 2.8 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் கொண்டுள்ளது. இந்த என்ஜின் 170 பிஹெச்பி பவர், 450 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.
2021 ஹார்லி டேவிட்சன் நிறுவன மோட்டார்சைக்கிள் மாடல்களின் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது புத்தாண்டு திட்டங்களை ஜனவரி 19 ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்து இருக்கிறது. இந்த அறிவிப்பு விர்ச்சுவல் செய்தியாளர் சந்திப்பு மூலம் நடைபெற இருக்கிறது.
இந்த சந்திப்பின் போது 2021 மோட்டார்சைக்கிள் மாடல்கள், ரைடிங் கியர், அக்சஸரீ மற்றும் பாகங்கள் உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்த இருப்பதாகவும் ஹார்லி டேவிட்சன் தெரிவித்து உள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பேன் அமெரிக்கா மாடல் பற்றி இந்நிறுவனம் எந்த தகவலும் வழங்கவில்லை.

2021 பிப்ரவரி மாதத்தில் ஹார்லி டேவிட்சன் பேன் அமெரிக்கா மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுதவிர முற்றிலும் புதய 1250 கஸ்டம் மாடல் ஜனவரியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் இந்த மாடல் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.
எனினும், தற்போதைய தகவல்களின் படி 1250 கஸ்டம் மாடல் பேன் அமெரிக்கா மாடலில் வழங்கப்படும் என்ஜின் கொண்டிருக்கும் என்றும் அறிமுகமானதும் விரைவில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.
ஸ்கோடா நிறுவன கார் மாடலுக்கு ரூ. 90 ஆயிரம் வரையிலான தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவன விற்பனையாளர்கள் டிசம்பர் மாத சலுகைகளை அறிவித்து வழங்குகின்றன. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன. மேலும் இந்த சலுகை ஸ்கோடா ரேபிட் மாடலுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
ஸ்கோடா ரேபிட் ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் வேரியண்ட்களுக்கு ரூ. 50 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 25 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 15 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சமீபத்தில் ஸ்கோடா நிறுவனம் ரைடர் வேரியண்ட் விற்பனை நிறுத்தியது.

இதுதவிர அடுத்த ஆண்டு ஸ்கோடா நிறுவனம் புதிய மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஸ்கோடா விஷன் இன் எஸ்யுவி, நான்காவது தலைமுறை ஆக்டேவியா, பெட்ரோல் என்ஜின் கொண்ட கோடியக் உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது மிட் சைஸ் எஸ்யுவி மாடலான ஹேரியரை 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் வழங்கி வருகிறது. எனினும், இந்த கார் பிஎஸ்6 ரக பெட்ரோல் மோட்டார் ஆப்ஷன் கொண்டிருக்கவில்லை.
இந்த குறையை தீர்க்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் ஹேரியர் மாடலின் பெட்ரோல் வேரியண்ட்டை உருவாக்கி இருப்பது சமீபத்திய ஸ்பை படங்களில் தெரியவந்துள்ளது. இந்த படங்கள் பூனேவில் உள்ள உற்பத்தி ஆலை அருகே சோதனை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த மாடலில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் வழங்கப்படலாம் என தெரிகிறது. அறிமுகம் செய்யும் போது இந்த வேரியண்ட் விலை போட்டி நிறுவன மாடல்களை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என்றே கூறப்படுகிறது. இதன் மூலம் விற்பனையை அதிகப்படுத்த டாடா மோட்டார்ஸ் முயற்சிக்கலாம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மூன்று அடுக்கு இருக்கைகள் கொண்ட கிராவிடாஸ் மாடலை தழுவிய ஹேரியரை விரைவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஹெச்பிஎக்ஸ் கான்செப்ட் பெயரில் உருவாகும் மைக்ரோ எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.
ஹூன்டாய் நிறுவனம் சார்பில் தேசிய அளவிலான கார் சர்வீஸ் முகாம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஹூன்டாய் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக தேசிய அளவிலான கார் சர்வீஸ் முகாமை நடத்துகிறது. இந்த முகாம் டிசம்பர் 14 ஆம் தேதி துவங்கி 10 நாட்கள் நடக்க இருக்கிறது.
சிறப்பு முகாமை ‘ஹூன்டாய் ஸ்மார்ட் கேர் கிளினிக்’ என்ற பெயரில் ஹூண்டாய் அறிவித்து உள்ளது. இந்த முகாம் நாடு முழுவதும் உள்ள 1,288 ஹூன்டாய் சேவை மையங்களில் டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

சர்வீஸ் முகாமில் 200 வாடிக்கையாளர்களுக்கு 1 வருடம் நீட்டிக்கப்பட்ட வாரண்டி, 1,000 வாடிக்கையாளர்களுக்கு அமேசான் வவுச்சர்கள் அல்லது ரூ. 2 ஆயிரம் மதிப்புடைய எரிபொருள் நிரப்பும் அட்டைகள், மெக்கானிக்கல் பொருட்களுக்கு 10 சதவீத தள்ளுபடி, மெக்கானிக்கல் கூலிக்கு 20 சதவீதம் வரையிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி மதிப்பு கூட்டு சேவைகளுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி, 50 சேவை மையங்களில் பரிசோதனை, புதிய கார்களை வாங்கும் போது ரூ.70 ஆயிரம் வரை கவர்ச்சிகரமான தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளன.
டொயோட்டா நிறுவனத்தின் பார்ச்சூனர் லெஜண்டர் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டொயோட்டா நிறுவனம் பார்ச்சூனர் லெஜண்டர் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய பார்ச்சூனர் லெஜண்டர் ஸ்டான்டர்டு எஸ்யுவி மாடலை விட அதிக சக்திவாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.
தற்போதைய தகவல்களின் படி டொயோட்டா பார்ச்சூனர் லெஜண்டர் எஸ்யுவி இந்தியாவில் 2021 ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இந்த மாடல் ஸ்டான்டர்டு பார்ச்சூனர் மாடலின் பிரீமியம் வெர்ஷாக விற்பனை செய்யப்படலாம்.
பார்ச்சூனர் லெஜண்டர் எஸ்யுவி மாடலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டு, புது அம்சங்கள், முற்றிலும் புதிய என்ஜின் வழங்கப்படுகிறது. முன்புறம் கூர்மையான எல்இடி ஹெட்லேம்ப்கள், டூயல் ப்ரோஜெக்டர் செட்டப் மற்றும் எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்படுகிறது.
இத்துடன் மெல்லிய கிரில், புது முன்புற பம்ப்பர், இருபுறங்களிலும் எல்இடி பாக் லேம்ப்கள், பெரிய ஏர் இன்டேக், 20 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. காரின் உள்புறம் பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன.
புதிய பார்ச்சூனர் லெஜண்டர் மாடலில் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 204 பிஹெச்பி பவர், 500 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் மேனுவல் கியர்பாக்ஸ், ஆப்ஷனல் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
போர்ஷே நிறுவனத்தின் கயென் மாடல் உற்பத்தியில் புதிய மைல்கல் எட்டியுள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஜெர்மன் நாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான போர்ஷே கயென் எஸ்யுவி மாடல் உற்பத்தியில் பத்து லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. மைல்கல் எட்டிய யூனிட் ஸ்லோவேகியா ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது. இந்த மாடல் கார்மைன் ரெட் நிறம் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் இந்த மாடல் ஜெர்மனியை சேர்ந்த வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யப்பட்டது. 2002 பாரிஸ் மோட்டார் விழாவில் போர்ஷே கயென் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் போர்ஷே கயென் மாடல் 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்திய சந்தையில் போர்ஷே கயென் மாடல் துவக்க விலை ரூ. 1.19 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்சமயம் இந்த மாடல் கயென், கயென் இ ஹைப்ரிட் மற்றும் கயென் டர்போ என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
போர்ஷே கயென் மாடல் இந்திய வேரியண்ட் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல், 4.0 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
பியாஜியோ நிறுவனத்தின் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் முன்பதிவு துவங்கி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
பியாஜியோ நிறுவனம் புதிய அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடலுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. புதிய ஸ்கூட்டருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு பியாஜியோ வலைதளம் அல்லது விற்பனையகங்களில் மேற்கொள்ள முடியும்.
அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் மாடல் விலை ரூ. 1.27 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது எஸ்ஆர் 160 மாடல் விலையை விட ரூ. 20 ஆயிரம் அதிகம் ஆகும்.
புதிய அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. எனினும், விலை அடிப்படையில் அப்ரிலியா மாடல் விலை சற்றே அதிகம் ஆகும்.
புதிய எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் இந்திய சந்தைக்கென உருவாக்கப்பட்டு இருக்கிறது. அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடலில் உள்ள எல்இடி ஹெட்லேம்ப்கள் ஆர்எஸ்660 மாடலில் உள்ளது போன்று வழங்கப்பட்டு இருக்கிறது.






