இந்தியாவை மிரட்டிய அமெரிக்கா இப்போது கெஞ்சுகிறது - கச்சா எண்ணெய் விவகாரத்தில் ஈரான் விமர்சனம் | Russian oil
- 30 நாட்கள் மட்டும் ரஷிய எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியது.
- இறக்குமதியை நிறுத்துமாறு இந்தியாவை மிரட்டுவதில் அமெரிக்கா பல மாதங்கள் செலவிட்டது.
மத்திய கிழக்கில் ஈரான்-அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதால், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலரை தாண்டியுள்ளது.
இதனால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் குறைக்க கடலில் கப்பல்களில் தேங்கி நிற்கும் ரஷிய எண்ணெய் கப்பல்களை வாங்குவதற்கு ஏதுவாக, ரஷியா மீதான பொருளாதார தடைகளை தளர்த்தி 30 நாட்களுக்கு மட்டும் அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது.
அண்மையில் அமெரிக்கா - இந்தியா இடையே ஏற்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் ரஷியாவிடம் எண்ணெய் வாங்க மாட்டோம் என இந்தியா வாக்குறுதி அளித்திருந்த நிலையில் போர் சூழலை கருத்தில் கொண்டு 30 நாட்கள் மட்டும் ரஷிய எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அனுமதி அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்தது.
இந்நிலையில் ஒருகாலத்தில் ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்க வேண்டாம் என்று இந்தியா உட்பட உலக நாடுகளை மிரட்டிய அமெரிக்கா, இப்போது அதே ரஷியாவிடம் எண்ணெய் வாங்கிக் கொள்ளும்படி அந்த நாடுகளிடம் கெஞ்சுவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அர்கசி விமர்சித்துள்ளார்.
இந்திய செய்தித்தாளில் வந்த கட்டுரையை பகிர்ந்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "ரஷியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துமாறு இந்தியாவை மிரட்டுவதில் அமெரிக்கா பல மாதங்கள் செலவிட்டது.
ஈரானுடனான இரண்டு வாரப் போருக்குப் பிறகு, வெள்ளை மாளிகை இப்போது இந்தியா உட்பட உலக நாடுகளிடம் ரஷிய கச்சா எண்ணெயை வாங்குமாறு கெஞ்சுகிறது.
ஈரான் மீதான சட்டவிரோத போரை ஆதரிப்பது ரஷியாவிற்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவைப் பெறும் என்று ஐரோப்பா நினைத்தது. கொடுமை" என்று குறிப்பிட்டுள்ளார்.