Kharg Island: ஈரான் எண்ணெய் ஏற்றுமதிக்கு அதிமுக்கியமான தீவு மீது அமெரிக்கா குண்டுவீச்சு
- ஈரானின் கச்சா எண்ணை ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதத்தை இந்த தீவு கையாளுகிறது.
- நாங்கள் தாக்க விரும்பும் எந்தவொரு இலக்கையும் தற்காத்துக்கொள்ளும் திறன் ஈரானிடம் துளியும் இல்லை.
அணுசக்தி ஒப்பந்த விவகாரம் தொடர்பாக ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து கடந்த 28-ந்தேதி தொடங்கிய போர் இன்று 15-வது நாளாக நீடித்து கொண்டிருக்கிறது.
இப்போரில் ஈரானின் ராணுவ தளங்கள், போர்க் கப்பல்கள், விமானங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை ஈரான் தாக்கி வருகிறது.
இதற்கிடையே உலகின் கச்சா எண்ணை போக்குவரத்தில் முக்கிய பாதையாக உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி உள்ளது. இதனால் கச்சா எண்ணை, எரிவாயு விநியோகம் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஜலசந்தி வழியாக கப்பல் போக்கு வரத்தை தடுக்க கூடாது என்று அமெரிக்கா எச்சரித்து உள்ளது.
இந்த நிலையில் ஈரானின் கச்சா எண்ணை ஏற்றுமதியில் முக்கிய பங்காற்றும் கார்க் தீவு மீது அமெரிக்கா சரமாரியாக குண்டுவீசி தாக்குதல் நடத்தி உள்ளது. பாரசீக வளைகுடாவில் உள்ள கார்க் தீவு, ஈரானின் எண்ணை முனையமாக செயல்படுகிறது.
அங்கு பெட்ரோலிய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. ஈரானின் கச்சா எண்ணை ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதத்தை இந்த தீவு கையாளுகிறது. மேலும் அந்நாட்டின் எரிசக்தித் துறைக்கு ஒரு மிக முக்கிய மையமாகவும் இது திகழ்கிறது.
ஈரானுக்கு முக்கியம் வாய்ந்த அந்த தீவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தி அங்குள்ள ராணுவ உள் கட்டமைப்புகள், கடற்படை தளம், விமான நிலைய கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை அழித்து உள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியதாவது,
அமெரிக்க ராணுவம் மத்திய கிழக்கு வரலாற்றிலேயே மிகவும் சக்திவாய்ந்த குண்டுவீச்சுத் தாக்குதல்களில் ஒன்றை நடத்தியது. ஈரானின் மகுடமாகத் திகழும் கார்க் தீவில் அனைத்து ராணுவ இலக்குகளையும் அமெரிக்க ராணுவம் முற்றிலுமாக அழித்துள்ளது.
மனிதநேயம் மற்றும் கண்ணியம் கருதி அந்த தீவில் உள்ள எண்ணை உள்கட்டமைப்புகளை அழிக்காமல் விட்டுவிட நான் முடிவெடுத்துள்ளேன். ஆனால் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் தடையின்றியும் பாதுகாப்பாகவும் செல்வதற்கு ஈரானோ அல்லது வேறு எவரேனும் இடையூறு செய்தால், எனது இந்த முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்வேன்.
நாங்கள் தாக்க விரும்பும் எந்தவொரு இலக்கையும் தற்காத்துக்கொள்ளும் திறன் ஈரானிடம் துளியும் இல்லை. ஈரானின் ராணுவமும், இந்தத் தீவிரவாத ஆட்சியுடன் தொடர்புடைய மற்ற அனைவரும் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு, தங்கள் நாட்டில் எஞ்சி இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனமாகும்" என்று டிரம்ப் கூறி உள்ளார்.
மேலும் அவர் கூறும் போது, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களுக்கான பாதுகாப்பை விரைவில் அமெரிக்க கடற்படை வழங்கும் என்றார்.
கார்க் தீவு மீது நடத்தப் பட்ட தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்கப் பங்குகளைக் கொண்ட அல்லது அமெரிக்காவுடன் ஒத்துழைப்புடன் செயல்படும் எண்ணை நிறுவனங்களுக்கு சொந்தமான அனைத்து எண்ணை மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி அழிப்போம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இதற்கிடையே ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன. தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் மீது தொடர்ந்து தாககுதல்கள் நடத்தப்பட்டன. அதேபோல் இஸ்ரேல் மீது ஈரான் சரமா ரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.