லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
கிழக்கு உக்ரேனிய நகரமான சீவிரோடோனெட்ஸ்கை ரஷியப் படைகள் சுற்றி வளைத்து தங்கள் பிடியை இறுக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அனைத்து பாலங்களும் தகர்க்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்களை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பகுதி ஆளுநர் செர்ஹி கைடாய் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஷியா தாக்குதலினால் உக்ரைனுக்குள் ஏழு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம் விட்டு இடம் பெயர்ந்துள்ளதாக ஐநா அகதிகள் நிறுவனம் மற்றும் புலம் பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்யா-உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்த்ததாக ரஷிய முன்னாள் பிரதமர் மிகேல் கேஸ்னவ் தெரிவித்துள்ளார். எனினும் ரஷியா போரை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்பும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், டொனெட்ஸ்கில் உள்ள அனல் மின்நிலையத்தின் மீது ரஷியப் படைகள் பீரங்கித் தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் அதன் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆக்கிரமிப்பாளர்கள் உக்ரேனிய மொழி பாடங்களை எவ்வளவு வேண்டுமானாலும் தடை செய்யலாம், எங்கள் ஆசிரியர்களை பயமுறுத்தலாம். ஆனால் அவர்கள் உக்ரேனிய கல்வியை ஒருபோதும் தடை செய்யமுடியாது என அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலேனா ஜெலென்ஸ்கா தெரிவித்தார். பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கூட கட்டிடங்களுக்குப் பதிலாக இடிபாடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. போர் நடந்தாலும் வாழ்க்கை தொடரும். உக்ரேனிய குழந்தைகளுக்கு தொடர்ந்து கல்வி வழங்க உக்ரேனிய அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்றார்.
உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும் என எதிர்பார்ப்பதாகவும், அதேசமயம் ரஷியா ஜனநாயகப் பாதைக்குத் திரும்பும் என்றும் ரஷிய முன்னாள் பிரதமர் காஸ்யனோவ் தெரிவித்துள்ளார். இவர் ரஷிய பிரதமராக இருந்தபோது மேற்கத்திய நாடுகளுடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா தற்போது கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களை முற்றுகையிட்டுள்ளது. இதில் ரசாயன தொழிற்சாலைகள் அதிகம் உள்ள சீவிரோடோனெட்ஸ்க் என்ற உக்ரைன் நகரத்தை ரஷிய வீரர்கள் 70% கைப்பற்றிவிட்டதாக அப்பகுதி ஆளுநர் செர்ஹி கைடாய் தெரிவித்துள்ளார். மேலும் ரஷியா, தொழிற்சாலைகளில் தொடர்ந்து பீரங்கி தாக்குதல் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். இதனால் உக்ரைனில் ஆயுதங்கள் தயாரிக்கும் பணி பின்னடைவை சந்தித்துள்ளது.
டோனெட்ஸ்கில் உள்ள உலேதார் அனல் மின்நிலையத்தின் மீது ரஷிய படைகள் பீரங்கித் தாக்குதல் நடத்தி உள்ளன. இந்த தாக்குதலில் அனல் மின் நிலைய வளாகத்தில் தீப்பற்றி எரிந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் மின் உற்பத்தி நிலையத்தின் நிர்வாக கட்டிடம் அழிக்கப்பட்டதாக, அதிகாரிகள் கூறியதை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷிய படையெடுப்புக்கு எதிராக உக்ரைனுக்கு உதவும் வகையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நவீன ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த ஆயுதங்கள் உக்ரைனின் தெர்நோபில் பகுதியில் உள்ள மிகப்பெரிய கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன. இந்த கிடங்கை ஏவுகணை தாக்குதல் மூலம் நேற்று அழித்ததாக ரஷியா அறிவித்துள்ளது.
உக்ரைனின் சீவெரோடோனெட்ஸ் நகரை படிப்படியாக கைப்பற்ற ரஷியா அதிக அளவில் பீரங்கிகளை பயன்படுத்துகிறது என்று இங்கிலாந்து தெரிவித்துள்ளது. அண்மை காலமாக சில போர் பகுதிகளில் தனது மூன்றாவது பட்டாலியனை நிலைநிறுத்த ரஷியா தயாராகி விட்டதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
ரஷியாவுடனான உக்ரைன் போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று யாருக்கும் தெரியாது என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அவரது காணொலி உரையில், உக்ரைன் ராணுவத்தினரை நினைத்து பெருமைப்படுவதாகக் கூறினார். மே மாத தொடக்கத்தில், டான்பாஸ் நகரை கைப்பற்றி விடுவோம் என்று ரஷிய படைகள் நம்பியதாகவும், ஆனால் அதை உக்ரைன் படைகள் முறியடித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் சீவிரோடோனெட்ஸ்க் நகரில் உக்ரைனுக்காகப் போரிட்ட இங்கிலாந்தின் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப் பட்டதாக அவரது குடும்பத்தினர் சமூக ஊடகங்களில் தெரிவித்தனர். ஜோர்டான் கேட்லி என்ற அந்த ராணுவ வீரர் மார்ச் மாதம் இங்கிலாந்து ராணுவத்தை விட்டு வெளியேறினார். தீவிர பரிசீலனைக்கு பிறகே அவர் ரஷிய படையெடுப்பிற்கு எதிரான போராட்டத்தில் உக்ரைனுக்குச் உதவுவதற்காக அந்நாட்டு ராணுவத்தில் இணைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.