உலகம்
null

லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

Published On 2022-06-05 11:38 GMT   |   Update On 2022-06-23 00:41 GMT
  • கிழக்குப் பகுதியில் ரஷியப் படைகளின் புதிய தாக்குதல்களை முறியடித்திருப்பதாக உக்ரைன் தகவல்.
  • மேற்கத்திய நாடுகளின் விண்வெளித் துறை, போரை நோக்கிச் செல்வதாக ரஷிய அரசு விண்வெளிக் கழகம் தகவல்


2022-06-23 00:41 GMT

உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியா இப்போது கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதி மீது தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதியைச் சேர்ந்த 20 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் ரஷியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-06-22 21:01 GMT

ரஷியாவின் தென்மேற்கு பகுதியில் செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஆலை முழுவதும் தீப்பிடித்து எாிந்து நாசமானது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில் தீ விபத்து ஏற்பட்டது. இது ஒரு பயங்கரவாத செயல் என ஆலை நிர்வாகம் தொிவித்துள்ளது.

உக்ரேனிய டிரோன்கள் ஆலையில் மேலே பறந்ததாகவும், அவை ஆலையின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதாக உள்ளுா் செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன. ஆனால் இத்தாக்குதலுக்கு உக்ரைன் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

2022-06-22 09:49 GMT

ஜூன் மாதத்தின் முதல் 22 நாட்களில் உக்ரைன் தானிய ஏற்றுமதி, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்ததைவிட 48% குறைந்து 907,000 டன்களாக உள்ளது.

2022-06-22 09:33 GMT

ரஷியா தீவிர கவனம் செலுத்தி டான்பாசில் இரண்டு முக்கிய நகரங்களை சுற்றிவளைக்க ரஷிய படைகள் முன்னேறுவதால், செவெரோடோனெட்ஸ்க் நகரம் "நரகம்" ஆக மாறிவருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

2022-06-22 09:31 GMT

உக்ரைனின் எல்லையான தெற்கு ரோஸ்டோவ் பிராந்தியத்தில், ரஷியாவின் நோவோஷாக்டின்ஸ்க் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தகவலை உள்ளூர் அவசர சேவைப்பிரிவு தெரிவித்துள்ளது.

2022-06-22 08:01 GMT

கிழக்கு கார்கிவ் பகுதியில் நேற்று ரஷிய ஷெல் நடத்திய தாக்குதலில், 8 வயது குழந்தை உள்பட 15 பேர் கொல்லப்பட்டதாக ஆளுநர் ஒலெக் சினெகுபோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மேலும் கூறுகையில், "ரஷிய ஷெல் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர். காங்கிவ் பகுதியில் ரஷியா பகர்நேர ஷெல் தாக்குதலின் பயங்கரமான விளைவுகள் இதுவாகும். இதுபோன்று ஏற்கனவே நான்கு வெவ்வேறு சம்பவங்களில் இறப்புகள் மற்றும் காயங்கள் நிகழ்ந்தன. இது பயங்கரவாதம். இவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றச் செயல்கள். அவை தண்டிக்கப்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.

2022-06-22 00:20 GMT

அமெரிக்க அரசு வழக்கறிஞர் மெர்ரிக் கார்லேண்ட் போர் நடந்து வரும் உக்ரைன் நகருக்குச் சென்றார். அப்போது அவர் கூறுகையில், உக்ரைனிய மக்களுக்கு அமெரிக்காவின் அசைக்க முடியாத ஆதரவை வெளிப்படுத்த நான் வந்துள்ளேன். போர்க்குற்றங்கள் புரிந்தவர்களை அதற்கு பொறுப்பேற்க வைக்கும் உக்ரைனிய அதிகாரிகளுக்கு உதவ அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றிய நம்முடைய விவாதங்களை தொடர வந்துள்ளேன் என தெரிவித்தார்.

2022-06-21 19:09 GMT

ரஷிய போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் குழந்தைகளுக்கு உதவ தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை விற்க ரஷிய பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ் முடிவு செய்தார். ஹெரிடேஜ் நிறுவனத்தால் நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் இவரின் நோபல் பரிசு 103 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 808 கோடி ரூபாய்க்கு) ஏலம் போனது. இந்த தொகை முழுவதையும் உக்ரைனில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்திற்கு டிமிட்ரி முரடோவ் வழங்கினார்.

2022-06-21 17:23 GMT

உக்ரைன் இரட்டை நகரங்களான செவெரோடோனெட்ஸ்க் மற்றும் லைசிசான்ஸ்க் ஆகியவற்றிற்கு அருகிலுள்ள டோஷ்கிவ்கா கிராமத்தை கைப்பற்றி விட்டதாக ரஷிய படைகள் அறிவித்துள்ளன. இந்த பகுதியில் ரஷியா படைகளுக்கும் உக்ரைன் ராணுவத்திற்கும் இடையே பல வாரங்களாக சண்டை நடைபெற்று வந்தது.

2022-06-21 08:37 GMT

தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் பல குண்டு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக, பிராந்திய நிர்வாகம் தெரிவித்துள்ளது. மூன்று பெரிய குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகவும், நகரத்திலிருந்து கறுப்புப் புகை கிளம்பியதாகவும் சாட்சிகள் தெரிவித்தன. திங்கட்கிழமை மைக்கோலைய்வைச் சுற்றியுள்ள பகுதியில் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து குண்டு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News