உலகம்

லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

Published On 2022-06-05 17:08 IST   |   Update On 2022-06-23 06:11:00 IST
2022-06-12 22:01 GMT

உக்ரைன் மரியுபோல் நகரில் மேலும் 24 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷிய படைகளின் தாக்குதலை நிறுத்த உக்ரைன் படைகள் கடுமையான சண்டை போட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022-06-12 12:29 GMT

மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்கு ஆலை முற்றுகையின்போது கொல்லப்பட்ட உக்ரைன் வீரர்களின் உடல்கள் இன்னும் மீட்கப்படாமல் உள்ளதாக, உக்ரைனின் அசோவ் தேசிய காவல் படைப்பிரிவின் முன்னாள் தளபதி தெரிவித்தார்.

2022-06-12 12:26 GMT

உக்ரைனின் டெர்னோபில் பகுதியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய குடோனை காலிபர் குண்டுகளை வீசி அழித்துவிட்டதாக, ரஷிய பாதுகாப்பு அமைச்சக தகவலை மேற்கோள் காட்டி இன்டர்பாக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் கார்கிவ் அருகே, உக்ரைனின் SU-25 போர் விமானங்கள் மூன்றை சுட்டு வீழ்த்தியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-06-12 12:19 GMT

உக்ரைனின் சோர்ட்கிவ் நகரில் ரஷியா நடத்திய ராக்கெட் தாக்குதலில் 22 பேர் காயமடைந்துள்ளதாக பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.

2022-06-12 08:01 GMT

உக்ரைனின் தென்கிழக்கு கெர்சன் மற்றும் ஜபோரிஜியா பிராந்தியங்களில், ரஷிய படைகளிடம் இருந்து கிராமங்கள் மற்றும் நகரங்களை உக்ரைன் படைகள் மீண்டும் கைப்பற்றிவிட்டதாக அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார். எனினும், சிவியரோடோனெட்ஸ்க் பகுதியில் இன்னும் சண்டை தொடர்ந்து நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார். விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா, உக்ரைனுக்கு சென்று ஜெலன்ஸ்கியைச் சந்தித்து பேசினார். அப்போது, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கான உக்ரைனின் கோரிக்கை குறித்து, அடுத்த வார இறுதிக்குள் முடிவு செய்யப்படும் என்று கூறிய நிலையில், ஜெலன்ஸ்கி தனது நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளார்.

உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் என்ற அந்தஸ்து வழங்கும் முடிவு உக்ரைனை மட்டுமல்ல, முழு ஐரோப்பிய ஒன்றியத்தையும் வலுப்படுத்தும் என ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

2022-06-12 07:34 GMT

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ‘ரஷியா தனது நாட்டு பாதுகாப்பையும், கண்ணியத்தையும் உறுதி செய்யும் விஷயத்தில் வெற்றி அடைந்துள்ளது. தனக்கு எதிரான அனைத்து சவால்களையும் தைரியமாக எதிர்த்து வென்றிருக்கிறது’ என கூறியுள்ளார்.

2022-06-12 02:47 GMT

போலந்தில் நேட்டோ படைகளை கட்டியெழுப்பி வருவதற்கு மாஸ்கோவின் பதிலடி கடுமையாக இருக்கும் என ரஷியாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷிய கூட்டமைப்பின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட போலந்தில் நேட்டோ படைகளுக்கு பதிலடி மிகவும் கடுமையாக இருக்கும் என ஐரோப்பாவுடனான ரஷிய உறவுகளுக்குப் பொறுப்பான வெளியுறவு அமைச்சகத் துறை தலைவர் ஒலெக் தியாப்கின் தெரிவித்தார்.

2022-06-11 23:34 GMT

ஐரோப்பிய ஒன்றிய அமைப்பில் உக்ரைன் இணைவது குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என அந்த அமைப்பின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவ் சென்றுள்ள அவர், அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். அடுத்த வார இறுதிக்குள் எங்களது முடிவு இறுதி செய்யப்படும் என்றும் அப்போது அவர் கூறினார். ரஷியாவின் படையெடுப்பால் உக்ரைன் நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அவர் கவலை தெரிவித்தார்.

2022-06-11 22:55 GMT

ரஷிய படைகள் உக்ரைன் மீது தாக்குதல் தொடங்கியது முதல் 300,000 டன் உணவு தானியங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் விவசாயத்துறை இணை அமைச்சர் தாராஸ் வைசோட்ஸ்கி தெரிவித்துள்ளார். கருங்கடல் பகுதி துறைமுக நகரான மைகோலாய்வில் உள்ள மிகப்பெரிய விளை பொருள் சேமிப்பு கிடங்கு மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும் அதில் கோதுமை, சோளம் உள்ளிட்ட தானியங்கள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2022-06-11 22:50 GMT

தென்கிழக்கு உக்ரைன் நகரமான அவ்திவ்காவில் ரசாயன ஆலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ரஷிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த பகுதியில் புகைமூட்டம் காணப்படுவதாகவும், தற்போது அந்த நகரம் உக்ரைன் படைகள் வசம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மே மாத தொடக்கத்தில், அவ்திவ்காவில் ஒரு ஆலை மீது ரஷிய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குலில்10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர்.

Similar News