உலகம்

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது 25 சதவீத வரி - டிரம்ப் அறிவிப்பு.. இந்தியாவுக்கு பாதிப்பு!

Published On 2026-01-13 11:26 IST   |   Update On 2026-01-13 11:26:00 IST
  • போராட்டம்-வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.
  • அமெரிக்காவுடன் செய்யப்படும் அனைத்து வர்த்தகத்திற்கும் 25 சதவீத வரியைச் செலுத்த வேண்டும்.

ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது.

அங்கு 2 வாரங்களுக்கு மேலாக போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இதனால் ஈரானில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. போராட்டங்கள் பரவுவதை தடுக்க செல்போன், இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் போராட்டங்கள் கட்டுக்குள் வரவில்லை. இதற்கிடையே போராட்டம்-வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி னால் ஈரான் விவகாரத்தில் தலையிடுவோம் என்றும் ராணுவ நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா தெரிவித்தது. மேலும் ஈரானில் போராட்டக்காரர்களுக்கு உதவ தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

 இந்த நிலையில் ஈரானுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அந்நாட்டுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-

உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும், அமெரிக்காவுடன் செய்யப்படும் அனைத்து வர்த்தகத்திற்கும் 25 சதவீத வரியைச் செலுத்த வேண்டும். இந்த உத்தரவு இறுதியானது மற்றும் முடிவானது என்று தெரிவித்து உள்ளார்.

ஈரானுடன் சீனா மிக அதிகளவில் வர்த்தகம் செய்து வருகிறது. இதனால் இந்த வரி அமலுக்கு வரும்போது சீனா அதிகம் பாதிக்கப்படும்.

அதேபோல் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி போன்ற நாடுகளும் ஈரானுடன் கணிசமான அளவுக்கு வர்த்தகம் செய்கின்றன. இதனால் டிரம்ப்பின் இந்த உத்தரவால் இந்தியா உள்பட இந்த நாடுகளும் பாதிக்கப்படக் கூடும்.

ஈரான் வெளியுறவுத் துறை மந்திரி அப்பாஸ் அராக்சி கூறும்போது, அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு பயப்பட மாட்டோம். எங்கள் உரிமைகளை பாதுகாக்க அனைத்து வழிகளிலும் தயாராக இருக்கிறோம்.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். அதேவேளையில் தேவை ஏற்பட்டால் போரிடவும் தயாராக இருக்கிறோம் என்றார்.

ஏற்க்கனவே ஈரான் மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் விதித்த பொருளாதார தடைகளே, ஈரானின் தற்போது நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News