தமிழ்நாடு செய்திகள்

இல்லாத பிரச்சனைகளை இருப்பதாக கூறி பூதாகரமாக ஸ்டாலின் காட்டி வருகிறார்- ஆர்.பி. உதயகுமார்

Published On 2025-06-07 14:04 IST   |   Update On 2025-06-07 14:04:00 IST
  • மதுரை தி.மு.க. பொதுக்குழுவில் மன்னராட்சிக்கு வழி வகுக்க உதயநிதிக்கு துணை நிற்போம் என்று தீர்மானம் போட்டார்கள்.
  • தமிழகத்தில் மன்னராட்சியை ஒழித்து எடப்பாடியார் தலைமையில் மக்களாட்சி வளர செய்வோம்.

மதுரை:

தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் இதுவரை கண்டிராத வகையில் மிகவும் அநியாயமான ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சியை வழிநடத்தும் பொம்மை முதல்வர் ஸ்டாலின், நியாயமான தொகுதி மறுவரை குறித்து பேசுகிறார். தி.மு.க. அரசின் தோல்விகளையும், மோசடிகளையும் மறைப்பதற்காக இதுபோன்ற கவனத்தை சிதறடித்து விஷயங்களை பயன்படுத்துவதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும்.

தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும் அது தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதை, மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் எடப்பாடியார் தெரிவித்து உள்ளார். தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையும் நிலை வந்தால் அதை எதிர்க்கும் முதல் குரல் என்னுடையதாக தான் இருக்கும் என்று எடப்பாடியார் ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார். அதே போல அடிமை அமைச்சர் ரகுபதி தொடர்ந்து வார்த்தைகளால் வாந்தி எடுத்து வைத்ததையெல்லாம் மக்கள் பொருட்படுத்த தயாராக இல்லை.

மதுரை தி.மு.க. பொதுக்குழுவில் மன்னராட்சிக்கு வழி வகுக்க உதயநிதிக்கு துணை நிற்போம் என்று தீர்மானம் போட்டார்கள். அதில் திருப்தி அடையாத உதயநிதி ஸ்டாலின், தனக்கு துணைபொதுச்செயலாளர் பதவியை கேட்டு அழுத்தம் கொடுத்ததாக பத்திரிகையில் செய்தி வருகிறது. இதையெல்லாம் மடைமாற்றம் செய்வதற்காகத்தான் இல்லாத பிரச்சனையை பூதாகரமாக்கி கானல் நீர் போல் காட்சிப்படுத்த நினைக்கிறார். நம்மை சூழ்ந்து இருக்கின்ற இந்த ஆபத்தை மீட்டு எடுக்கக்கூடிய ஒரே சக்தி எடப்பாடியார் தான். தமிழகத்தில் மன்னராட்சியை ஒழித்து எடப்பாடியார் தலைமையில் மக்களாட்சி வளர செய்வோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News