புயலால் சேதமடைந்த கிறிஸ்தவ ஆலயத்தை பார்வையிட்ட சுற்றுலா பயணிகள்
தனுஷ்கோடி சிதைந்து 61 ஆண்டுகள் நிறைவு: ஆயிரம் பேருடன் கடலில் மூழ்கிய ரெயில் - விலகாத சோகம்
ராமேசுவரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தனுஷ்கோடி கடல் பகுதி. 1964-ம் ஆண்டுக்கு முன்பு வரை ராமேசுவரத்திற்கு அடுத்தபடியாக தனுஷ்கோடி சிறப்பு பகுதியாக விளங்கியது.
தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தும் நடைபெற்று வந்துள்ளது. தனுஷ்கோடியில் இருந்து இர்வின் கோசன், ராமானுஜம் என்ற 2 கப்பல்கள் பயணிகளுக்காக தினமும் சென்று வந்தன.
மேலும் தனுஷ்கோடியில் துறைமுகம், மருத்துவமனை கட்டிடங்கள், பள்ளிக்கூடங்கள், தபால்நிலையம், ரெயில் நிலையம், ஆலயங்கள் இருந்தன.
1964-ம் ஆண்டு ஏற்பட்ட புயலுக்கு முன்பு வரை சென்னையில் இருந்து தனுஷ்கோடி வரை ரெயில் இயக்கப்பட்டது. ராமேசுவரம் வர விரும்புபவர்கள் பாம்பன் ரெயில் நிலையத்தில் இறங்கி பாம்பனில் இருந்து இயக்கப்பட்ட ரெயில் மூலமாக ராமேசுவரம் வந்து சென்றனர். அந்த ஆண்டு வரையிலும் தனுஷ்கோடி பகுதியில் தொழில் வாய்ப்புக்களும் அதிகமாக இருந்தன. ராமேசுவரம்-தனுஷ்கோடிக்கும், இலங்கை தலைமன்னாருக்கும் இடையே கப்பல் போக்குவரத்து இருந்த சமயத்தில் பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்பும் இருந்தது. இவ்வாறு சிறப்பு வாய்ந்த பகுதியாக விளங்கிய தனுஷ்கோடி நகரத்தை புயல் புரட்டி போட்டது என்று சொன்னால் மிகையாகாது.
1964-ம் ஆண்டு டிசம்பர் 22-ந் தேதி அன்று தனுஷ்கோடி பகுதியில் கனமழையுடன் பலத்த காற்று வீசியது. 23-ந்தேதி மதியத்திற்கு பிறகு மழையின் வேகம் அதிகரித்தது. அன்று மாலை சூறைகாற்றும் வீசியது. இதனால் தனுஷ்கோடி பகுதியில் வடக்கு கடலும், தென் கடலும் என இரண்டும் சிறிது சிறிதாக ஒன்றுசேர்ந்தது.
அன்று இரவு வீசிய கடும் சூறாவளி காற்று மற்றும் கடல் கொந்தளிப்பால் தனுஷ்கோடி நகரமே முழுமையாக கடல்நீரில் மூழ்கியது. தனுஷ்கோடி கடற்கரையில் இருந்த அனைத்து கட்டிடங்களும் இடிந்து தரைமட்டமாயின.
பள்ளி விடுமுறைக்காக 1000-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த ரெயில் ஒன்றும் அன்று இரவு ஏற்பட்ட கனமழை, சூறாவளி காற்றில் சிக்கி கொண்டது. தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்ட ரெயில் கடலுக்குள் மூழ்கியது. அந்த ரெயிலில் இருந்த அனைவரும் இறந்தனர். 23-ந் தேதி அன்று இரவு வீசிய புயலால் தனுஷ்கோடியில் மட்டும் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதில் பலரது உடல்கள் கிடைக்கவில்லை. 24-ந்தேதி காலை பார்த்தபோது தனுஷ்கோடி பகுதியில் உள்ள 2 கடல்களும் ஒன்றாக காட்சியளித்தது. பலபேரின் உடல்கள் கடல்நீரில் மிதந்தன. இடிபாடுகளில் சிக்கியபடி கைக்குழந்தைகள், பெரியவர்களின் உடல்களும் மிதந்தன.
இந்த காட்சிகள் வரலாற்றில் ஒரு சோக சுவடுகளாகவே இன்று வரை அறியப்படுகின்றன. தனுஷ்கோடி துறைமுகம் முழுமையாக இடிந்து சேதம் அடைந்ததால் அங்கிருந்து தலைமன்னாருக்கு சென்று வந்த கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. அதன்பின்பு ராமேசுவரத்தில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கி நடைபெற்றது. கடந்த 1983-ம் ஆண்டு வரையிலும் கப்பல் போக்குவரத்து விடப்பட்டு அது நாளடைவில் நிறுத்தப்பட்டது. பாம்பன் ரெயில் பாலமும் சீரமைக்கப்பட்டு ராமேசுவரம் வரை ரெயில் போக்குவரத்து இயக்கப்பட்டது.
அதன்பின்னர் அரசால் தடைசெய்யப்பட்ட பகுதியாக தனுஷ்கோடி அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு பொதுமக்கள் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் இன்று வரையிலும் தனுஷ்கோடி கம்பிப்பாடு, பாலம், முகுந்தராயர்சத்திரம் ஆகிய கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தொழிலை நம்பி 500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் தற்காலிகமாக குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் டிசம்பர் மாதம் வந்து விட்டாலே மீனவர்கள் ஒரு வித அச்ச உணர்வோடுதான் தனுஷ்கோடியில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். தனுஷ்கோடி நகரம் அழிந்து 61 ஆண்டுகள் ஆகிறது.
இத்தனை ஆண்டுகள் ஆகியும் தனுஷ்கோடியில் எந்த ஒரு சீரமைப்பு பணிகளும் நடைபெறாமல் அதன் சிதிலங்கள் 1964-ம் ஆண்டு புயலின் கோரத்தை நினைவுகூரும் காலச்சுவடுகளாகத்தான் இருந்து கொண்டு இருக்கின்றன.
பழைய கட்டிடங்கள் என்று சொல்வதற்கு அடையாளமாக கிறிஸ்தவ ஆலயத்தின் முகப்பு மற்றும் ரெயில் நிலைய கட்டிடம்தான் உள்ளன. பெரும்பாலான சிதிலங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்துவிட்டன.
புயலின் சேதத்துக்கு பின்பு தனுஷ்கோடியில் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதிக்காததால் மீனவர்கள் குடிசைகள் மட்டும் அங்கு இருப்பதை காணலாம்.
தனுஷ்கோடி நகரத்தை மீண்டும் புதுப்பொலிவு பெற செய்ய மத்திய-மாநில அரசுகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 2017-ம் ஆண்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை ரூ.65 கோடி நிதியில் புதிதாக சாலை அமைக்கப்பட்டு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். தனுஷ்கோடி வரை சாலை வசதி வந்த பின்னர் ராமேசுவரம் மற்றும் தனுஷ்கோடிக்கும் வரக்கூடிய சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ளது.
இந்த நகரத்தை புதுப்பொலிவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.