திருப்பரங்குன்றத்தை வைத்து பா.ஜ.க.வினர் மத அரசியல் செய்ய பார்க்கிறார்கள்- திருமாவளவன்
- தி.மு.க.வை மதவாத கட்சி என்று சொல்வது நகைப்புக்குரியதாக உள்ளது.
- ஒரு மதவாத சக்தி அதற்கு எதிராக போராடக்கூடிய ஜனநாயக சக்திகளை மதவாத சக்தி என்று சொல்லுவது வேடிக்கையாக இருக்கிறது.
குழித்துறை:
மேல்புறம் வட்டாரத்தை சேர்ந்த கிறிஸ்தவ ஐக்கியம் அமைப்பு சார்பில் கடந்த 13 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக நடத்தி வருகின்றனர். இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வந்து கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் விழா நேற்று இரவு நடை பெற்றது.
விழாவில் கலந்து கொள்ள வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தாரகை கத்பட், ரூபி மனோகரன் உள்பட தலைவர்களை மேளதாளங்கள் முழங்க பொய்க்கால் குதிரை, பொம்மையாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக அழைத்து வந்து மேடையில் அமரச்செய்தனர். பின்பு கிறிஸ்துமஸ் கேக் வெட்டப்பட்டது. பின்னர் ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜ.க.வினர் திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து மத அரசியலை பரப்ப பார்க்கிறார்கள். அதற்கு தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒருபோதும் இடம் கொடுக்காது. தமிழ்நாட்டு மக்களும் இடம் கொடுக்க மாட்டார்கள். தி.மு.க.வை மதவாத கட்சி என்று சொல்வது நகைப்புக்குரியதாக உள்ளது. ஒரு மதவாத சக்தி அதற்கு எதிராக போராடக்கூடிய ஜனநாயக சக்திகளை மதவாத சக்தி என்று சொல்லுவது வேடிக்கையாக இருக்கிறது.
இந்துக்களை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் புறக்கணிக்கிறது என்பது திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு. பெரும்பான்மை சமூகம், சிறுபான்மை சமூகம் என்ற பாகுபாடு இல்லாமல் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அனைத்து தரப்பு மக்களுக்காக தான் குரல் கொடுக்கிறோம். அதனால்தான் பெரும்பான்மை மக்களின் வாக்குகளை பெற்று தி.மு.க. தலைமையிலான கூட்டணி தொடர்ந்து தேர்தல்களில் வெற்றி பெற்று வருகிறது.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே வாக்களித்து இந்த வெற்றியை பெற்று விட முடியாது. இந்து சமூகத்தினரும் பெரும்பாலும் ஆதரிக்கக்கூடிய ஒரு அணியாகத்தான் எங்களுடைய கூட்டணி விளங்குகிறது. ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது தவறான முழக்கம் இல்லை. யாருக்கும் எதிரான முழக்கமும் இல்லை.
அது ஒரு ஜனநாயக முழக்கம், எல்லோருக்கும் அதிகாரம் வேண்டும் என்பது எந்த வகையிலும் தவறில்லை. அதற்கான கருத்தை சாமிதோப்பு அடிகளார் இந்த மேடையில் பதிவு செய்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.