தமிழ்நாடு செய்திகள்

அரசியலில் விஜய் தொட்டில் குழந்தை- ராஜேந்திர பாலாஜி விமர்சனம்

Published On 2025-08-24 09:35 IST   |   Update On 2025-08-24 12:34:00 IST
  • தமிழகத்தில் 31 ஆண்டுகள் ஆட்சி செய்த அ.தி.மு.க.வை குறைத்து மதிப்பிட்டு பேசுவது அவருடைய வீழ்ச்சியின் முதல் படிக்கட்டு.
  • ஒரு சிலர் எழுதி தருகின்ற வசனங்களை பேசி மதுரையில் நடித்துவிட்டு சென்றிருக்கிறார்.

சிவகாசி:

சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் அ.தி.மு.க. குறித்து பேசியது சிறுபிள்ளைத்தனமானது. எடப்பாடி பழனிசாமி தினசரி மாநாடு நடத்தி வருகிறார். அப்படிப்பட்ட தலைவரைப் பற்றி அடையாளம் தெரியாத தலைவரைப் போல பேசியுள்ளார். தமிழகத்தில் 31 ஆண்டுகள் ஆட்சி செய்த அ.தி.மு.க.வை குறைத்து மதிப்பிட்டு பேசுவது அவருடைய வீழ்ச்சியின் முதல் படிக்கட்டு. தேர்தலில் அவருக்கு எந்த ஒரு வெற்றியும் கிடைக்க வாய்ப்பில்லை.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை கண்டு தி.மு.க.வே கண்டு அஞ்சும்போது ஒன்றரை வயதுள்ள தொட் டில் குழந்தையாக இருக்கின்ற விஜய்யும் அவரது கட்சியும் அ.தி.மு.க. குறித்து பேசுவது கேலிக்குரியது.

வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., த.வெ.க.வுக்கு இடையேதான் போட்டி என்று அவர் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். களத்தில் நிற்க முடியாது. இவரைப் போன்று பலரை பார்த்து விட்டோம். அ.தி.மு.க.வை சிறுபிள்ளைத்தனமாக பேசியவர்கள் காணாமல் போய் உள்ளார்கள் என்பதற்கு தமிழக அரசியல் வரலாறு உள்ளது.

ஒரு சிலர் எழுதி தருகின்ற வசனங்களை பேசி மதுரையில் நடித்துவிட்டு சென்றிருக்கிறார். அவரது நாடகக் கச்சேரி இரண்டு நாட்களில் முடிந்துவிட்டது. அவரது பேச்சில் கருத்துக்களும் இல்லை, மக்களை கவரக்கூடிய எதிர்கால திட்டங்களும் இல்லை. தமிழக அரசியலில் துருவ நட்சத்திரமாக எடப்பாடி பழனிசாமி புறப்பட்டு உள்ளார். எங்களுடைய கூட்டணி கட்சிகள் அதிகமான இடங்களில் வெற்றிபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News