தமிழ்நாடு

சமூக நீதியை நிலைநாட்ட இந்தியா கூட்டணி ஆட்சியமைக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்

Published On 2024-03-27 15:16 GMT   |   Update On 2024-03-27 15:16 GMT
  • அரசின் திட்டங்களால், ஒவ்வொரு குடும்பமும் பயன் அடைந்து வருகிறது.
  • தேர்தலுக்குத் தேர்தல் பிரதமர் மோடி வாயால் வடை சுடுகிறார் என மக்களுக்குத் தெரிந்துவிட்டது.

தென்காசி, விருதுநகர் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் பரப்புரை தொடங்கியது.

இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

வீரத்தின் அடையாளமான விருதுநகருக்கும், தென்றல் வீசும் தென்காசிக்கும் வந்துள்ளேன். பிரசாரத்தில் இன்றோடு 10 தொகுதிகளை கடக்கிறேன்.

செல்லும் இடமெல்லாம் மக்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். பிரசாரம் மேற்கொள்ளும் இடங்களில் மக்களின் எழுச்சியை பார்க்கிறேன்.

அரசின் திட்டங்களால், ஒவ்வொரு குடும்பமும் பயன் அடைந்து வருகிறது.

மாநிலம் முழுவதும் 16 லட்சம் பள்ளிக் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் பசியாறுகிறார்கள்

தாய்வீட்டுச் சீர் போல எங்கள் அண்ணன் ஸ்டாலின் மாதம் ரூ.1000 தருகிறார் என 1.06 கோடி பெண்கள் இன்று கூறுகின்றனர்.

புதுமைப்பெண் திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. அவர்கள் படித்து வேலைக்குச் சென்றால் அவர்கள் தங்க தோழி விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதனால்தான் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வாக்கு கேட்டு வந்துள்ளேன்.

சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் நலனுக்கு மத்திய பாஜக அரசு என்ன செய்தது..?

சீனப்பட்டாசுகளை இந்தியாவில் இறக்குமதி செய்வதை முழுமையாக தடை செய்வோம் என கூறினார்கள். ஆனால் இன்று வரை சட்ட விரோதமாக சீனப்பட்டாசுகள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லி, மும்பையில் கோடிக்கணக்கான சீனப் பட்டாசுகள் கைப்பற்றபட்டது.

இதனால் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் ரூ.1000 கோடி அளவுக்கு சரிவை சந்தித்தது.

இப்படி தொழில் நலிவடைந்துள்ள நேரத்தில், ஆடம்பரப் பட்டியலில் பட்டாசை சேர்ந்து 28% ஜிஎஸ்டி வரி போட்ட கட்சிதான் பாஜக.

புதிய வாக்குறுதிகளைக் கொடுத்தால், நிறைவேறாத பழைய வாக்குறுதிகளை எல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என பிரதமர் மோடி தப்புக்கணக்கு போடுகிறார்.

தேர்தலுக்குத் தேர்தல் பிரதமர் மோடி வாயால் வடை சுடுகிறார் என மக்களுக்குத் தெரிந்துவிட்டது.

செய்யும் அரசு, செய்யப் போகும் அரசு தான் திராவிட மாடல் அரசு. திராவிட இயக்கம் உருவானதே சமூக உரிமைக்காக தான். நம் உரிமைகளை பறிக்கும் கூட்டம் தான் பாஜக.

சமூக நீதியை நிலைநாட்ட இந்தியா கூட்டணி ஆட்சியமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News