பாபர் மசூதி இடிப்பு தினம் - மேலப்பாளையத்தில் 1,500 கடைகள் அடைப்பு
- மேலப்பாளையம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ., த.மு.மு.க. உள்ளிட்டவைகள் சார்பில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது.
- மேலப்பாளையத்தில் ஆட்டோ, வேன்கள் உள்ளிட்டவை ஓடவில்லை.
நெல்லை:
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந் தேதி இஸ்லாமிய அமைப்பு கள் சார்பில் கருப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமிய அமைப்புகள் இன்று கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
அதன்படி நெல்லை மாநகர பகுதியான மேலப் பாளையத்தில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.
மேலப்பாளையம் சந்தை முக்கு ரவுண்டானா, அண்ணா வீதி, அம்பை சாலை, வி.எஸ்.டி சந்திப்பு, கொக்கிர குளம் சாலை, பஜார் வீதிகள் உள்பட பிரதான சாலைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள டீக்கடைகள், வணிக வளாகங்கள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சுமார் 1,500 கடைகள் வரை அடைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் முக்கிய சாலைகள், பஜார் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. பால் கடைகள், மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன. ஒரு சில இடங்களில் கேன்களில் டீ வைத்து வியாபாரிகள் விற்பனை செய்தனர்.
மேலப்பாளையம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ., த.மு.மு.க. உள்ளிட்டவைகள் சார்பில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது. பதற்றமான இடமாக கருதப்படும் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் மூலமும், ரோந்து வாகனங்கள் மூலமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அதேநேரம் மேலப்பாளையத்தில் இன்று ஆட்டோ, வேன்கள் உள்ளிட்டவை ஓடவில்லை. இருப்பினும், அரசு மற்றும் தனியார் பஸ் சேவைகள் வழக்கம் போல் இயங்கி வருவதால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.