தமிழ்நாடு செய்திகள்

கூட்டணியில் இருந்து யாரையும் விடுவதாக இல்லை- யாரும் போவதாகவும் இல்லை: காங்கிரஸ் குறித்து அமைச்சர் ரகுபதி பேட்டி

Published On 2026-02-05 10:29 IST   |   Update On 2026-02-05 10:29:00 IST
  • எடப்பாடி பழனிசாமியால் அவர் சொல்லும் ஒன்றைக் கூட நிறைவேற்ற முடியாது.
  • த.வெ.க.வின் நிலைமை தேர்தல் முடிவு வந்த பிறகு தான் தெரியும், வந்த பிறகு பார்க்கலாம்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் என்று பார்க்கிறேன். ஏனென்றால் அவர் கொடுக்கும் வாக்குறுதி அவரது ஆட்சி காலத்திலேயே நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள். நிறைவேற்ற முடியாது என்று தெரிந்து சொன்ன வாக்குறுதிகளை திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார்.

அன்று பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து என்று சொன்னவுடன் எப்படி சாத்தியம், ஆட்சியை முடக்கிவிடும் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி இன்று ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து என்று தெரிவித்துள்ளார். அன்று எல்லாவற்றையும் சாத்தியமில்லை என்று சொன்ன அவரது வாய் இன்று பலவற்றை வாக்குறுதியாக கொடுத்து வருகிறார். அவர் முழுக்க முழுக்க பொய் சொல்கிறார்.

எடப்பாடி பழனிசாமியால் அவர் சொல்லும் ஒன்றைக் கூட நிறைவேற்ற முடியாது. அவரது காலத்திலும் இதை நிறைவேற்ற முடியாது. கிருஷ்ணராயபுரத்தில் குவாரியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்பேரில் நடவடிக்கை எடுப்பார்கள்.

திருக்குறளை கூறுவார், திருக்குறளை மொழி பெயர்ப்பார், எதை வேண்டுமானாலும் மொழி பெயர்ப்பார். என்ன வேண்டுமானாலும் ஆடுவார், பாடுவார், நடிப்பார் ஆனால் மக்களிடம் விஜய்யால் ஓட்டு வாங்க முடியாது. ஐந்து ஓட்டை கூட வாங்க முடியாத சுயேட்சை வேட்பாளர் கூட, தான் வெற்றி பெறுவேன் என்று கூறுவார். தேர்தல் முடிவு வந்த பிறகு தான் தெரியும். அதேபோல்தான் த.வெ.க.வின் நிலைமை தேர்தல் முடிவு வந்த பிறகு தான் தெரியும், வந்த பிறகு பார்க்கலாம்.

காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி குறித்து பத்திரிகையாளர்தான் சுமுகமான போக்கு இல்லை என்று கூறி வருகின்றனர். நாங்கள் குழு அமைத்து விடுவோம், பேச்சுவார்த்தை நடக்கும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் உள்ள சில பேர் பேசிக்கொண்டு தான் இருப்பார்கள். குட்டி கலாட்டா செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் பேசலாம்.

ஆனால், எங்களுடைய கூட்டணியில் இருந்து நாங்கள் யாரையும் விடுவதாக இல்லை, யாரும் போவதாகவும் இல்லை. அவர்கள் எங்களோடு இருந்தால்தான் வெற்றி என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். வேறு எங்கு சென்றாலும் யாருக்கும் எந்த சீட்டும் கிடைக்காது என்று அவர்களுக்கு தெரியும். கூட்டணிக்கு புதிய கட்சியினர் வருவார்களா என்பதை தலைமை முடிவு செய்யும் என்று தெரிவித்தார் என்றார். 

Tags:    

Similar News