தமிழ்நாடு செய்திகள்

பிரவீன் சக்ரவர்த்தி விஜயை சந்தித்தது எனக்கு தெரியாது - செல்வப்பெருந்தகை

Published On 2025-12-06 15:14 IST   |   Update On 2025-12-06 15:14:00 IST
  • இந்தியா கூட்டணியை யாரும் சிதைக்கவும் முடியாது, உடைக்கவும் முடியாது.
  • அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் 5 பேர் குழு அமைத்துள்ளது.

சென்னை:

பி.ஆர். அம்பேத்கர் 69-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது படத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது அவரிடம், காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி த.வெ.க. தலைவர் விஜயை சந்தித்து உள்ளார். ஏற்கனவே காங்கிரஸ், த.வெ.க இடையே கூட்டணி வரலாம் என்று பேசப்படும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. கூட்டணி மாற்றம் தொடர் பாகவும் காங்கிரஸ் யோசிக்கிறதா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி விஜயை சந்தித்து பற்றி எனக்கு தெரியாது. இந்தியா கூட்டணியை யாரும் சிதைக்கவும் முடியாது, உடைக்கவும் முடியாது. இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் 5 பேர் குழு அமைத்துள்ளது. இந்த குழு தான் திமுகவிடம் பேசியது. அடுத்தகட்டமாக திமுக குழு அமைக்கப்பட்ட பிறகு பேச்சுவார்த்தை தொடரும். இந்த குழு தான் அதிகாரபூர்வமான காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழு.

கூட்டணி தொடர்பாக புற வாசல் வழியாக காங்கிரஸ் ஒருபோதும் பேசாது. காங்கிரஸ் நேர் வழியில் தான் செல்லும். பிரவீன் சக்கரவர்த்தி விஜயை சந்தித்ததாக, நீங்கள் தான் கூறுகிறீர்கள்.

எனக்கோ, தமிழக காங்கிரஸ் கட்சிக்கோ, எதுவும் தெரியாது. அவர் சந்தித்தது உண்மை என்று தெரியவந்தால் அல்லது அவரே தான் விஜயை சந்தித்ததாக சொன்னாலோ, மேலிடத்துக்கு தகவல் தெரிவிப்போம். அதன் பிறகு நடவடிக்கை எடுப்பது குறித்து மேலிடம் முடிவெடுக்கும்.

ஒரு வேளை அவர் வேறு விஷயமாக கூட விஜயை பார்க்க சென்று இருக்கலாம். அரசியலாக ஏன் பார்க்கிறீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News