தமிழ்நாடு செய்திகள்

மதுரையில் நாளை தொழில் முதலீட்டாளர் மாநாடு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

Published On 2025-12-06 14:31 IST   |   Update On 2025-12-06 14:31:00 IST
  • விழா முடிவடைந்த பின் பிற்பகலில் விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் சென்னை செல்கிறார்.
  • பாதுகாப்பு கருதி இன்றும், நாளையும் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை:

மதுரையில் நாளை நடைபெறும் தொழில் முதலீட்டு மாநாடு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக இன்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் பிரவீன்குமார் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வரவேற்கின்றனர்.

தொடர்ந்து இன்று இரவு அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் தங்குகிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் விடுதலை கட்சி நிறுவனர் முருகவேல்ராஜன் இல்ல திருமண விழா கருப்பாயூரணியில் உள்ள தனியார் மகாலில் நடக்கிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்துகிறார்.

பின்னர் மதுரை மேலமடை சந்திப்பில் ரூ.150.28 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பின்னர் காலை 10 மணியளவில் விரகனூர் ரிங்ரோட்டில் உள்ள வேலம்மாள் ஐடா ஸ்கெட்டா அரங்கில் தொழில் முதலீட்டாளர் மாநாடு நடைபெறுகிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். அப்போது பல்வேறு நிறுவனவங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

இதனை தொடர்ந்து மதுரை உத்தங்குடியில் அரசு சார்பில் நடைபெறும் பிரமாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதில் மாற்றுத்திறனாளிகள், சுய உதவிக்குழுவினர் உள்ளிட்ட 1 லட்சத்து 67 ஆயிரம் பேருக்கு மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

மேலும் இந்த விழாவில் முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் இருந்து மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். விழா முடிவடைந்த பின் பிற்பகலில் விமானம் மூலம் மு.க.ஸ்டாலின் சென்னை செல்கிறார்.

முதலமைச்சர் வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையம், அவர் தங்கும் இடம், விழா நடைபெறும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி இன்றும், நாளையும் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News