பெரம்பூர் தொகுதியில் த.வெ.க தலைவர் விஜய் போட்டி? - எதிர்த்து நிற்க போவது யார்!
- பெரம்பூர் தொகுதி திமுகவின் கோட்டையாகவே இருந்து வருகிறது
- பெரம்பூரில் சாதாரண தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் வசிக்கின்றனர்.
த.வெ.க தலைவர் நடிகர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனால், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி ஒரு வி.ஐ.பி. 'ஸ்டார்' தொகுதியாகவும் உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில், விஜய்யை அங்கு போட்டியிட வைப்பதற்கான காரணங்கள் என்ன? அவரை எதிர்த்து களம் காணப் போகிறவர்கள் யார் யார் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
பெரம்பூரில் கடந்த 22-ஆம் தேதி நடந்த தவெக செயல் வீரர்கள் கூட்டத்தில், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் விஜய் போட்டியிட வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் பேசிய தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ''நமது முதல் கூட்டத்தைச் சென்னை பெரம்பூரில் நடத்த முடிவு செய்ததற்குக் காரணம் உள்ளது. பெரம்பூரில் குறுகிய காலத்திலேயே 40 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதற்கான மிகப்பெரிய சான்று இது. சென்னையை திமுகவின் கோட்டை என்று சொல்வார்கள். அதனால்தான், இங்கு அதிமுகவே போட்டியிடத் தயங்கும். வடசென்னை பகுதியான பெரம்பூர் தொகுதியில் நமது தலைவர் (விஜய்) நிற்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
அரசியல் வட்டாரத்தில் இது முக்கிய விவாதமாக மாறியிருக்கிறது. ஏனெனில், "வி" சென்டிமென்ட் காரணமாக விருகம்பாக்கம், விக்கிரவாண்டி, வேளச்சேரி ஆகிய 3 தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில்தான் விஜய் களமிறங்குவார் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதற்கு மாறாகப் பெரம்பூர் தொகுதியை விஜய் தேர்ந்தெடுக்கக் காரணம், அங்கு அடித்தட்டு மக்கள் அதிகம் இருப்பதும், கிறிஸ்தவர்கள் கணிசமாக வசிப்பதும்தான் என்கின்றனர்.
பெரம்பூர் யாருக்கு?
பெரம்பூரில் சாதாரண தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் வசிக்கின்றனர். சமூக வாரியாகப் பார்க்கும்போது பிற்படுத்தப்பட்டவர்களும், பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்த சிறுபான்மையினரான மக்களும் அதிகம் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக,வன்னியர். உடையார் பெரும்பான்யாகவும் அதற்க்குஅடுத்தபடியாக தேவர் .யாதவர்.முதலியார் உள்ளிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பரவலாக இப்பகுதியில் கணிசமாக இருக்கின்றனர். இவர்கள்தான் இத்தொகுதியில் தேர்தல் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்கின்றனர்.
அரசியல் ரீதியாகப் பார்த்தால், பெரம்பூர் தொகுதி திமுகவின் கோட்டையாகவே இருந்து வருகிறது. கடந்த 2019 (இடைத்தேர்தல்) மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.டி.சேகர் வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வாக உள்ளார். அவர் 2026 தேர்தலிலும் போட்டியிட மீண்டும் வாய்ப்பு (சீட்) கேட்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
யார் இந்த ஆர்.டி.சேகர்?
வன்னியர் சமூகத்தைச் சார்ந்த இவர் 2006 முதல் 2011 வரை சென்னை மாநகராட்சியின் 2-வது வார்டு உறுப்பினராக இருந்தார். 2008-ல் பகுதிச் செயலாளராகப் பதவி வகித்தார். 2011 முதல் 2014 வரை வடசென்னை திமுக மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். 2015-ல் திமுக இளைஞரணித் துணைச் செயலாளர் பதவி இவருக்கு அளிக்கப்பட்டது. இந்நிலையில், 2019 இடைத்தேர்தல் ஆர்.டி.சேகருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 2026 சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட சீட் கேட்டு காய் நகர்த்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.
அதிமுகவின் வியூகம் என்ன..
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை, தொடக்கத்தில் பெரம்பூர் தொகுதியைக் கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுத்துவிடலாம் என்ற மனநிலையில்தான் இருந்தாராம். ஆனால், தற்போது விஜய் அல்லது ஆதவ் அர்ஜுனா பெரம்பூரைக் குறிவைத்துள்ளதால், 'நமக்கு எதற்கு வம்பு' என எண்ணிக் கூட்டணிக் கட்சியினர் பின்வாங்குவதாக அரசியல் களத்தில் பேசப்படுகிறது.
எனவே, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்காமல் அதிமுகவே நேரடியாக இத்தொகுதியில் போட்டியிடலாம் என எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருவதாகவும், தொகுதி மக்களால் நன்கு அறியப்பட்ட ஒரு கிறிஸ்தவ முகத்தைக் களமிறக்க அவர் யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அப்படி பார்க்கும் போது கட்சியின் மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் உடையார் சமூகத்தைச் சேர்ந்த எம்.ஏ.சேவியருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த எம்.ஏ.சேவியர்?
பெரம்பூர் தொகுதியில் சுமார் 25 ஆண்டுகளாகப் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களிடையே நல்ல அறிமுகம் மற்றும் செல்வாக்கைப் பெற்றவராக இருக்கிறார், கட்சி நிர்வாகிகள் மத்தியில் நல்ல பெயர் உண்டு. எந்தவித கோஷ்டி பூசலிலும் சிக்காமல் அனைவரிடமும் நன்கு பழகக் கூடியவராக திகழ்கிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் ஏழை எளிய மாணவர்கள் பயன் பெரும் வகையில் இலவச கம்ப்யூட்டர் சென்டர் நடத்தியதால் மக்களிடமும் நன்கு அறிமுகம் உள்ளது. இவர் சார்ந்த தொழில் டிஜிட்டல் பேனர் கடை (அன்னை டிஜிட்டல்) இருப்பதால் அனைத்து கட்சி தோழர்களும் நட்புடன் பழகி வருகின்றனர்.
இவர் ஏற்கனவே நடிகர் சரத்குமார் நடத்தி வந்த சமத்துவ மக்கள் கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்தவர்.. நடிகர் சரத்குமாரிடம் ஆரம்பகால முதல் அவருடைய ரசிகர் மன்றத்திலிருந்து இருந்து அக்கட்சியில். பணியாற்றியவர். 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சரத்குமார் நடிகர் கமல்ஹாசன் கட்சியுடன் கூட்டணி அமைத்ததால் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அஇஅதிமுகவில் பெரும்படையுடன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அதிமுகவிற்காகக் களத்தில் நின்று மக்கள் பணியாற்றி வருவதுடன், ஆளும் திமுக அரசுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களையும் பங்கெடுத்துள்ளார். கூடுதலாக, ரோமன் கத்தோலிக்கக் கிறிஸ்தவரான இவருக்கு, தொகுதியில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த மக்களிடையேயும் நல்ல பெயர் உள்ளது. மதம் மற்றும் அரசியல் கட்சிச் சார்பைக் கடந்து தொகுதியைச் சேர்ந்த பல தரப்பினரின் ஆதரவும் இவருக்கு இருக்கிறது. இவர் லாட்டரி சீட்டு அதிபர் கோவை மார்ட்டினுக்கு உறவினர் என்று கூறப்படுகிறது.
நாம் தமிழர் கட்சி
இதனிடையே, பெரம்பூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக வெற்றித்தமிழன் களம் காண்கிறார். பெரம்பூர் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சீமான் கட்சி ஆரம்பித்த காலம் தொட்டே அவருடன் இணைந்து பயணித்து வருகிறார்.
தற்போதைய சூழலில், நாம் தமிழர் கட்சியை தவிர்த்து இதர கட்சிகளில் வேட்பாளர்கள் யார் என்பது இன்னும் இறுதி செய்யப்படாதது குறிப்பிடத்தக்கது.