சனாதனத்தை அழிக்க துடிக்கும் உதயநிதியின் கனவு பலிக்காது - நயினார் நாகேந்திரன்
- கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக பலி போடுகிறார்கள்.
- எங்கள் கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும். வலிமையாக மாறும்.
சென்னை:
அம்பேத்கர் நினைவு நாளையொட்டி துறைமுகம் அருகே உள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவர் கூறியதாவது:-
திருப்பரங்குன்றம் விவகாரத்தை அயோத்தி போல் ஆக்கத் துடிப்பதாக கூறுகிறார்கள். அயோத்தி என்ன இந்தியாவில்தானே இருக்கிறது. இங்கிலாந்திலா இருக்கிறது. அயோத்தி மாதிரி இருந்தாலும் சரி என்னவாக இருந்தாலும் சரி, ராமர் போல் ஆட்சி வர வேண்டும்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீபத் தூணுக்கு பக்கத்தில் தர்கா இருப்பது ஊருக்கே தெரியும். அங்கு யாரும் செல்ல அனுமதி இல்லை. தீபம் ஏற்றுவதற்கு மட்டும்தான் கோர்ட்டு அனுமதி அளித்தது. அதற்கும் தர்கா தரப்பில் இருந்து யாரும், எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
அப்படி இருக்கும்போது மதக்கலவரம் எப்படி வரும்? துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், கனிமொழி எம்.பி.க்கும் என்ன பாதகம் ஏற்படுகிறது. சனாதன தர்மத்தை அளிப்பேன் என்று உதயநிதி ஸ்டாலின் சபதம் போட்டார். அதற்கான ஆரம்பகட்ட வேலையாகத்தான் இதை பார்க்கிறோம்.
அவரது கனவு ஒருபோதும் பலிக்காது. இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சனாதன தர்மத்தை யாராலும் அழிக்க முடியாது. கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக பலி போடுகிறார்கள். ஆனால் இந்த திட்டம் பற்றி 2021-ம் ஆண்டு முதல் என்றாவது பட்ஜெட்டில் அறிவித்தது உண்டா?
மத்திய அரசு அறிக்கை கேட்ட பிறகுதான், அறிக்கை தயார் செய்தார்கள். அதுவும் முறையாக இல்லை. ரெயில் பயணத்திற்கும், பஸ் பயணத்திற்கும் 2 நிமிடம் தான் வித்தியாசம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அப்படியானால் மெட்ரோ ரெயில் வேண்டாம் என்பதாகத்தானே அர்த்தம்.
ஒரு நிலையம் கட்ட குறைந்தது 20 மீட்டர் இடம் வேண்டும். ஆனால் 10 மீட்டர் அளவுக்கு 3 நிலையங்கள் கட்டுவதற்கு இடம் இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார்கள். இந்த குறைகளைத்தான் நிவர்த்தி செய்ய மத்திய அரசு கூறியுள்ளது. இதுதான் தி.மு.க. செய்யும் வளர்ச்சி அரசியலா?
தூத்துக்குடி மற்றும் மதுரை விமான நிலையங்கள் சர்வதேச விமான நிலையங்களாக மாற்றப்பட்டு உள்ளது. இது வளர்ச்சியை கொடுக்காதா? நாங்கள் வளர்ச்சிக்கான அரசியல் செய்கிறோம். தி.மு.க. என்ன அரசியல் செய்கிறது என்பதை மக்கள் உணருவார்கள். தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள் இருக்கிறது.
எங்கள் கூட்டணிக்கு இன்னும் பல கட்சிகள் வரும். வலிமையாக மாறும். நிச்சயமாக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். தி.மு.க. கூட்டணிக்குள்தான் குழப்பம் நிலவுகிறது. காங்கிரசுக்கு அவர்கள் எத்தனை தொகுதிகள் கொடுப்பார்கள். அமைச்சரவையில் இடம் கொடுப்பார்களா? விடுதலை சிறுத்தைகளுக்கு எத்தனை தொகுதிகள் கொடுப்பார்கள்? பேச்சுவார்த்தை தொடங்கட்டும், அப்போது இந்த குழப்பம் வெளிவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.