தமிழ்நாடு

தமிழ்நாடு என்பதை கருணாநிதி நாடு என மாற்ற முயற்சி

Published On 2024-02-02 05:22 GMT   |   Update On 2024-02-02 07:03 GMT

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதிய பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பல்லாவரம் தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன், மருமகள் ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவி மீது வன்கொடுமை செய்து கொடூர தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதற்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே. அசோக்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர அ.தி.மு.க. செயலாளர் கேசவன் வரவேற்றார். ஊத்தங்கரை தமிழ்செல்வம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தை கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசியதாவது:-


     கடந்த 3 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சி செயல் இழந்த அரசாக உள்ளது. சட்டம்-ஒழுங்கு முடங்கி சீர் கெட்டுள்ளது. தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் ஆகியோர் மாணவியை வேலைக்கு அமர்த்தி வன்கொடுமை செய்துள்ளனர். போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. அ.தி.மு.க. பொதுச் செயலாளரின் கண்டனத்திற்கு பிறகே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலும் தொடர்ந்து கொலைகள் நடந்து வருகிறது. சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்கு ஆட்சியாளர்களும், கடமை தவறிய அதிகாரிகளும் காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், முனிவெங்கடப்பன், பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம்.சதீஷ்குமார், ஒன்றிய குழு தலைவர் அம்சாராஜன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் தென்னரசு, முன்னாள் நகராட்சி தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து, ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கன்னியப்பன், சைலேஷ் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து எம்.ஜி.ஆரை அவதூறாக பேசியதாக தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவின் உருவ பொம்மையை அ.தி.மு.க.வினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-


    தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள், தங்களுக்குள் யார் பெரியவர்கள் என மல்லுக்கட்டி நிற்கின்றனர். இதனால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க., ஆட்சியில் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தோம். மாநில அரசு நிதியில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை கொண்டு வந்தோம். அதை கூட தி.மு.க., அரசால் செயல்படுத்த முடியவில்லை.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது தந்தை கருணாநிதி பெயரை, சிலைகளை எங்கெல்லாம் வைக்கமுடியுமோ அதை செய்கிறார். மாடு பிடி அரங்கில், ஏறுதழுவும் சிலையில் கூட தனது முகம் போல வைத்துள்ளார். கோயம்பேடு பஸ் நிலையத்தை மாற்ற பார்க்கிறார். அரசியலில் தங்களை எதிர்த்தவர்கள் பெயர் எங்கும் இருக்க கூடாது என நினைக்கிறார். தமிழ்நாடு என்பதை கருணாநிதி நாடு என மாற்ற முயற்சிக்கிறார். வருகிற 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று வரும்போது, கருணாநிதி என்ற பெயரே இல்லாமல் செய்து விடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Tags:    

    Similar News