தமிழ்நாடு

காங்கிரசுக்கு தி.மு.க. 'செக்' வைக்கும்: கேட்ட தொகுதிகளை கொடுக்காது- குஷ்பு

Published On 2023-12-31 06:32 GMT   |   Update On 2023-12-31 06:32 GMT
  • புத்தாண்டு நிச்சயம் பல புதுமைகளை தாங்கி வரும். 3-வது முறையாக பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய வெற்றியை மக்கள் வழங்குவார்கள்.
  • மாற்றத்தை மோடியால் மட்டுமே தர முடியும். இந்தியா கூட்டணி ஏமாற்றத்தையே பெறும்.

சென்னை:

பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

பிறக்கும் புத்தாண்டில் அனைவரும் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ இறைவன் அருள் புரியட்டும்.

புத்தாண்டு நிச்சயம் பல புதுமைகளை தாங்கி வரும். 3-வது முறையாக பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய வெற்றியை மக்கள் வழங்குவார்கள். அவரது தலைமையில் நாடு மேலும் புதிய உச்சத்தை நோக்கி செல்லும்.

இந்தியா கூட்டணி இந்த ஆண்டுடன் முடிவுக்கு வரும். மம்தா பானர்ஜி காங்கிரசின் செல்வாக்கு தெரிந்துவிட்டது. எங்களால் மட்டும்தான் பா.ஜனதாவை எதிர்க்க முடியும் என்று பகிரங்கமாக கூறி உள்ளார்.

சமாஜ்வாடி கட்சியும் காங்கிரசை தூக்கி சுமக்க தயாரில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் தி.மு.க.வை நம்பி இருக்கிறது. எப்படியாவது கடந்த தேர்தலில் பெற்றதை விட கூடுதல் 'சீட்' கேட்போம். கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள்.

வட மாநில தேர்தல் முடிவுகளை காரணம் காட்டி தி.மு.க.வும் 'செக்' வைக்கும். இவர்கள் கை கட்டி நின்றாலும் சரி. கையேந்தி கேட்டாலும் சரி தி.மு.க. அதிக தொகுதிகள் கொடுக்கப்போவதில்லை.

மின்சார கட்டணம் ஒவ்வொரு குடும்பத்தையும் 'ஷாக்' அடித்தது போல் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அவர்கள் மட்டும் சம்பாதிக்கிறார்கள். மக்கள் அன்றாட வாழ்க்கைக்கே திண்டாடுகிறார்கள்.

இன்னும் தண்ணீரில் இருந்து தென் மாவட்ட மக்கள் மீளவில்லை. வரட்டும் தேர்தல் என்று காத்திருக்கிருக்கிறார்கள்.

நடக்கப் போவது பாராளுமன்ற தேர்தல், நாட்டை பாதுகாக்க வேண்டிய தேர்தல். யாரால் நாட்டை காக்க முடியும் என்பதை மக்கள் அறிவார்கள்.

எங்களை பொறுத்தவரை பிரதமர் மோடி முகம் மட்டும்தான் இந்தியா கூட்டணியில் யார் முகத்தை காட்டி ஓட்டு கேட்பார்கள்? உலக அளவில் 78 சதவீத ஆதரவை பெற்று உலக தலைவர்களில் முதலிடத்தில் இருக்கும் மோடியா? நாட்டில் நிராகரிக்கப்பட்ட ராகுலா? என்பதை மக்கள் சீர்தூக்கி பார்த்தே வாக்களிப்பார்கள். மாற்றத்தை மோடியால் மட்டுமே தர முடியும். இந்தியா கூட்டணி ஏமாற்றத்தையே பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News