பஹல்காம் பயங்கரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து வந்ததாக ஏன் நினைக்கிறீர்கள்? - ப. சிதம்பரம் கேள்வி
- நமக்கு தெரிந்தவரை, அவர்கள் இந்தியாவில் உருவான பயங்கரவாதிகளாக இருக்கலாம்.
- போர் நிறுத்தத்தை அறிவித்தது இந்திய அரசு அல்ல. டொனால்ட் டிரம்ப் தான்.
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் இன்று விவாதம் தொடக்கம். பகல் 12 மணிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவையில் பேசவுள்ளார்.
16 மணிநேரம் நடைபெறவுள்ள விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர்.
இந்நிலையில், "பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து வந்ததாக நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்த ப. சிதம்பரம், "பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு NIA எடுத்த நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வெளியிட பாஜக அரசாங்கம் விரும்பவில்லை. அவர்கள் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டார்களா? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? அதாவது, நமக்கு தெரிந்தவரை, அவர்கள் இந்தியாவில் உருவான பயங்கரவாதிகளாக இருக்கலாம். அவர்கள் பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் என்று நீங்கள் ஏன் கருதுகிறீர்கள்? அதற்கு எந்த ஆதாரமும் இல்லை
ஆபரேஷன் சிந்தூரின் போது ஏற்பட்ட இழப்புகளை மறைக்கிறார்கள். ஒரு போரில், இரு தரப்பிலும் இழப்புகள் ஏற்படுவது இயல்பு தான். இந்தியா இழப்புகளைச் சந்தித்திருக்கும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அதை வெளிப்படையாகச் சொல்லுங்கள்
பிரதமர் ஏன் ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேசவில்லை? நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதம் நடத்துவதற்கு ஏன் தயங்குகிறீர்கள்
போர் நிறுத்தம் எப்படி வந்தது என்பது குறித்து கேட்கப்படும் கேள்விகள் பாஜக அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறதா? ஏனென்றால், நேர்மையாகச் சொல்லப் போனால், போர் நிறுத்தத்தை அறிவித்தது இந்திய அரசு அல்ல. டொனால்ட் டிரம்ப் தான்" என்று தெரிவித்தார்.
ப. சிதம்பரத்தின் இக்கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.