இந்தியா

வயநாட்டில் உறவினர்-பக்கத்து வீட்டுக்காரரால் பாலியல் வன்கொடுமை: பிளஸ்-1 மாணவி தற்கொலை

Published On 2026-02-19 15:43 IST   |   Update On 2026-02-19 15:43:00 IST
  • மாணவியின் உறவினர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர்.
  • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள கல்பெட்டா பகுதியை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்தநிலையில் மாணவி மனதளவில் பாதிக்கப்பட்டவரை போன்று காணப்பட்டார்.

இதையடுத்து மாணவியை அவரது தந்தை, மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அவருக்கு மனநல பாதிப்பு தொடர்பான ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சிகிச்சை அளித்த டாக்டர், பள்ளி மாணவிக்கு கவுன்சிலிங் கொடுத்தார்.

அப்போது தன்னை இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய விவரத்தை டாக்டர் மற்றும் தனது தந்தையிடம் மாணவி தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை, தனது மகள் படித்த பள்ளி ஆலோசகருக்கு தகவல் கொடுத்தார்.

அவர் அதுகுறித்து போலீசாரிடம் தெரிவித்தார். அதன்பேரில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியிடம் போலீசார் விவரங்களை கேட்டனர். அப்போது அவர் தன்னை உறவினர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் ஆகிய இருவரும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி வந்ததாக தெரிவித்தார்.

அதில் உறவினர் ஒரு முறையும், பக்கத்து வீட்டுக்காரர் பல முறையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியிருக்கிறார். பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் 2024-2025 காலக்கட்டத்தில் நடந்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து மாணவியின் உறவினர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரை கைது செய்தனர். போக்சோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்ட இருவரிடமும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். பின்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பள்ளி மாணவி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து மாணவியின் தந்தை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

உறவினர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மாணவி, கடந்த இரு வாரமாக பள்ளிக்கு செல்லவில்லை. மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால், அவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். கடும் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில் தூக்கில் பிணமாக தொங்கியதால், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

அதே நேரத்தில் மாணவியின் சாவுக்கு வேறு எதுவும் காரணமாக இருக்கலாமா? என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே மாணவி மரணம் தொடர்பாக "இயற்கைக்கு மாறான மரணம்" என்று போலீசார் வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உறவினர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பள்ளி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News