விவாகரத்து பெற்ற பிறகும் தீராத கோபம்: 2-வது திருமணம் செய்த ஐ.டி.பெண் ஊழியர் கொடூர கொலை
- மகேஷ் கனடாவில் இருந்து வந்து தாயாரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார்.
- மரம் அறுக்கும் ரம்பம், பாறை வெட்டும் எந்திரம் மூலம் கொலை செய்வது எப்படி என்பதை தெரிந்து கொண்டார்.
தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் மந்தாணியை சேர்ந்தவர் தேவரகொண்டா மகேஷ் (வயது 32). இவர் கடந்த 2022-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டம், திலக்வாட்டை சேர்ந்த சுனிதா (30) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு மகேஷ் மற்றும் சுனிதா ஆகியோர் கனடா சென்றனர். கனடாவிற்கு சென்ற பிறகு கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் 8 மாதத்திற்கு பிறகு சுனிதா இந்தியா திரும்பினார். கணவர் தன்னை கொடுமைப்படுத்தியதாக மகாராஷ்டிரா மாநிலம் பிரம்மபுரி போலீசில் புகார் செய்தார். போலீசார் மகேஷுக்கு அவுட்லுக் நோட்டீஸ் அனுப்பினர்.
கடந்த 2024-ம் ஆண்டு மகேஷ், சுனிதா ஜோடி விவாகரத்து பெற்றனர். விவாகரத்துக்கு பிறகு சுனிதா ஐதராபாத் வந்து ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
அப்போது வனஸ்தலிபுரம் கிரீன் சிட்டி காலனியை சேர்ந்த ஸ்ரீநாத் (32 ) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் கடந்த 2025-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சுனிதா தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். முதல் திருமணம் குறித்து சுனிதா தனது கணவரிடம் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் மகேஷின் தாயார் இறந்து விட்டதால் மகேஷ் கனடாவில் இருந்து வந்து தாயாரின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார். மீண்டும் கனடா செல்ல முயன்ற போது சுனிதா கொடுத்த புகாரின் பேரில் மகேஷ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்ததால் அவரது விசா முடக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதனால் சுனிதா மீது மகேஷுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. சுனிதாவை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஐதராபாத் வந்து விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.
சுனிதாவின் இருப்பிடம் குறித்து சமூக வலைத்தளத்தில் தேடிய போது பேஸ்புக்கில் அவரது முகவரி இருந்தது. சுனிதாவை கொலை செய்வது எப்படி என்பது குறித்து யூடியூபில் படங்களை பார்த்தார்.
மரம் அறுக்கும் ரம்பம், பாறை வெட்டும் எந்திரம் மூலம் கொலை செய்வது எப்படி என்பதை தெரிந்து கொண்டார். சில நாட்கள் கொலை செய்வது குறித்து ஒத்திகை பார்த்தார்.
பின்னர் கடைக்கு சென்று பொருட்களை வாங்கினார். கடந்த 5 நாட்களாக சுனிதாவின் வீட்டை நோட்டமிட்டு வீட்டில் அவரது கணவர் எப்போது வெளியே செல்வார், எப்போது சுனிதா தனியாக இருப்பார் என்பதை அறிந்து கொண்டார்.
நேற்று மதியம் கொலை செய்வதற்கான ஆயுதங்களை எடுத்துக்கொண்டு ஒரு கேனில் பெட்ரோல் பிடித்துக் கொண்டு 4-வது மாடியில் உள்ள சுனிதா வீட்டிற்கு சென்றார்.
கதவை தட்டியபோது சுனிதா கதவை திறந்தார். உடனடியாக கதவை உள் பக்கமாக பூட்டிய மகேஷ் தன்னிடம் இருந்த சுத்தியலால் சுனிதாவின் தலையில் பலமாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சுனிதா மயங்கி கீழே விழுந்தார்.
பின்னர் தன்னிடம் இருந்த ரம்பத்தை எடுத்து கழுத்தை அறுத்தார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.
சுனிதாவின் அலறல் சத்தம் கேட்டு அவரது மாமியார் வந்து பார்த்த போது சுனிதா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அடுக்குமாடி குடியிருப்பாளர்களை அழைத்தார்.
குடியிருப்பாளர்கள் வந்த போது மகேஷ் ஓடி சென்று கழிவறையில் கதவை உள்புறமாக பூட்டி கொண்டார். பலமுறை கதவை தட்டியும் திறக்காததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மகேசை கழிவறையில் இருந்து வெளியே வர கூறினர். ஆனால் மகேஷ் தன்னை பிடிக்க வந்தால் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொள்வேன் என மிரட்டினார்.
போலீசார் கதவை உடைக்க முயல்வதை அறிந்த மகேஷ் தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டார். போலீசார் அதிரடியாக கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது மகேஷ் லைட்டரால் உடலில் தீ வைக்க முயன்றார். போலீசார் மகேஷை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் ஐதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.