இந்தியா

கருப்புப்பெட்டி அவ்வளவு எளிதாக அழியாதே?.. அஜித் பவார் மரணம் குறித்து மகன் சந்தேகம்

Published On 2026-02-19 20:30 IST   |   Update On 2026-02-19 20:30:00 IST
  • கருப்பு பெட்டியில் பதிவாகி உள்ள தகவல்களை வைத்தே கண்டறிய முடியும்.
  • முறைகேடுகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்.

மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த ஜனவரி 28-ம் தேதி நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவருடன் மேலும் நால்வர் உயிரிழந்தனர்.

அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளாட்சி தேர்தலில் பாஜவுக்கு எதிராக இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். மேலும் அவர் உடைந்த தேசியவாத காங்கிரசை ஒன்றிணைக்க இருந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

உள்ளாட்சிகளில் பாஜக ஊழல் செய்வதாக அஜித் பவார் பிரசாரங்களில் விமர்சித்து வந்தார். எனவே அவரின் மரணம் விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட ஒன்றா என எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பி வந்தன.

இதற்கிடையே விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து அண்மையில் மீட்கப்பட்ட கருப்பு பெட்டி தீயில் கருகி சேதமடைந்திருந்தது. கருப்பு பெட்டியில் பதிவாகி உள்ள தகவல்களை வைத்தே விமான விபத்து எப்படி நடந்தது என்பதை கண்டறிய முடியும். 

இந்நிலையில் விபத்து தொடர்பாக அவரது இளைய மகன் ஜய் பவார் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்ட சமூக வலைதள பதவில், "விமானத்தின் பிளாக் பாக்ஸ் அவ்வளவு எளிதில் அழிந்துவிடக் கூடியது அல்ல. மகாராஷ்டிர மக்களுக்கு இந்த விபத்தின் முழுமையான மற்றும் வெளிப்படையான உண்மையை அறியும் உரிமை உண்டு.

விபத்துக்குள்ளான லியர்ஜெட் விமானத்தை இயக்கிய VSR வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்திற்கு உடனடியாகத் தடை விதித்து அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் முறைகேடுகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஜெய் பவார் தாயாரும் தற்போதைய துணை முதல்வருமான சுநேத்ரா பவார் மற்றும் சகோதரர் பார்த் பவார் ஆகியோர் முதல்வர் பட்நாவிஸை சந்தித்து இந்த விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி இருந்தனர். 

Tags:    

Similar News