இந்தியா

குஜராத் சட்டசபை தேர்தல்: பிரதமர் மோடி-கெஜ்ரிவால் இன்று போட்டி பிரசாரம்

Published On 2022-11-27 05:48 GMT   |   Update On 2022-11-27 05:48 GMT
  • முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் குஜராத்தில் தலைவர்கள் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
  • பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே 3 முறை தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்று பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார்.

அகமதாபாத்:

182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 8-ந்தேதி நடைபெறுகிறது.

முதல் கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கும், 2-வது கட்ட தேர்தலில் 93 இடங்களுக்கும் ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கிறது.

குஜராத் மாநிலத்தில் பா.ஜனதா நீண்ட காலமாக ஆட்சி செய்து வருகிறது. 1998-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 6 சட்டசபை தேர்தல்களில் அந்த கட்சி வெற்றி பெற்றுள்ளது. தொடர்ந்து 24 ஆண்டுகளாக பா.ஜனதா அங்கு ஆட்சி நடத்தி வருகிறது. அந்த கட்சி தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது.

காங்கிரஸ் கட்சி பா.ஜனதாவிடம் இருந்து இந்த முறையாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் உள்ளது. குஜராத்தை பொறுத்தவரை பா.ஜனதாவும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் எப்போதும் நேரடி போட்டி இருக்கும்.

தற்போது முதல் முறையாக அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் களம் இறங்குகிறது. டெல்லியை தொடர்ந்து பஞ்சாப்பிலும் ஆட்சியை பிடித்ததால் குஜராத் தேர்தலிலும் ஆம் ஆத்மி குதித்துள்ளது. இதனால் மும்முனை போட்டி நிலவுகிறது.

ஆளும் பா.ஜனதா அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 179 இடங்களிலும், அதன் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் 2 தொகுதியிலும் நிற்கிறது. ஆம் ஆத்மி கட்சி 181 தொகுதிகளில் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தி உள்ளது. இது தவிர சிறிய கட்சிகளும் போட்டியிடுகின்றன.

182 தொகுதியில் மொத்தம் 1621 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 139 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவார்கள். 3 பிரதான கட்சிகளும் சேர்ந்து மொத்தம் 38 பெண் வேட்பாளர்களை தான் நிறுத்தி உள்ளது. பா.ஜனதாவில் 18 பேருக்கும், காங்கிரசில் 12 பேருக்கும் டிக்கெட் கொடுக்கப்பட்டு உள்ளது. இது கடந்த முறையை விட கூடுதலாகும்.

குஜராத் சட்டசபை தேர்தலில் 4.90 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட தகுதியானவர்கள். இதில் 2.53 கோடி பேர் ஆண் வாக்காளர்கள். பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2.37 கோடியாகும். தேர்தலுக்காக 51,782 வாக்கு சாவடிகள் அமைக்கப்படுகிறது.

முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் குஜராத்தில் தலைவர்கள் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே 3 முறை தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு சென்று பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார். அமித்ஷா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களும் அங்கு ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர். ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் பா.ஜனதா உள்ளது.

நடை பயணத்தில் ஈடுபட்டுள்ள ராகுல்காந்தி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார். இதேபோல ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும், கெஜ்ரிவாலும் குஜராத்தில் இன்று போட்டி பிரசாரம் செய்கிறார்கள். வாக்காளர்களை கவரும் வகையில் அவர்கள் ஓட்டு வேட்டையில் ஈடுபடுகிறார்கள். வைர நகரமான சூரத்தில் அவர்கள் ஆதரவு திரட்டுகிறார்கள்.

மோடி 3 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். சூரத்தில் உள்ள மோட்டா வரச்சா, பரூச் மாவட்டம் நேட்ரங், கேடா மாவட்டம் மெகமதாபாத் ஆகிய இடங்களில் மோடி பா.ஜனதா வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.

அவர் 25 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ செல்கிறார். விமான நிலையத்தில் இருந்து பொதுக்கூட்டம் நடைபெறும் மோட்டா வராச்சா வரும் வரை இந்த ரோடு ஷோ நடக்கிறது. இதை சூரத் பகுதி பா.ஜனதா தலைவர் ஜெகதீஷ் படேல் தெரிவித்தார். சூரத் பகுதியில் இருந்து 12 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு செல்கிறார்கள்.

கெஜ்ரிவால் 2 நாள் பயணமாக சூரத் செல்கிறார். இன்று அவர் ஜவுளி தொழிலில் ஈடுபட்டுள்ள தலைவர்கள், கைவினை கலைஞர்களுடன் உரையாடுகிறார். சூரத்தில் உள்ள டவுன்ஹால் பகுதியில் இந்த உரையாடல் நடக்கிறது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த பகுதி பா.ஜனதாவின் கோட்டையாகும்.

மேலும் கெஜ்ரிவால் அங்குள்ள கதர்காம் பகுதியில் ரோடு ஷோவிலும் ஈடுபடுகிறார். ஒரே நேரத்தில் மோடியும், கெஜ்ரிவாலும் குஜராத்தில் இன்று பிரசாரம் செய்வதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News