இந்தியா

எங்களுடைய ராமர் சித்தராமையா... அவர் ஏன் அயோத்தி செல்ல வேண்டும்? கர்நாடக மந்திரி பேச்சால் சர்ச்சை

Published On 2024-01-02 05:38 GMT   |   Update On 2024-01-02 07:47 GMT
  • வருகிற 22-ந்தேதி அயோத்தில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.
  • அயோத்தி ராமர் கோவிலை வைத்து பா.ஜனதா அரசியல் ஆதாயம் தேடுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், சாதனைப் படைத்தவர்கள், துறவிகள், முக்கிய பிரபலங்கள் என அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால், பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களுக்கு அழைப்பு வரவில்லை என்கிறார்கள். சிலர் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநில முதல்வரான சித்தராமையாவும் முறைப்படியாக அழைப்பிதழ் கிடைக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார். மேலும், அவர் பங்கேற்பாரா? என்றும் தெரியவில்லை.

இந்த நிலையில்தான் கர்நாடக மந்திரி ஆஞ்சநேயா, சித்தராமையா எங்களுடைய ராமர் எனக் கூறியுள்ளார். இந்த கருத்து தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பாக கர்நாடக மாநில மந்திரி ஆஞ்சநேயா கூறுகையில் "அவர் (சித்தராமையா) எங்களுடைய ராமர். ஏன் அவர் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்த கொள்ள அயோத்தி செல்ல வேண்டும். அவரது சொந்த கிராமத்தில் உள்ள ராமர் கோவிலில் வழிபாடு செய்வார்.

அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு அவர் ஏன் செல்ல வேண்டும். பா.ஜனதாவின் ராமர்தான் அங்கே நிறுவப்படுகிறது. அவர்கள் பா.ஜனதாவினருக்கு மட்டும் அழைப்பிதழ் அனுப்பியுள்ளனர். அதேபோல் பஜனை பாடுபவர்களுக்கும் அனுப்பியுள்ளனர். ஆகவே, அவர்கள் அதை செய்யட்டும். எங்களுடைய ராமர் எல்லா இடத்திலும் இருக்கிறார். அவர் எங்களுடைய இதயத்தில் இருக்கிறார்."

இவ்வாறு கர்நாடக மாநில மந்திரி ஆஞ்சநேயா தெரிவித்துள்ளார்.

மேலும், மதம் மற்றும் சமூக அடிப்படையில் பா.ஜனதா மக்களை பிரிக்கிறது. நாடு எதிர்கொண்டு வரும் சமூக பிரச்சினைகளுக்கு பா.ஜனதா முக்கியத்துவம் கொடுப்பதில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

இதுபோன்ற அறிவு இல்லாதவர்கள், இந்து எதிர்ப்பு தலைவர்களை நாம் மந்திரிகளாக பெற்றுள்ளது நம்முடைய துரதிருஷ்டம் என பா.ஜனதா எம்.எல்.ஏ. பசனகவுடா பாட்டீல் யாத்னால் பதில் கொடுத்துள்ளார்.

Tags:    

Similar News