பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் மோடியின் பெயர்.. மத்திய அரசு விளக்கம்
- அதிபர் டொனால்டு டிரம்ப், தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பில் கேட்ஸ், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு உள்ளிட்டோரின் பெயர்கள் உள்ளன.
- பிரதமர் மோடியின் 2017 ஜூலை மாத இஸ்ரேல் பயணம் உண்மை.
அமெரிக்காவில் சிறுமிகளை கடத்தி பணக்காரர்களுக்கு விருந்தாக்கும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 2019 இல் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டவர் தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன்.
இவர் தொடர்புடைய கோப்புகளில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த சர்ச்சை கோப்புகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் அமெரிக்க நீதித்துறை நேற்று லட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்ட புதிய ஆவணங்கள், ஆயிரக்கணக்கான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டது.
அதில் அதிபர் டொனால்டு டிரம்ப், தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பில் கேட்ஸ், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு, நியூ யார்க் மேயர் மம்தானியின் தாயும் பிரபல எழுத்தாளருமான மீரா நாயர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
ரஷிய பெண்களுடன் உறவு வைத்து பால்வினை நோயால் பில் கேட்ஸ் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார் என புதிய கோப்புகளில் கூறப்பட்டுள்ளது. பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு
அதேநேரம் தற்போது வெளியிடப்பட்டுள்ள எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் மோடியின் பெயர் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோப்பில் இடம்பெற்றுள்ள எப்ஸ்டீனின் மின்னஞ்சல் ஒன்றில், பிரதமர் மோடியின் பெயர் மற்றும் அவர் 2017 இல் மேற்கொண்ட இஸ்ரேல் பயணம் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் "அந்த மின்னஞ்சலில் பிரதமர் மோடியின் 2017 ஜூலை மாத இஸ்ரேல் பயணம் குறித்த உண்மைத் தகவலைத் தவிர, மற்ற அனைத்தும் ஒரு குற்றவாளியின் தரம் குறைந்த கற்பனைகளே.
இதற்கு எள்ளளவும் முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை; இதை மிகுந்த அருவருப்புடன் நிராகரிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.