இந்தியா

3 பேரை திருமணம் செய்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்த 'கல்யாண ராணி'

Published On 2026-01-31 08:48 IST   |   Update On 2026-01-31 08:48:00 IST
  • தொட்டபள்ளாப்புரா போலீசில் சுதாராணி மீது அனந்தமூர்த்தி புகார் அளித்துள்ளார்.
  • முதல் கணவர் வீரேகவுடா சுதாராணி மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவை சேர்ந்தவர் அனந்தமூர்த்தி. இவர், ஆன்லைன் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார். அனந்தமூர்த்திக்கும், தொட்டபள்ளாப்புரா அருகே அனபே கிராமத்தை சேர்ந்த சுதாராணிக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது. தனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதாகவும், கணவர் இறந்து விட்டதாகவும் அனந்தமூர்த்தியிடம் சுதாராணி கூறியிருந்தார்.

இதையடுத்து, தனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், அவர்களை சமாதானப்படுத்தி சுதாராணியை ஒரு கோவிலில் வைத்து அனந்தமூர்த்தி திருமணம் செய்திருந்தார். இதற்கிடையில், கடந்த ஆண்டு (2025) நவம்பர் மாதத்தில் ஐதராபாத்துக்கு வேலை விஷயமாக செல்வதாக அனந்தமூர்த்தியிடம் கூறிவிட்டு சென்ற சுதாராணி திரும்பி வரவில்லை.

இதற்கிடையே சுதாராணி பற்றி விசாரித்தபோது அனந்தமூர்த்திக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதாவது அவரது முதல் கணவர் உயிருடன் இருப்பதும், தற்போது ராமநகர் மாவட்டம் கனகபுராவை சேர்ந்த சிவகவுடா என்பவரை 3-வதாக திருமணம் செய்து கொண்டு பெங்களூருவில் வசித்து வருவதும் அனந்தமூர்த்திக்கு தெரியவந்தது. இதுபற்றி தொட்டபள்ளாப்புரா போலீசில் சுதாராணி மீது அனந்தமூர்த்தி புகார் அளித்துள்ளார்.

அதில், முதல் கணவர் இறந்துவிட்டதாக கூறி சுதாராணி என்னை 2-வது திருமணம் செய்தார். தற்போது அவர் உயிருடன் இருக்கிறார். மேலும் முதல் கணவருக்கு பிறந்த 2 குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு பணம் வேண்டும் என்று கூறி என்னிடம் ரூ.20 லட்சத்துக்கு மேல் வாங்கி மோசடி செய்ததுடன், 3-வதாக சிவகவுடாவை திருமணம் செய்துள்ளார்.

என்னை போன்று பலரை திருமணம் செய்து, பல லட்சம் ரூபாயை வாங்கி மோசடி செய்வதுதான் கல்யாண ராணியான சுதாராணியின் வேலை என்று அனந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அறிந்த முதல் கணவர் வீரேகவுடாவும் சுதாராணி மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். ஆனால் எனக்கு மோட்டார் சைக்கிள், கார் ஓட்ட தெரியவில்லை எனக்கூறி பிரிந்து சென்று விட்டார். என்னிடம் ரூ.10 லட்சத்துக்கும் மேல் வாங்கி மோசடி செய்துவிட்டதாக வீரேகவுடாவும் புகார் அளித்து உள்ளார்.

இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், அவரை கைது செய்யவும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News