இந்தியா

அஜித் பவார் மனைவி சுனேத்ரா துணை முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக தகவல்: சரத் பவார் சொல்வது என்ன?

Published On 2026-01-31 10:26 IST   |   Update On 2026-01-31 10:26:00 IST
  • அஜித் பவார் மனைவி சுனேத்ரா மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்.
  • சரத் பவார் குடும்பத்தினர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வார்களா? என்பது தெரியவில்லை.

அஜித் பவார் மனைவி சுனேத்ரா மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக பதவி ஏற்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், சரத் பவாரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சரத் பவார் அளித்த பதில் பின்வருமாறு:-

சுனேத்ரா துணை முதல்வரா பதவி ஏற்பது குறித்து எங்களுக்கு ஏதும் தெரியாது. நாங்கள் செய்திகள் மூலமாக அதை தெரிந்து கொண்டோம். எனக்கும் எந்த தகவலும் தெரியாது.

பிரபுல் பட்டேல், சுனித் தட்காரே போன்றோர் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எங்கள் குடும்பத்தினர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வது குறிதது இவர்கள் முடிவு செய்வார்கள்.

தற்போது அவரது விருப்பம் நிறைவேற வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அஜித் பவார், ஷஷிகாந்த் ஷிண்டே, ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் இரண்டு கட்சிகளையும் இணைப்பது குறித்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்தனர். இணைப்பு தேதி கூட முடிவு செய்யப்பட்டுவிட்டது. பிப்ரவரி 12-ந்தேதி இணைக்க முடிவு செய்யப்பட்டது. துரதிருஷ்டவசமாக அதற்கு முன்னதாக அஜித் பவார் காலமாகிவிட்டார்.

இவ்வாறு சரத் பவார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக,

மகாராஷ்டிர துணை முதல்-மந்திரியாக பதவி வகித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் கடந்த புதன்கிழமை புனே அருகே விமான விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து, அவரின் அரசியல் வாரிசு யார்? என்பதுதான் புதிய கேள்வியாக எழுந்தது. கட்சியின் பெரும்பான்மை தரப்பினர் கட்சியிலும், ஆட்சியிலும் அஜித் பவார் வகித்து வந்த பதவிகளை அவரது மனைவி சுனேத்ரா பவாருக்கு வழங்க விருப்பம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை நேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பிரபுல் படேல், மூத்த தலைவர்கள் சகன் புஜ்பால், சுனில் தட்கரே, தனஞ்செய் முண்டே ஆகியோர் சந்தித்தனர். அப்போது அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவாருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். சுமார் 1½ மணி நேரம் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவரும், மந்திரியுமான சகன் புஜ்பால் நேற்று இரவு கட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்கள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்தோம். அப்போது சுனேத்ரா பவாரை துணை முதல்-மந்திரியாக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். அவரை தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுத்து விட்டால், நாளையே கூட துணை முதல்-மந்திரி பதவி ஏற்பதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறினார்.

எங்களது கட்சி தலைவர்கள் பலர் அஜித் பவாரின் மனைவி துணை முதல்-மந்திரியாக வர வேண்டும் என விரும்புகிறார்கள். கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பதவி மற்றும் அதனை தொடர்ந்து துணை முதல்-மந்திரி பதவியை நிரப்புவதே தற்போது எங்களது முன்னுரிமை. அதன்படி தேசியவாத காங்கிரசின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் சட்டமன்ற கட்சி தலைவராக சுனேத்ரா பவாரின் பெயர் முன்மொழியப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன் மூலம் அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா பவார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்பது உறுதியாகி உள்ளது. அதுவும் இன்று மாலை 5 மணிக்கு அவர் பதவி ஏற்க இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:    

Similar News