வெனிசுலாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க முடியும் என சொல்லும் அமெரிக்கா: காரணம் என்ன?
- ரஷியாவிடம் இருந்து இந்தியா தினசரி 10 லட்சம் பேரலுக்கு மேல் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்கிறது.
- மார்ச் மாதத்திற்குள் அளவை பெரிய அளவில் இந்தியா குறைக்க இருப்பதாக தெரிகிறது.
உக்ரைன்- ரஷியா இடையிலான போர் காரணமாக ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கச்சா எண்ணெய் மூலம் கிடைக்கும் வருவாயை உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா பயன்படுத்துவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது.
ஆனால், இந்தியாவுக்கு மலிவான விலையில் கச்சா எண்ணெய் வழங்க ரஷியா முன்வந்தது. இதனால் அமெரிக்காவின் வலியுறுத்தலை இந்தியா நிராகரித்தது. இதன் காரணமாக ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக வரி விதித்தார். என்றபோதிலும் இந்தியா தொடர்ந்து கொள்முதல் செய்து வந்தது.
இதற்கிடையே வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகளுக்கும் 25 சதவீதம் வரி விதித்தார் டிரம்ப். ஒரு கட்டத்தில் ரஷியாவிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய் அளவை குறைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் நிலை உருவானது.
இதற்கிடையே வெனிசுலா அதிபர் மதுரோவை அமெரிக்கா சிறைப்பிடித்து, தனது நாட்டிற்கு கொண்டு சென்றுள்ளது. அங்குகள் எண்ணெய் வளங்களை கையாள அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அத்துடன், ரஷியாவிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய் அளவை குறைத்துக் கொண்டால் வெனிசுலாவை கச்சா எண்ணெயை இந்தியா வாங்க முடியும் என்று அமெரிக்கா சொல்லிக் கொண்டு வந்தது.
வெனிசுலா எண்ணெய்க்கும் வரி, ரஷியா எண்ணெய்க்கும் வரி என்பதை தவிர்க்க, இந்தியா படிப்படியாக ரஷியாவிடம் இருந்து கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய் அளவை வருங்காலத்தில் குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதனால், வெனிசுலாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து கொள்ள முடியும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வெனிசுலாவில் இருந்து இந்தியா எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான வரியை அமெரிக்கா குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், வெனிசுலா கச்சா எண்ணெய் அந்நாட்டின் PDVSA நிறுவனத்தால் விற்பனை செய்யப்படுமா அல்லது Vitol or Trafigura போன்ற வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களால் சந்தைப்படுத்தப்படுமா என்பது குறித்து விபரங்கள் வழங்கப்படவில்லை.
ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்து வருவதால், இந்தியா தனது கச்சா எண்ணெய் ஆதாரங்களைப் பல்வகைப்படுத்தி வருகிறது என மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வெனிசுலாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் என நேரடியாக தெரிவிக்கவில்லை.
ரஷியாவிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்யும் தினசரி கச்சா எண்ணெய் அளவை 10 லட்சம் பேரலுக்கு கீழ் கொண்டு வர தயாராகி வருகிறது. ஜனவரில் 1.2 மில்லியன் பேரலாக இருக்கும். இது பிப்ரவரியில் 1 மில்லியனாக இருக்கும். மார்ச் மாதம் 8 லட்சம் பேரலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.