இந்தியா

வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஓட்டு போட்டு விளையாடிய பாஜக உறுப்பினரின் மகன்- தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்

Published On 2024-05-09 13:56 GMT   |   Update On 2024-05-09 13:56 GMT
  • பாஜக பஞ்சாயத்து தலைவரான வினய் மெஹர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • இந்த வீடியோவுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை பதில் அளிக்கவில்லை.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பாராளுமன்ற தேர்தலின் பொது ஒரு வாக்குச்சாவடிக்கு பாஜக உள்ளாட்சி உறுப்பினர் ஒருவர் தனது மகனை அழைத்துச் சென்று வாக்களிக்க வைத்த வீடியோ இணையத்தில் வைரலானது.

அந்த வீடியோவில் இருப்பது பாஜகவின் பஞ்சாயத்து தலைவரான வினய் மெஹரின் மகன் என்றும், 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடந்த மே 7-ம் தேதி வாக்குச் சாவடிக்கு தனது தந்தையுடன் சென்று வாக்களிக்கும் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

அந்த வீடியோவில் தந்தையும் மகனும் வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜக சின்னமான தாமரை சின்னத்துக்கு வாக்களிப்பது பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, தேர்தல் ஆணையத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக பஞ்சாயத்து தலைவரான வினய் மெஹர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடியோவுக்கு தேர்தல் ஆணையம் இதுவரை பதில் அளிக்கவில்லை. தேர்தல் சமயத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது என்பதை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் கவுசலேந்திர விக்ரம் சிங் உத்தரவிட்டுள்ளார். அந்த வாக்குச்சாவடியின் தலைமை அதிகாரி சந்தீப் சைனி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

Tags:    

Similar News