இந்தியா

பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 14 வயது வங்கதேச சிறுமி- 200 ஆண்களால் பாலியல் வன்கொடுமை

Published On 2025-08-12 09:16 IST   |   Update On 2025-08-12 09:16:00 IST
  • சம்பவம் தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • மயக்க மருந்துகளை கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.

மகாராஷ்டிராவில் 14 வயது வங்கதேச சிறுமி 3 மாத காலத்திற்குள் 200 ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பால்கர் மாவட்டத்தில் வசாய் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த மாதம் 25-ந்தேதி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் இருந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி உள்பட 3 பேர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் வங்கதேசத்தில் இருந்து சிறுமிகளை இந்தியாவுக்கு நுழைய உதவி உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி போலீசாரிடம் கூறுகையில், பள்ளியில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்ததால் வீட்டை விட்டு வந்ததாகவும், அப்போது தனக்குத் தெரிந்த ஒரு பெண்மணியால் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்ததாகவும், பின்னர் பாலியல் தொழிலில் தன்னைத் தள்ளிவிட்டதாகவும் கூறினார். மேலும் மயக்க மருந்துகளை கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், சூடான கரண்டியால் முத்திரை குத்தியுள்ளதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். கடந்த 3 மாதத்தில் 200 ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பல்வேறு சித்ரவதைகள் செய்ததாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதனிடையே, முன்கூட்டியே பருவமடைவதைத் தூண்டுவதற்காக சிறுமிக்கு ஹார்மோன் ஊசிகள் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி நவி மும்பை, மகாராஷ்டிராவின் புனே, குஜராத், கர்நாடகா மற்றும் நாட்டின் பிற இடங்களுக்கு கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News