செய்திகள்

திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவனை விடுவிக்க முக ஸ்டாலின் முயற்சிக்கிறார்- எச்.ராஜா

Published On 2018-12-11 05:31 GMT   |   Update On 2018-12-11 05:31 GMT
விடுதலை சிறுத்தைகள் கட்சியை தி.மு.க. கூட்டணியில் இருந்து விடுவிப்பதற்கான முயற்சியை மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளதாக எச்.ராஜா தெரிவித்தார். #HRaja #Thirumavalavan #MKStalin
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பு சார்பில் நடக்க இருந்த தியான நிகழ்ச்சிக்கு கோர்ட்டு தடை விதித்திருப்பது ஏற்புடையது அல்ல. இந்து மத கோவில்களில் பக்தர்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பு வகுத்துள்ள சட்ட விதிமுறைகளின் படி நிர்வாகம் நடக்கிறதா? என்பதை மட்டும் தான் கோர்ட்டு கண்காணிக்க வேண்டும். அதனை விட்டு விட்டு புதிதாக சட்டம் இயற்றுவதற்கு கோர்ட்டுக்கு எந்த உரிமையையும் வழங்கப்படவில்லை.

அ.தி.மு.க.வையும், அ.ம.மு.க.வையும் இணைப்பதற்கு பா.ஜ.க. முயற்சி செய்வதாக கூறப்படும் கருத்து தவறானது. பா.ஜ.க. அதுபோன்று எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. சமீப காலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஒருவிதமான பதட்டத்தை சமூகத்தில் ஏற்படுத்தி வருகிறார்.


சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு திருமாவளவன் நடந்து கொள்ள வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சியை கூட்டணியில் இருந்து விடுவிப்பதற்கான முயற்சியை ஸ்டாலின் தொடங்கியுள்ளார்.

இதனால் திருமாவளவனுக்கு அச்சம் ஏற்பட்டதால், அந்த பழியை பா.ஜ.க. மீது சுமத்தி வருகிறார். பா.ஜ.க. வை பொறுத்தவரை வரும் லோக்சபா தேர்தலிலும் மோடி தான் மீண்டும் பிரதமர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. வேண்டுமென்றே பா.ஜ.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயன்று வருகின்றனர்.

தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் காலூன்றிய பின்புதான் ஜாதிய வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஆணவ படுகொலைகளும் அதிகரிக்க தொடங்கியது. கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும். திராவிட இயக்கங்களின் அஸ்தமனத்தில் தான் புதிய தமிழகம் உருவாகும்.

இவ்வாறு அவர் கூறினார். #HRaja #Thirumavalavan #MKStalin
Tags:    

Similar News