கல்யாண வெங்கடரமண சாமி கோயில் குடமுழுக்கில் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் பாசுரங்களை ஓத வேண்டும் - உயர் நீதிமன்றம்
- சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழை பயன்படுத்த வேண்டும்
- தமிழ் ஓதுவார்களை யாக குண்டத்திற்கு அருகே உட்கார வைக்க வேண்டும்
தமிழ்நாடு அரசு மற்றும் நீதிமன்றங்கள் கோயில் வழிபாடுகளில் தமிழைப் பயன்படுத்துவதை உறுதி செய்யப் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளன. இந்து சமய அறநிலையத்துறை மூலம் அன்னைத் தமிழில் அர்ச்சனைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2021-இல் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் முதன்முதலாகத் இத்திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது 47-க்கும் மேற்பட்ட முக்கிய பெரிய கோயில்களில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.
அதுபோல முறையான பயிற்சிப் பெற்ற யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்று நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும் 2008 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளில், ஆகம விதிகள் எங்கும் தமிழில் மந்திரங்கள் ஓதுவதைத் தடை செய்யவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.
இந்நிலையில் மீண்டும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது கரூர் கல்யாண வெங்கடரமண சாமி கோயில் குடமுழுக்கில் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் பாசுரங்களை ஓத வேண்டும்; தமிழ் ஓதுவார்களை யாக குண்டத்திற்கு அருகே உட்கார வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் உத்தரவு பின்பற்றப்படுகிறதா என குடமுழுக்கு முடிந்தபின் கோயில் செயல் அலுவலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.