தமிழ்நாடு செய்திகள்

திருப்பூரில் நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரியும் முகமூடி கொள்ளையர்கள்

Published On 2026-01-27 14:49 IST   |   Update On 2026-01-27 14:49:00 IST
  • உள்ளே சென்று பார்த்தபோது ஒவ்வொரு நிறுவனத்திலும் வைக்கப்பட்டிருந்த பணம் மட்டும் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.
  • போலீசார் சி.சி.டி.வி., காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் கல்லூரி சாலை அணைப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பின்னலாடை மற்றும் உப நிறுவனங்கள் என அடுத்தடுத்து 4 நிறுவனங்களின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.

வழக்கம் போல நிறுவனத்தில் பணிக்கு வந்த ஊழியர்கள் பனியன் நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் இதே போல அடுத்தடுத்த 3 நிறுவனங்களின் பூட்டுகள் உடைக்கப்பட்டு உள்ளே பொருட்கள் சிதறி கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ஒவ்வொரு நிறுவனத்திலும் வைக்கப்பட்டிருந்த பணம் மட்டும் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கையில் இரும்பு ராடு, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நள்ளிரவில் சுற்றித்திரிவதும் பின்னர் பூட்டுகளை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் 15 வேலம்பாளையம் போலீசார் சி.சி.டி.வி., காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் கையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரியும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே மிகப்பெரிய அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு முகமூடி கொள்ளை யர்களை கண்டுபிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News